நானாட்டான் பிரதேச செயலக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்களின் தாக்கதலில் பிரதேச செயலகம் சேதம்

131209152550_mannar_protest_304x171_bbc_nocreditமன்னார் மாவட்டம் பொன்தீவுகண்டல் காணி தகராறு தொடர்பில் நானாட்டான் பிரதேச செயலகத்தில் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவிருந்த வேளை, அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, பிரதேச செயலகக் கட்டிடத்தின் நடத்தப்பட்ட தாக்குதலில் அலுவலகக் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொன்தீவுகண்டல் கிராமத்திற்குச் சொந்தமான காணியில் அயல் கிராமமாகிய பூவரசங்குளம் கிராமத்தில் உள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் அமைப்பதற்காக காணிகள் வழங்கப்பட்டுள்ளதை ஊர்வாசிகளான தமிழ்க்குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. பாதுகாப்புக்காக பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இன்று நானாட்டான் பிரதேச செயலகத்தில் இருதரப்பு பிரதிநிதிகள், நானாட்டான் பிரதேச செயலாளர், மன்னார் ஆயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகரிரகள் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காலை பிரதேச செயலக அலுவலகத்தின் முன்னால் திரண்ட மக்கள் தங்கள் கிராமத்து காணிகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை எனக் கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென பிரதேச செயலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று நடைபெறவிருந்த கூட்டடம் நடைபெறவில்லை செல்வம் அடைக்கலநாதன் . மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பும் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடனும் பொலிசாருடனும் பேச்சுக்கள் நடத்தியிருந்தார்.
பிரதேச செயலகம் தாக்கப்பட்டு அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருப்பது பற்றி முருங்கன் பொலிசாருக்கு முறைப்பாடு செய்துள்ளதாக நானாட்டான் பிரதேச செயலாளர் சந்திரய்யா தெரிவித்தார். இந்தத் தாக்குதல் மற்றும் சேதங்கள் தொடர்பாக மன்னார் அரசாங்க அதிபரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, தானும், அங்கு கடமையில் இருந்த அலுவலகர்கள், ஊழியர்களும் காயமின்றி தப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் தகராறு தொடர்பில் அரசாங்க அதிபர் மட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுக்கள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.