இலங்கை தொடர்பில் பிரித்தானியா ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடல்-

ukஇலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில், பிரித்தானிய ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுகோ ஸ்வைர் இதனை நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரத்தானியா மீண்டும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான வினைத்திறனான செயற்பாடுகளை பிரித்தானியா முன்னெடுக்குமென அவர் கூறியுள்ளார். அத்துடன் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் மற்றும் ஏனைய சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் வெளிவிவகார செயலர் டக்ளஸ் எலக்ஸாண்டர், பிரித்தானிய புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது இலங்கையில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்துவது தொடர்பில் பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி விரைவில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பிரித்தானிய தொழிற் கட்சி இலங்கைக்கு அழுத்தம்-

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய பிரதான எதிர்க்கட்சியான தொழிற் கட்சியும் தெரிவித்துள்ளது. பிரித்தானியா தமிழர் பேரவை உறுப்பினர்கள் சந்தித்து பேசும்போது பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் எட் மிலிபெண்ட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு மார்ச் 14ஆம் திகதிவரை உலக நாடுகள் பொறுமை காக்கக்கூடாது என தமிழர் பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் தமிழ் மக்கள்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணைக்கான சந்தர்ப்பம் ஏற்படும்வரை தொடர்ந்து தமது கட்சி குரல் கொடுக்கும் என்றும் எட் மிலிபெண்ட் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மெக்சிகோவில் இலங்கையர்கள் ஐவர் கைது-

மெக்சிகோவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரு சிறுவர்களும் பெண் ஒருவரும் அடங்குகின்றனர். குறித்த ஹோட்டலில் இவர்கள் ஐவரும் கடந்த 4 நாட்களாக தங்கியிருந்துள்ளனர். 34 வயதான சந்திரிகா நிரோஷன், 31 வயதான தூரந்திங்க நிரோஷன், மற்றும் 27வயதான சிவபாதம் மற்றும் 10, 5 வயதான சிறுவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு ஆவணங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது தம்மிடம் அவ்வாறான ஆவணங்கள் எதுவும் இல்லை என இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

அடையாள அட்டை கிடைக்காத மாணவர்களுக்கு உதவி-

இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆட்பதிவு திணைக்களம் இன்றும் திறக்கப்பட்டிருந்தது. இதுவரையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் இன்று அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் இதுவரையில் பெருமளவான பரீட்சை விண்ணப்பதாரிகளது அடையாள அட்டை பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பல்வேறு பிரச்சினைகள் உள்ள 1400 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. இந்த அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களும் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என சரத் குமார தெரிவித்துள்ளார் 2013ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இப்பரீட்சைக்கு 5லட்சத்து 78ஆயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம் புஸ்பகுமார கூறியுள்ளார்.

யாழில் துப்பாக்கி ரவைகள் மீட்பு-

யாழ். சுன்னாகம் ஜயனார் சனசமூக நிலைய வாசிகசாலை கட்டிடத்திற்குள் இருந்து 35 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. வாசிகசாலையினை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, இந்த துப்பாக்கி ரவைகள் இருப்பது அவதானிக்கப்பட்டு, சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் ரவைகளை மீட்டுச் சென்றனர். இது ஏற்கனவே அங்கு இருந்தவையா, யாராவது கொண்டு வந்த அங்கு போட்டார்களாக என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் பிரதான பாலத்தில் விபத்து-

மன்னார் தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னாரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பார ஊர்தி ஒன்று நேற்றையதினம் மன்னார் பிரதான பாலப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பார ஊர்தி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாதையிலிருந்து விலகி பள்ளத்திற்கு சென்றுள்ளது. எனினும் பாதையின் ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த தூண்களில் இடிபட்டு பாதையில் இருந்த முற்றும் முழுவதுமாக விலகாமல் பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தின்போது இந்த வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்-

யாழ். பருத்தித்துறையில் அழுகிய நிலையில் ஆணின் சடலமொன்று நேற்றுப்பகல் கரையொதுங்கியுள்ளது. அழுகிய நிலையில் காணப்படுவதால் சடலத்தை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிடுகின்றது. சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அதனை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குடிப்பரம்பலை மாற்ற திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றம்-

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்து அக்காணிகளில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்களைக் குடியேற்றி இம்மாவட்டத்தின் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றது என அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் கொக்கிளாய் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், மணலாறு (வெலிஓயா) ஆகிய இடங்களுக்குச் சென்று அப்பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பிலேயே அம்மக்கள் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளனர். சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் குடிப்பரம்பலில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் முல்லைத்தீவு இன்னும் சில ஆண்டுகளில் சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமாக மாற்றமடையக்கூடிய அபாயம் தோன்றியுள்ளது. இதேவேளை கொக்கிளாய் பிரதேசத்தில் குறிப்பிட்ட சில தென்னிலங்கை மீனவர்களுக்கு மட்டும் தொழில்செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு அதிகளவான சிங்கள மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி தொழில்செய்து வருவதால் முல்லைத்தீவின் கடல்வளம் அழிவடையும்நிலை காணப்படுகின்றது. எனவே இதனை உடன் தடுத்து நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் கோரியுள்ளனர்.