வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேச எவருக்கும் உரிமை கிடையாது-அமைச்சர் சுசில்-

imagesCA6FFD6Qஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன செய்துகொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி தற்காலிகமாகவே வடக்கு கிழக்கு பிராந்தியம் இணைக்கப்பட்டது. பின்னர், வடக்கு கிழக்கு இணைப்பு அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னர், அதுபற்றி பேச எவருக்கும் உரிமை கிடையாது இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் பீ.பீ.ஸிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது. இலங்கை தனி இறையாண்மை கொண்ட ஒரு நாடு, இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகள் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. இந்தியாவில் தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில், வாக்கு சேகரிக்கும் நோக்குடன் அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்களை இலங்கை பெரிய அளவில் கணக்கில் எடுக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரணைமடுக்குளத்தில் வரட்சி நிலைமை-

பருவமழை பொய்யாமை காரணமாக தற்போது இரணைமடுக் குளத்தினுடைய நீரின் அளவு குறைந்து காணப்படுகின்றது. கிளிநொச்சியிலுள்ள இந்த இரணைமடுக்குளம் வழமையாக நவம்பர் மாத காலப் பகுதியில் நீர் நிறைந்து வான் பாயும் நிலையில் காணப்படும். ஆனால் தற்போது நவம்பர் மாதம் முடிவடைந்த நிலையிலும் மழை பொய்யாமையின் காரணமாக இரணைமடு குளத்தினுடைய நீரின் அளவு முற்றாக வற்றிக் காணப்படுகின்றது. இவ்வருடம் இரணைமடு குளத்தில் போதுமானதளவு நீர் தேக்கி வைக்கப்படாமல் போனால் 2014ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையிலும் பாதிப்பு ஏற்படும் நிலைமை ஏற்படும்.

மாலைதீவு, பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகவேண்டுமென கோரிக்கை-

பொதுநலவாய நாடுகளி;ன் அமைப்பிலிருந்து மாலைத்தீவு விலகிக்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் மற்றும் தற்போதைய அரசின் அமைச்சர் அப்துல்லா யாமீன் ஆகியோர் இந்தக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பொதுநலவாய நாடுகள் அமைப்பு, ஏனைய நாடுகளின் உள்ளகப் பிரச்சினைகளில் தலையீடு செய்கிறது. அதேநேரம் அமைப்பின் நோக்கங்களில் இருந்து விலகிச்செல்வதாக குற்றம் சுமத்தியே இக்கோரிக்;கை முன்வைக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தோதலில் பொதுநலவாய அமைப்பு தமது தலையீட்டை மேற்கொண்டதாக அப்துல் கையூம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணியத் தடை-

கொழும்பு புறநகரான மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் நிகாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டே பல்கலைக்கழக வளாகத்தினுள் இந்த தடை விதிக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஏ.கே.டபிள்யூ. ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டு முஸ்லிம் மாணவிகள் கண்களை மட்டும் தெரியும்படியாக முகத்தை மூடி ஆடையணிய அனுமதி கோரினர். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்த பின்னர் பாதுகாப்பு விடயங்களை கருத்திற்கொண்டு அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் முஸ்லிம் பெண்கள் தலையை மறைத்து அணியும் ஹிஜாப் அணியவும் அபாயா அணியவும் எவ்வித தடையும் இல்லை. எனினும் முகத்தை மறைக்கும் விதமாக ஆடையணிவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஸ்ய பிரஜை கைது-

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஸ்ய நாட்டுப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றுகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க அதிவேக வீதியின் 18ம் கட்டை நுழைவாயிலில் மோட்டார் சைக்கிளில் பயணித்து 6ம் கிலோ மீற்றர் பகுதியில் குறித்த ரஸ்ய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, தெற்கு அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் வேனுடன் மோதுண்டு படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு-கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, டிரக்டர் மற்றும் சைக்கிள் என்பன பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி செல்பவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

விடுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு தகுந்த காரணங்கள் எதுவுமின்றி நீண்டகால விடுமுறை வழக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இன்றுகாலை 10.30மணியளவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்காக அனைத்து பல்கலைகழகங்களுக்கும் 9ம் திகதி தொடக்கம் 17ம் திகதிவரை விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால் யாழ். பல்கலைக்கழகத்திற்கு மட்டும் டிசம்பர் 2ம் திகதிவரை விடுமுறை விடப்பட்டிருந்தது. எதற்காக எமக்கு மட்டும் இந்த நீண்ட விடுமுறை விடப்பட்டது? மாணவர்களுக்கு பரீட்சை நெருங்குவதாலும் பல்கலைக்கழகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவுமே இந்த விடுமுறை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது. அரையாண்டு பருவத்திற்குரிய சகல பாடவிதானங்களும் பூர்த்தியாக்கப்பட்ட பின்னரே சில நாட்கள் பரீட்சை விடுமுறை விடப்படும். a(12)uni

ஆனால் எந்த பாடவிதானங்களும் பூர்த்தியாக்கப்படாமலும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் எனும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. உண்மையில் இந்த நீண்ட விடுமுறை எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும். தன் இனம் சார்ந்து யாருக்காவது அஞ்சலி செலுத்துவது அவ் இனத்தின் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை மறுப்பதை விட கேவலமான அநாகரிகமான செயல் இவ்வுலகில் வேறெதுவும் இல்லை. இந்த நீண்ட விடுமுறையானது ஏனைய பல்கலைக்கழகத்திற்கும் விடப்பட்டு இருந்தால் ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால் எமக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது எம்மை அடக்குமுறைக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கும் செயலாகவே இதனை நாம் பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.