வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே உறுதியளித்துள்ளார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே உறுதியளித்துள்ளார் என இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி தெரிவித்தார்.

imagesCAV34F3Gஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தனக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அகாசி குறிப்பிட்டார். அத்துடன் சிறந்த நபரொருவர் வட மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த மாகாண மக்களிற்காக அரும்பாடுபடுவார் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். வட மாகாண அரசாங்கத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் வட மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும் என அவர் தெரிவித்தார். எனது இந்த விஜயத்தின்போது வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ள முடியவில்லை. போதியளவு நேரமின்மையே இதற்கு காரணமாகும். எனினும் முதலமைச்சருக்கான எனது வாழ்த்துச் செய்தி ஜப்பானிய தூதுவரூடாக அனுப்பப்படும் எனவும் அகாசி குறிப்பிட்டார். வட மாகாண சபை தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற்ற பின்னர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆவது தடவையாக கொழும்பு வந்தார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஐக்கிய தேசிய கட்சி, தமிழத் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு நடத்தினார்.