ஐ.நா விசேட பிரதிநிதி சொலோக்கா பெயானி வடக்கு முதலமைச்சர் சந்திப்பு-

un_jaffna_002இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதி சொலோக்கா பெயானி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின்போது அவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், வடக்கு ஆளுனர் ஜீ.ஏ சந்திரசிறி மற்றும் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தனது இலங்கை விஜயத்தின்போது இடம்பெயர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தகவல்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக சொலோக்கா பெயானி குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களையும் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களையும் அவர் நேரடியாக சந்திக்கவுள்ளார்.

beyani_north_001beyani_north_003தமது பயணத்தின்போது தான் கண்டவை குறித்து முதற்கட்டமாக ஒரு அறிக்கையை அவர் வெளியிடவுள்ளார். அத்துடன் இந்த விஜயம் குறித்த முழுமையான அறிக்கை அடுத்த வருடம் ஜூனில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் குழுவில் சமர்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருக்கும் அவர், அரச தரப்பினர், சிவில் சமூகத்தினர் மற்றும் இலங்கையிலுள்ள ஐ.நாவின் உயரதிகாரிகள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். சலோக்கா பெயானியுடனான சந்திப்பு குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வடமாகாணத்தில் இராணுவம் உள்ளதால்தான் மற்றைய பிரச்சனைகள் ஏற்படுகின்றது என ஐ.நா பிரதிநிதியிடம் நான் எடுத்துக் கூறினேன். வடக்கில் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டு இருக்கின்றனர். இராணுவம் வடமாகாணத்தில் இருப்பதனால் தான் மற்றையை பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இதனால் வடக்கில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும் என அவரிடம் கூறினேன். அதற்கு அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் இராணுவம் இங்கே நிலை கொண்டிருக்கும் என கேட்டார். அதற்கு நான் சொன்னேன் இராணுவம் இன்னமும் 100 வருடங்களுக்கு இங்கு நிலைகொண்டு இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. அதன் உள் அர்த்தம் தெற்கு மக்களை இராணுவத்துடன் சேர்த்து இங்கு குடியேற்றுவதேயாகும். கிழக்கு மாகாணத்திலும் இதுதான் நடந்தது. அது தற்போது வடக்கிலும் நடைபெறவுள்ளது. இதனை எம்மால் தடுக்க முடியாது. இதனை உலக நாடுகளே தடுத்து நிறுத்தி எமக்கு விடிவை தரவேண்டும். மக்களின் வாழ்விடங்களை பிடித்து வைத்துக்கொண்டு விவசாயம், மீன்பிடி, கடை என இராணுவம் தொழில் செய்கின்றது. இங்குள்ள மக்கள் வறிய நிலையில் வாழ்கின்றனர். தொழில் வாய்ப்புக்கள் இன்றி கடன் சுமையுடன் வாழ்கின்றனர். அவ் மக்களின் தொழில்களை இராணுவம் செய்கின்றது என அவருக்கு விரிவாக எடுத்து கூறினேன் என தெரிவித்துள்ளார்.