பிரித்தானிய காலக்கெடு தொடர்ந்தும் அமுல்-
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர், மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் இதனை தெரிவித்துள்ளார்;. இதனை இலங்கை அரசாங்கம் செயற்படுத்த தவறினால் ஜெனீவா மாநாடு கூடும்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை பிரித்தானிய வலியுறுத்தும் எனவும் அவர் குறி;ப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பிக்கையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா கோரியிருந்தது. இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் பிரித்தானியாவின் உறுதியான நிலைப்பாட்டை பொதுநலவாய மாநாட்டின்போது வெளிப்படுத்தினார் எனவும் வில்லியம் ஹேக் கூறியுள்ளார்.
அரச அதிகாரிகள் தமிழ் கற்க பௌத்த அமைப்பு எதிர்ப்பு-
இலங்கையில் அரச அதிகாரிகள் தமிழ்மொழியை கற்பதை கட்டாயப்படுத்த, அரசு எடுத்துள்ள முடிவை இரத்துச் செய்யுமாறு கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா கோரியுள்ளது. தமது நாடு ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை இலங்கை அரசு மறக்கக் கூடாது என அந்த அமைப்பின் செயலர் கலபொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார். இலங்கையில் பெரும்பாலானவர்கள் சிங்கள மொழியை பயன்படுத்துவதால் அவர்களை தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அரசு கூற முடியாது. அரசு தனது தீர்மானத்தை ரத்து செய்துவிட்டு, நாட்டில் அனைவரும் சிங்கள மொழியை கற்றுக் கொள்வதை கட்டாயமாக்க வேண்டும். இனங்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் தமிழ் மொழியை கற்றுக் கொள்வது அவசியம் என அரசு கூறுவதை ஏற்க முடியாது என கலபொட அத்தே ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.