மனித உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் பேரணி-
மனித உரிமைகள் தினம் எதிர்வரும் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் நேற்று வவுனியாவில் மனித உரிமைகளை வலியுறுத்தி பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. கூமாங்குளம் இளைஞர் கழகம், சம்வித்த யுத் இளைஞர் கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ் ஊர்வலம் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து இளைஞர் சேவைகள் மன்றத்தை அடைந்தது. இளைஞர் கழகங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள், பாடசாலை மாணவர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்றிருந்த இவ் ஊர்வலத்தில் மனித உரிமைகளை வலியுறுத்துகின்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
பிரித்தானிய நாடாளுமன்றில் இலங்கை அகதிகள் குறித்து உரை-
பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோருவோரில் பெரும்பாலானவர்கள் மாணவர்களாவோ அல்லது சுற்றுலாப் பயணிகளாகவோ பிரித்தானியாவுக்குள் பிரவேசித்தவர்கள் என பிரித்தானியாவின் உள்நாட்டு அமைச்சர் பரோன் டெய்லர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த அவர், கடந்த ஐந்து வருடங்களில் பிரித்தானியாவில் மொத்தமாக 7ஆயிரத்து 445 இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோரி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் 6 ஆயிரத்து 600 பேர் பிரித்தானியாவில் இருந்தபடியே இந்த விண்ணபங்களை அனுப்பியுள்ளனர். அத்துடன் இந்த வருடத்தின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,388 இலங்கையர்களிடம் இருந்து அகதி விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான அகதிகளில் அதிகமானவர்கள் மாணவர் வீசாவிலோ அல்லது பயணிகள் வீசாவிலோ பிரித்தானியாவுக்குள் பிரவேசித்தவர்கள் என உள்நாட்டு அமைச்சர் பரோன் டெய்லர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் எண்மருக்கு இடமாற்றம்-
எட்டு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 10ஆம் திகதி இடமாற்றப்படவுள்ளனர். இவர்களுக்கான இடமாற்றம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனினால் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இரத்தினபுரிக்கும் கேகாலைக்கும் பிரதி பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றி வந்த மகேஷ் பெரேரா பொலிஸ் விசேட பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில்; கடமையாற்றி வந்த கித்சிறி கணேகம புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளனர் என பொலீஸ் திணைக்கள வட்டாரங்கள் கூறுகின்றன.
13 நாட்களுள் 98 மீனவர்கள் கைது-
இந்திய கடலோர காவற்படையினரால் கடந்த 13 நாட்களில் மொத்தமாக 98 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையை அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக இரண்டு தினங்களுக்கு முன்னர் 16 இலங்கை மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர். கைதானவர்கள் தற்போது சென்னை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.