அமெரிக்க உதவியுடன் பளை பிரதேச வைத்தியசாலை திறப்பு–

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பளை பிரதேச மருத்துவமனையை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் செரி கார்லின் வடமாகாண சபை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் பி. சத்தியலிங்கனுடன் இணைந்து நேற்றுத் திறந்துவைத்துள்ளார். 525,000 அமெரிக்க டொலர்கள் (ஏறத்தாழ 69 மில்லியன் இலங்கை ரூபா) மொத்த செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு 24 நோயாளர் கட்டில்கள் (பிரசவ அறையுடன் கூடிய மகப்பேற்று வாட் மற்றும் குழந்தைகளுக்கான வாட் ஆகியவற்றுக்கு தலா 12 கட்டில்கள்) மற்றும் மருந்தகம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. வெளிநோயாளர் சேவையினூடாக நோய்த்தடுப்பு சுகாதார சேவையையும் இந்த மருத்துவமனை வழங்கும். எளிதாக நாடக் கூடியதும் உயர்தரமான சுகாதாரநலச் சேவையினூடாக இந்த புதிய மருத்துவமனையானது சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த சமூகங்களிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். மாகாணத்திலுள்ள ஏனைய மருத்துவ வளநிலையங்கள் மீள் நிர்மாணிக்கப்படும், புனரமைக்கப்பட்டு சூழவுள்ள பகுதிகளிலுள்ள மருத்துவ வள நிலையங்களின்மீது பாரப்படுத்தப்பட்டுள்ள சுமை நீக்கப்படும் வரையிலும் பளையில் முதன்மையான சுகாதாரநல வள மையமாக இந்த பிரதேச மருத்துவமனை விளங்கும். இங்குள்ள மருத்துவ ஊழியர்கள் மிகவும் துரிதகரமாக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடுமாக இருக்கும் என்பதுடன் குறைந்த செலவில் முழுக்குடும்பத்திற்கும் தேவையான நோய்த்தடுப்பு சேவையை வழங்குவதுடன் தேவைப்படுமிடத்து அவரச மருத்துவ அவதானிப்பையும் வழங்கக் கூடியதாக இருக்கும்´ என ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய செரி கார்லின் தெரிவித்துள்ளார்.