சர்வதேச விசாரணை வந்தால் ஆதாரங்கள் சமர்பிப்போம் – ஏசிஎப்-

action hungerஇலங்கையில் பிரெஞ்சு தொண்டு நிறுவனமான ஏசிஎப் நிறுவனத்தின் உள்ளுர் ஊழியர்கள் 17 பேர் திருகோணமலை மூதூரியல் வைத்து 2006ல் படுகொலை செய்யப்பட்டது குறித்து, இலங்கை படைகள்மீது குற்றம் சுமத்தியிருக்கும் அந்நிறுவனம், இந்த விவகாரத்தில் தமக்குக் கிடைத்த சாட்சியங்களை, சர்வதேச விசாரணை நடந்தால், கையளிக்கத் தயாராக இருப்பதாகத் குறிப்பிட்டுள்ளது. ஏசிப் நிறுவனத்தின் உள்ளுர் ஊழியர்கள் மூதூரில் 2006 ஆகஸ்டு 4ம் திகதி படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் முழங்காலிடப்பட்டு விசாரணையின்றி சுடப்பட்டுள்ளனர். இவர்களைச் சுட்டவர்கள் இலங்கைப் படையினர்தான் என்பதற்கு தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த அறிக்கை பற்றி பிபிசிக்கு கருத்து தெரிவித்த, இந்த நிறுவனத்தில் மனிதநேய செயல்பாட்டு ஆலோசகர், பாலின் செட்குவிட்டி, இந்த விஷயத்தில் தங்களுக்கு கிடைத்த சாட்சியங்கள் மிகவும் எளிமையானவை, நேரானவை, இவைகளை முழுமையாக வெளியிட்டால் அது யார் இந்த சாட்சியங்களை தந்தார்கள் என்ற அடையாளத்தைக் காட்டிக் கொடுத்துவிடும், அது அவர்களுக்கு பாதுகாப்புத் தராது என்று அஞ்சுகிறோம். எனவேதான் தெளிவாக மேற்கோள்காட்டத் தேவையில்லாத எந்த ஒரு வாக்குமூலத்தையும் நாங்கள் நேரடியாக மேற்கோள் காட்டவில்லை. மாறாக, ஏற்கனவே பொதுவெளியில் இருக்கும் வாக்குமூலங்களை, இந்த வாக்குமூலங்களை வைத்து சரி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது யார் எங்களுக்கு தகவலைத் தந்தவர்கள் என்பதை வெளியிடாமல் வந்த தகவலை சரிபார்த்துக்கொள்ள கிடைத்திருக்கும் ஒருவழி என்றார்.

காணாமற்போனோரில் 87 பேர் இறந்தோராகப் பதிவு-

missingகாணாமற்போனவர்களை இறந்தவர்களாகக் கருதிப் பதிவு செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டு இரு வருடங்கள் கடந்துள்ள போதும் 87பேரே இதுவரை வடக்கில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்தச் சட்டம் மூலமான பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் 10ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அது மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனவர்களை இறந்தவர்களாகக் கருதி பதிவு செய்யும் விசேட நடவடிக்கை 2010ஆம் ஆண்டு 19ஆம் இலக்க சட்டத்தினூடாகக் கொண்டுவரப்பட்டது. இந்த விசேட சட்டம் எதிர்வரும் 10ஆம் திகதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், தற்போது அதன் காலம் மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை குறித்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், வடக்கில் இதுவரை 87பேரே காணாமற் போனோரை இறந்தவர்களாகக் கருதி பதிவு செய்துள்ளனர். பெரும்பாலானவர்கள் தமது உறவுகள் திரும்பி வருவார்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதால் இந்தப் பதிவு நடவடிக்கையில் நாட்டம் செலுத்தவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து சாரதியின்றி ரயில் பயணம்-

No Driver Trainரயில் சாரதி இல்லாமல் ரயில் இன்ஜின் ஒன்று பயணித்த சம்பவமொன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பு-9, தெமட்டகொடையில் ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்திலிருந்து இன்று அதிகாலை 1.45 மணியளவில் ரயில் சாரதி இல்லாது, மேற்படி ரயில் இன்ஜின் தானாகவே இயங்கி பயணித்துள்ளது. இவ்வாறு பயணித்த ரயில் இன்ஜின் கல்கிஸைக்கும் இரத்மலானைக்கும் இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ரயில் இன்ஜின் பயணித்துள்ள நிலையில் விபத்துக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த ரயில் இன்ஜின் தற்போது இரத்மலானை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த ரயிலின் இன்ஜின் சாரதியும், அவரது உதவியாளரும் உடனே பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவென ரயில்வே திணைக்களத்தால் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக 111 முறைப்பாடுகள்-

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக இவ்வருடம் 111 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இவ்வருடம் 111 முறைப்பாடுகளை பெற்றதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இவற்றில் 9 முறைப்பாடுகள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரானவை என ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெந்தி கூறியுள்ளார். இந்த ஆணைக்குழு இவற்றை ஆராய்ந்து வருகிறது. விசாரனையின்பின் கைது செய்யப்பட்டவர்களில் 99 சத வீதத்தினர் அரசசேவை அதிகாரிகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான்கு துறைமுகங்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல்-

download (2)இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பவற்றின் துறைமுகங்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலாகியுள்ளன என நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் கேள்விக்கு பதிலளித்த துறைமுகங்கள் செயற்திட்ட அமைச்சர் றோஹித்த அபேகுணவர்த்தன துறைமுகங்கள் தொடர்பாக பல விவரங்களை வெளிப்படுத்தினார். இந்திய உப கண்டத்திலிருந்து வரும் கப்பல் மாற்றியேற்றும் சரக்குகளை ஓமானிலுள்ள சலலா துறைமுகம் கவர்ந்;து வருகின்றது. இந்திய கிழக்குக்கரை சரக்கு பங்களாதேஷ் மற்றும் மியன்மார் சரக்குகளை கவரும் சிங்கப்பூர் துறைமுகமும் இலங்கைக்கு சவாலாக உள்ளது. ஓமான் துறைமுகங்களான ஜெபெல் அலி ஹோபக்கன் துறைமுகங்களும் இலங்கைக்கு போட்டியாக உள்ளன. இந்தியாவிலுள்ள கொச்சின், சென்னை, ஜவஹர்லால் நேரு துறைமுகங்கள் மேலும் மேலும் கப்பல் நிறுவனங்களை ஈர்த்து வருகின்றன. இந்த போட்டிகளை சமாளிக்க இலங்கை துறைமுகங்களையும் அது தொடர்பான உட்கட்டமைப்புகளையும் விஸ்தரித்து வருகின்றது. இதனால் ஆகவும் பெரிய கப்பல்களையும் இங்கு கொண்டுவர முடியும். இறங்குதுறைகளை நடாத்துபவர்களுடனும் கப்பல் கம்பனிகளுடனும் பங்குதாரர்களாகி வருகிறோம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் வயோதிப பெண்மீது துப்பாக்கிச்சூடு-

வவுனியா – மன்னார் பிரதான வீதி யாழ். ஐஸ்கிறீம் வீதி பகுதி வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நேற்று இரவு 8.40 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 60 வயதுடைய சற்குணசேயோன் பாலசுந்தரி என்ற பெண் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்;ளனர். வீட்டில் தனிமையில் இருந்த இப் பெண்மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் இதன் காரணமாக இப்பெண் கால் பகுதியில் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸார் இதுபற்றிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி விபத்தில் 11பேர் காயம்-

கிளிநொச்சி இரணைமடு சந்தியில் நேற்றையதினம் இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 11பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு 10.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்து மரமொன்றில் மோதியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 11 பேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த பஸ்ஸின் சாரதி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றிய மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வேக எல்லையை மீறும் சாரதிகளுக்கு புள்ளிகள் இடும் முறைமை அறிமுகம்-

vehicle speed.jpg 022வேக எல்லையை மீறிய குற்றத்திற்காக சாரதி அனுமதிப் பத்திரத்தில் புள்ளிகள் இடும் முறையொன்றை அறிமுகப்படுத்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டத்தின்கீழ் அதிவேக மார்க்கங்களில் இந்த நடைமுறையை முன்னெடுக்கவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எஸ்.எச். ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து பொலிஸாருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாரதி அனுமதிப் பத்திரத்தில் புள்ளிகள் இடும் நடைமுறை தற்போது இரண்டு தவறுகளுக்காக மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது. மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் வாகன விபத்துக்களை ஏற்படுத்தல் ஆகிய தவறுகளுக்காகவே இவ்வாறு புள்ளிகள் இடப்படுகின்றன. அதன் பிரகாரம் 14 ஆயிரம் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களில் புள்ளியிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து எஸ்.எச். ஹரிச்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.