வடக்கு ஆளுநரை அகற்றும் பிரேரணையை நாடாளுமன்றில் கொண்டுவருவோம்: த.தே.கூ .

imagesCA027L42வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிரிக்கும் வட மாகாணசபைக்கும் இடையிலான அரசியலமைப்பு மோதல் நேற்று புதிய திருப்பத்தை கண்டது. வட மாகாண ஆளுநரை அகற்றவும் பூஜித ஜயசுந்தரவை வடக்குக்கு புதிய பொலிஸ் மாஅதிபராக நியமித்ததை எதிர்த்தும் நாடாளுமன்றில் ஒரு பிரேரணையை கொண்டுவரப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடித்துக் கூறியது.
வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போக்குவரத்துக்கும் வீடமைப்புக்கும் தனியான திணைக்கங்களை அமைக்க நடவடிக்கை எடுத்ததன் மூலம் வடமாகாண சபை அரசியலமைப்பை மீறிவிட்டதாக ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார் என்றும் சுமந்திரன் எம்.பி கூறினார்.
‘அரசியலமைப்பின் படி இந்த இரண்டு விடயங்களும் மாகாணங்களுக்கு கையளிக்கப்பட்டவை. எனவே வட மாகாண சபை நாட்டின் சட்டவரம்புக்குள்ளேயே செயற்பட்டுள்ளதென சுமந்திரன் கூறினார்.
‘வடமாகாண சபை ஆளுநருக்கு எதிராக ஒரு பிரேரணையை வடமாகாண சபை நிறைவேற்றும் என நினைக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
அரசியலமைப்புக்கு அமைய முதலமைச்சருடன் கலந்தாலோசித்துதான் பிரதி பொலிஸ் மா அதிபரை நியமிக்கவேண்டும். ஆனால், புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனத்தின் போது அது பின்பற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நல்ல மனிதரை வடக்குக்கு பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிப்பததை நான் எதிர்க்கவில்லை. ஒரு பிரதி பொலிஸ் மா அதிபரை முதலமைச்சரின் சம்மதத்துடனேயே நியமிக்கவேண்டும். இவ்வாறுதான் மாகாண பிரதம செயலாளர்கள் நியமனமும் முதலமைச்சரின் சம்மதத்துடனேயே செய்யப்படவேண்டும்.
முதலமைச்சர் தனது பிரதான செயலாளரை அகற்றுமாறு கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆயினும், ஜனாதிபதிக்கு விலாசமிடப்பட்ட இந்த கடிதத்திற்கு இரண்டு மாதங்களாக பதிலளிக்கப்படாமல் உள்ளது என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.