மனித உரிமைகள் தினத்தில் கவனயீர்ப்பில் கலந்துகொண்டோர் தாக்கப்பட்டனர்
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று திருகோணமலை நகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பாட்டாளர்கள் உட்பட சிலர் தாக்கப்பட்டுள்ளார்கள்.தாக்குதலுக்கு உள்ளானவர்களில் காணாமல் போனவரகளைத் தேடிக் கண்டறியும் குழுவின் ஏற்ப்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர் க. திருச்செல்வம் ஆகியோர் திருகோணமலை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றார்கள்.
தொடர்புடைய விடயங்கள் தாக்குதல், மனித உரிமை, வன்முறை காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டறியும் குழுவின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் திருகோணமலை பஸ் நிலையம் முன்பாக இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினரகள் கலந்து கொண்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கு. நாகேஸ்வரன், ஏ.ஜனார்த்தனன் உட்பட அக்கட்சியின் பிரமுகர்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், காணாமல் போன தமது உறவுகளின் படங்களையும், அவர்களை கண்டு பிடித்துத் தரவேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் வாசக அட்டைகளையும் ஏந்தியிருந்தார்கள். போராட்டம் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிரேயுள்ள பொதுச் சந்தைப் பகுதியிலிருந்து வந்த குழுவினர் சிங்கள மொழியில் பேசியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தை குழப்ப முற்பட்டபோது போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கும் அவர்களுக்குமிடையில் வாய்த் தகராறு ஏற்பட்டது.
இந்த வாய்த் தகராறை அடுத்து ஏற்பட்ட கைகலப்பின் போது காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டறியும் குழுவின் ஏற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் உட்பட சிலர் தாக்குதலுக்கு உள்ளாதாகக் கூறப்படுகின்றது. இந்தப் போராட்டத்தில கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரான கு.நாகேஸ்வரன் இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கையில், போராட்டம் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் சந்தை வளவிற்குள்ளிருந்து வந்த ஒரு குழுவினர் போராட்டத்தில கலந்து கொண்ட பெண்களின் கைகளிலிருந்த புகைப்படங்களையும் பதாகைகளையும் பறித்து எறிந்தனர் என்றும் இந்த நபர்களில் ஓரிருவர் தங்கள் முகத்தை துணியினால் மறைத்திருந்தனர் என்றும் கூறினார்
இதனையடுத்து அங்கு சுமார் 15 நிமிடங்கள் ஒரு பதற்றமான நிலை காணப்பட்டது என்றும் அங்கு நின்ற காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து கலைத்திருந்தால் இந்தத் தாக்குதல் சம்பவத்தை தடுத்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்தப் போராட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டறியும் குழுவின் ஏற்ப்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்