இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் அரசுடன் பேசுவேன்-ஐ.நா பிரதிநிதி பெயானி-

Peyani (2)உள்நாட்டினுள் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடுவேன் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறப்புப் பிரதிநிதி சலோகா பெயானி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நேற்றுமாலை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் கூறியுள்ளார். இச்சந்திப்பு பற்றி சஜீவன் மேலும் கூறுகையில், வலி வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு நலன்புரி நிலையங்களில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களுக்குச் சொந்தமாக 6,500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் படைத்தரப்பால் அண்மையில் சுவீகரிக்கப்பட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களை பிறிதொரு இடத்தில் குடியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அவரிடம் சுட்டிக்காட்டினோம். அத்துடன் தொடர்ச்சியாக உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அங்குள்ள தனியாருக்குச் சொந்தமாக வீடுகள், ஆலயங்கள் மற்றும் பாடசாலைகள் கூட இடிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதனையும் அவருக்கு எடுத்துக் கூறினோம். இந்நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் ஏதாவது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? அதன் நிலைப்பாடுகள் எந்தளவில் இருக்கின்றது? என்று அவர் எங்களிடம் கேள்வியெழுப்பினார். நீதிமன்றங்களில் இது தொடர்பிலான வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன், சில வழக்குகளில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு காணிகள் விடுவிக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் சில வழக்குகள் நீண்டகாலம் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்தோம். மேலும், தற்போது மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்கு திட்டமிட்ட வகையில் சில பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பெயானிக்குத் தெரிவித்தோம் என கூறினார்.