தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா காலமானார்-

131205222859-breaking-only-mandela-with-c1-mainதென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95ஆவது வயதில் நேற்றுக் காலமானார். இத்தகவலை தென்னாபிரிக்க அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நெல்சன் மண்டேலா கடந்த சில மாதங்களாக கடும் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் அவரது இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய உடல்நிலை பாதிப்படைந்து வருவதாக நேற்று முன்தினம் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு அந்நாட்டு நேரப்படி 8.05 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் சூழ்ந்திருக்கையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. 1918ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் திகதி பிறந்த நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியிரசுத் தலைவராவார். தென்னாபிரிக்காவில் புரட்சியை ஏற்படுத்திய பெருமையுடன் நிறவெறிக்கு எதிராக போராடியமையால் உலகம் போற்றும் தலைவராகவும் அவர் திகழ்ந்தார். மண்டேலாவின் 27ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகின்றார். உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு ‘நேரு சமாதான விருது’ வழங்கியது. கணவர் நெல்சன் மண்டேலாவின் சார்பில் வின்னி மண்டேலா டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றிருந்தார். அத்துடன் 1990-ல் இந்தியாவின் ‘பாரத ரத்னா’ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும், அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதும் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.

தர்மபுரம் பாடசாலை அபிவிருத்திக்கு நிதியுதவி-

கிளிநொச்சி தர்மபுரம் மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திக்கென ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) கிளிநொச்சி கிளையின் அனுசரணையில் சிறுதொகை நிதியுதவிக்கான காசோலை இன்றுமுற்பகல் 9.30அளவில் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்களால் இந்த சிறுதொகை நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

கட்சியிலிருந்து கமலேந்திரன் நீக்கம்:-ஈ.பி.டி.பி-

kamalendranஈ.பி.டி.பியின் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கே.கமலேந்திரன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் கொலை விவகாரம் தொடர்பில் கமலேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். டானியல் றெக்ஷியனின் கொலைக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரன், தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்க வேண்டும் என கேட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று கூறியிருந்தார்.

பிலிப்பைன்ஸில் சூறாவளி; உதவிப் பணியில் இலங்கை மருத்துவக் குழு-

ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை முன்னெடுப்பதற்காக இலங்கை மருத்துவ குழுவொன்று பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பயணமாகவுள்ளது. மருத்துவர்கள் குழாமில், தாதியர்கள் மற்றும் மேலதிக வைத்திய அதிகாரிகளும் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த குழுவில் 5 வைத்திய அதிகாரிகள் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பிலிப்பைன்ஸில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இக்குழுவினர் சுகாதார சேவைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை, வெள்ளப் பாதிப்பு-

floodகிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள நீர் மேலோங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் கூடுதலான மழைவீழ்ச்சி இதுவரை பதிவாகியுள்ளது. கல்லோயோ குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் பிரதான வீதியிலுள்ள கிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை திருகோணமலை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.