யுத்த இழப்புகள் தொடர்பான மதிப்பீட்டுக்கு கமலேஸ் சர்மா வரவேற்பு-

யுத்தத்தின்போது, இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து இழப்பு தொடர்பாக மதிப்பீடு செய்ய அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்பதாக பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இதன்மூலம் நல்லிணக்க ஆணைக்குழுவால் எதிர்பார்க்கப்படும், யுத்தம் தொடர்பான மீளாய்வை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, யுத்தத்தின்போது உயிரிழந்த, காணாமல் போன, காயமடைந்த மற்றும் சொத்து இழப்பு தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதேவேளை கடந்த காலங்களில் இடம்பெற்றவை தொடர்பில் உண்மை வெளிவரும்போதே இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படும் என கமலேஸ் சர்மா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் போர்க்கால இழப்புக்கள் குறித்த கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் அது பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்றும் கமலேஸ் சர்மா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மீசாலை மத்தியக் கல்லூரிமீது தாக்குதல்-

யாழ். மீசாலை மத்திய கல்லூரியின் கட்டடங்கள் அடையாளங் காணப்படாத சிலரால் தாக்கப்பட்டு, சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.30அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கல்லூரியின் பின்வழியாக நுழைந்த குழுவொன்று, இரவுநேர காவலாளியை தாக்கியதுடன், அதிபரின் அலுவலகத்திற்கு சேதம் விளைவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த காவலாளியான சங்கரப்பிள்ளை லோகநாதன் என்ற குடும்பஸ்தர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேற்படி குழு பாடசாலை அலுவலகத்தில் இருந்த 10ஆயிரம் ரூபாவையும் கொள்ளையடித்துள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த கல்லூரியின் அதிபர் அ.அம்பலவாணர், இச் சம்பவம் திருட்டு என நான் கருதவில்லை. பாடசாலையின் எழுச்சியையும், எனது நற்பெயரையும் கெடுக்கவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் சேவை-

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி மூலம் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி தெரிந்த உத்தியோகஸ்தர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி மூலம் சேவைகள் வழங்கப்படுவதாக தொலைபேசியில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.