எதேச்சதிகார போக்குகளை கைவிட்டு இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் 

imagesCAD6EXE7வடமாகாண சபை செயலாளர்கள் தமது எதேச்சதிகாரமான போக்குகளை கைவிட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும். இல்லையெனில் தமது பதவிகளை இராஜினமா செய்து விட்டு புதியவர்களை நியமிக்க வழிவிட  வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது-
வடமாகாண சபையினை மக்கள் பிரதிநிதிகளான நாம் பொறுப்பேற்க முன்னர் வடமாகாண சபையின் அதிகாரிகள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு ஆளுநருடைய விருப்பு வெறுப்புகளையும் மத்திய அரசினுடைய அமைச்சர்களின் விருப்பு வெறுப்புகளையும் திருப்திப்படுத்தும் வேலைத்திட்டங்களையும் நிறைவேற்றி வந்த செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் திணைக்கள தலைவர்கள் பலருக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை அமைச்சர்களுடனும் உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்ற முடியாமல் இருக்கின்றது. இந்த நிலைமை ஏன் என்று புரியவில்லை. வடமாகாண மக்கள் கடந்த மூன்று தசாப்பதங்களாக நிலவிவந்த யுத்தத்தின் பாதிப்புகளை நேரடியாக அனுபவித்தவர்கள். அந்த மக்கள் வடமாகாண சபையை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளித்தது போது பல எதிர்பார்ப்புகளையும் மக்கள் பிரதிநிதிகளிடம் சேர்த்தே கையளித்தனர். ஆனால் இன்று மக்கள் பிரதிநிதிகள் மாகாண சபைக்கு ஊடாக பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்வதற்கு அதிகாரிகள் பலவிதமான தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறான அதிகாரிகள் கடந்த காலங்களில் எவ்வாறு பொது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்திருந்தார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது. சில அதிகாரிகள் நாங்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர்கள். ஆளுனரால் நியமிக்கப்பட்டவர்கள் மத்திய அரசினுடைய அமைச்சர்களது அனுசரணை எமக்கிருக்கிறது. வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் எம்மை ஒன்றும் செய்து விட முடியாது என்ற தோரணையில் செயலாற்றி வருகின்றார்கள்.
இவர்கள் நிச்சயமாக என்றோ ஒருநாள் தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்கள். மக்களுக்கான சேவையை சரியான முறையில் மக்களிடம் முன்னெடுத்து செல்ல முடியாத இவர்கள் உடனடியாக பதவிகளை இராஜினமா செய்து விட்டு மக்கள் சேவையை முன்னெடுக்கக் கூடிய அதிகாரிகளை நியமிக்க வழிவிடவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.