Header image alt text

தெரிவுக்குழுவுக்கு யோசனைகளை முன் வைப்பதில் அர்த்தமில்லை-சுரேஸ் எம்.பி.

sureshகாலத்தை கடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள அர்த்தமற்ற நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு யோசனைகளை முன்வைப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எனவே நாம் அரசாங்கத்துடன் முக்கிய சில விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும். அதன் பின்னரே நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்வதா அல்லது யோசனைகளை முன்வைப்பதா என்ற முடிவுக்கு வரமுடியும் என தமிழ்த் கூட்டமைப்பின் பேச்சாளரும் நடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணும் முகமாக அரசாங்கம் பல்வேறு குழுக்களை அமைத்து பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி அறிக்கைகளை தயாரித்து கடைசியில் அவற்றையெல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டது. இவ்வாறான நிலையில் நாம் எப்படி நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நம்புவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டும் முகமாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ் கூட்டமைப்பு கலந்து கொள்ளாவிடினும் யோசனைகளையாவது முன்வைக்கும் என நம்புவதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார். அது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்-

pattathari niyamanam (2)pattathari niyamanam (1)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாகக் கடமையாற்றி வந்த 1179 பட்டதாரிகளுக்கு நேற்றுக்காலை மட்டக்களப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவத்திற்கான கருத்திட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள டேபா மண்டபத்தல் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். பட்டதாரிப் பயிலுனர்களாக கடந்த வருடம் 6ஆம் மாதத்தில் இணைக்கப்பட்ட 2000இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளில் முதல் தொகுதியினருக்கே இந்த நிரந்ததர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ளவர்களுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

மனித உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் பேரணி-

human rights Vavuniya  (1) human rights Vavuniya  (2) human rights Vavuniya  (3)மனித உரிமைகள் தினம் எதிர்வரும் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் நேற்று வவுனியாவில் மனித உரிமைகளை வலியுறுத்தி பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. கூமாங்குளம் இளைஞர் கழகம், சம்வித்த யுத் இளைஞர் கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ் ஊர்வலம் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து இளைஞர் சேவைகள் மன்றத்தை அடைந்தது. இளைஞர் கழகங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள், பாடசாலை மாணவர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்றிருந்த இவ் ஊர்வலத்தில் மனித உரிமைகளை வலியுறுத்துகின்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

பிரித்தானிய நாடாளுமன்றில் இலங்கை அகதிகள் குறித்து உரை-

british visaபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோருவோரில் பெரும்பாலானவர்கள் மாணவர்களாவோ அல்லது சுற்றுலாப் பயணிகளாகவோ பிரித்தானியாவுக்குள் பிரவேசித்தவர்கள் என பிரித்தானியாவின் உள்நாட்டு அமைச்சர் பரோன் டெய்லர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த அவர், கடந்த ஐந்து வருடங்களில் பிரித்தானியாவில் மொத்தமாக 7ஆயிரத்து 445 இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோரி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் 6 ஆயிரத்து 600 பேர் பிரித்தானியாவில் இருந்தபடியே இந்த விண்ணபங்களை அனுப்பியுள்ளனர். அத்துடன் இந்த வருடத்தின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,388 இலங்கையர்களிடம் இருந்து அகதி விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான அகதிகளில் அதிகமானவர்கள் மாணவர் வீசாவிலோ அல்லது பயணிகள் வீசாவிலோ பிரித்தானியாவுக்குள் பிரவேசித்தவர்கள் என உள்நாட்டு அமைச்சர் பரோன் டெய்லர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் எண்மருக்கு இடமாற்றம்-

police officersஎட்டு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 10ஆம் திகதி இடமாற்றப்படவுள்ளனர். இவர்களுக்கான இடமாற்றம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனினால் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இரத்தினபுரிக்கும் கேகாலைக்கும் பிரதி பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றி வந்த மகேஷ் பெரேரா பொலிஸ் விசேட பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில்; கடமையாற்றி வந்த கித்சிறி கணேகம புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளனர் என பொலீஸ் திணைக்கள வட்டாரங்கள் கூறுகின்றன.

13 நாட்களுள் 98 மீனவர்கள் கைது-

sri lankan fishermenஇந்திய கடலோர காவற்படையினரால் கடந்த 13 நாட்களில் மொத்தமாக 98 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையை அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக இரண்டு தினங்களுக்கு முன்னர் 16 இலங்கை மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர். கைதானவர்கள் தற்போது சென்னை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை கிழக்கை புறக்கணிக்கின்றது பா. அரியநேத்திரன்  மறுக்கின்றார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

tnaவடக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடம் கிழக்கு மாகாணம் தொடர்பான அக்கறையும் அரசியல் செயற்பாடுகளும் குறைந்து வருவதாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பா. அரியநேத்திரன் குற்றஞ்சாட்டுகின்றார்.
வடக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர், வடக்கு மாகாண சபைதான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற தவறான மாயை உருவாக்கப்படுவதாகவும், தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்தப் போக்கு தூதிஷடவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய விடயங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
வடக்கு மாகாண சபை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடனான தீர்வைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து தமிழ் மக்களின் ஆணையை பெற்றிருந்தது ஆனால் குறிப்பாக, வடக்கு முதலமைச்சர் தன்னை சந்திக்கும் ராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் வட மாகாணத்தையே முதன்மை படுத்தி பேசுகின்றார். சில சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூட வடக்கை முதன்மை படுத்தியே இத்தகைய சந்திப்புகளில் பேசியிருப்பதையும் எம்மால் அவதானிக்க முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
கிழக்கு மாகாணத்திலும் இராணுவத்தினால் காணி அபகரிப்புகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கான அனுமதி மறுப்பு போன்ற பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. எனவே வெளிநாட்டு ராஜதந்திரிகளையும் பிரதிநிதிகளையும் கிழக்கு மாகாணத்திற்கும் அழைத்துவருவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக சம்பூர் பிரதேச மக்களின் முழுமையான மீள் குடியேற்றத்திற்கு இந்திய உதவியுடனான அனல் மின்நிலையமும் ஒரு தடையாக இருப்பதால், இந்திய அதிகாரிகள் இலங்கை வரும்போது அவர்களை கிழக்கு மாகாணத்திற்கும் அழைத்துவந்து மக்களின் அவல நிலையை காட்டவேண்டும் என்றும் அரியநேத்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை  தமிழோசையிடம் மறுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், இணைந்த வடக்கு கிழக்குடன் தீர்வு என்ற நிலைப்பாட்டையே சர்வதேச பிரதிநிதிகளிடம் வலியுறுத்திவருவதாகக் கூறினார். வடக்கு மாகாண தேர்தலுக்குப் பின்னர், மாகாணசபை முதலமைச்சருக்கு முக்கியத்துவம் அளித்து சர்வதேச பிரதிநிதிகள் அவரை சந்தித்துவருவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.