வடக்கில் 372 பேருக்கு நிரந்த நியமனம்-
வட மாகாண சபைக்குட்பட திணைக்களங்களில் கடமையாற்றுவதற்காக 372 பேருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் வழங்கப்பட்டுள்ளன. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது. இதில் முகாமைத்துவ உதவியாளர்களாக 219 பேரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 107 பேரும் ஆசிரியர்களாக 26 பேரும் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 20 பேரும் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். இந்த நியமன கடிதங்கள் வழங்கப்பட்டவர்களுக்கு மூன்று வாரகால பயிற்சி வழங்கப்பட்ட பின்னர், 2014ஆம் ஆண்டு ஜனவரிமாதம் முதல் வட மாகாண திணைக்களங்களில் நிரந்த ஊழியர்களாக கடமையாற்றவுள்ளனர். இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜீ.எல் பீரிஸ் பதவி விலக வேண்டும்-மங்கள சமரவீர எம்.பி-
வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சரின் ஆபிரிக்க ராஜதந்திர கொள்கையானது, பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற ஆபிரிக்க கண்டத்தின் அரச தலைவர்களது எண்ணிக்கையில் புலப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது ஆபிரிக்க கொள்கையின் நிலைமையை அறிந்துக்கொள்ளக் கூடியதாக உள்ளது. அண்மைக்காலமாக வெளிவிவகாரதுறை அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், மேலைத்தேய நாடுகளின் தேவைப்பாடு தமக்கு அவசியம் இல்லை என்றும் ஆபிரிக்க நாடுகளுடன் எமது புதிய வெளிநாட்டுக் கொள்கை செயற்படுவதாக கூறியிருந்தார். ஆபிரிக்க கண்டத்தில் 19 நாடுகள் பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. எனினும் இலங்கை மாநாட்டில், வெறும் 7 நாடுகளே கலந்து கொண்டன. இதன் மூலம் அவரின் செயற்பாட்டின் தன்மை புரிகிறது என மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.