தெரிவுக்குழுவுக்கு யோசனைகளை முன் வைப்பதில் அர்த்தமில்லை-சுரேஸ் எம்.பி.

sureshகாலத்தை கடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள அர்த்தமற்ற நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு யோசனைகளை முன்வைப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எனவே நாம் அரசாங்கத்துடன் முக்கிய சில விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும். அதன் பின்னரே நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்வதா அல்லது யோசனைகளை முன்வைப்பதா என்ற முடிவுக்கு வரமுடியும் என தமிழ்த் கூட்டமைப்பின் பேச்சாளரும் நடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணும் முகமாக அரசாங்கம் பல்வேறு குழுக்களை அமைத்து பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி அறிக்கைகளை தயாரித்து கடைசியில் அவற்றையெல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டது. இவ்வாறான நிலையில் நாம் எப்படி நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நம்புவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டும் முகமாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ் கூட்டமைப்பு கலந்து கொள்ளாவிடினும் யோசனைகளையாவது முன்வைக்கும் என நம்புவதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார். அது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.