புளொட் தோழர். த. சிவநேசராசா(பைரவன், சேனன்) துயர் பகிர்தல்’

12-1024x512தோழர். த. சிவநேசராசா(பைரவன், சேனன்) (முன்னாள் மட்.மாநகர சபை உறுப்பினர்) மலர்வு : 09-01-1960 உதிர்வு: 12-12-2013 மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு முகத்துவாரத்தை பிறப்பிடமாகவும் சிராய்மடுவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா சிவநேசராசா(சேனன்) அவர்கள் இயற்கையெய்தி விட்டார் என்ற செய்தி, அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் கழக தோழர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

‘தோழர் பைரவன்’ என கழக தோழர்களால் அழைக்கப்பட்ட த.சிவநேசராசா அவர்கள் இனப்பற்றும் தேசப்பற்றும் மிக்க ஒரு சிறந்த மக்கள் சேவையாளன் என்பது அவருடன் பழகிய யாவரும் அறிந்ததொன்றே. 1983ல் பேரினவாதிகளினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்தையடுத்து, அடக்குமுறைகளுக்கு அடிபணியாது போராடி வாழ்வதுவே மேலாம் என தன்னை முழுமையாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன்(புளொட்) இணைத்துக் கொண்டார். இந்திய மண்ணில் இராணுவ பயிற்சிகளை பெற்றுக்கொண்ட தோழர் பைரவன் இன விடுதலைக்கான போராட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா மாவட்டங்களில் கழகத்துடன் இணைந்து தீவிர பணியாற்றினார்.

தனது அன்பாலும், சேவைகளாலும் மக்களினதும் தோழர்களினதும் மனதில் தனி இடம்பெற்றவர். 1994ம் ஆண்டு மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலில் கழகத்தின் சார்பாக போட்டியிட்டபோது, அப் பிரதேசத்து மக்களால் மாநகரசபை உறுப்பினராக அமோக ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட தோழர் பைரவன்(சேனன்), மக்களுக்கு தன்னாலான சேவைகளை பெருவிருப்புடன் ஆற்றினார். பிற்காலங்களிலும், அவர் என்றுமே மக்கள் பணியில் களைப்புற்றதில்லை. தோழர் சேனனின் இத் திடீர் மறைவூ எமக்கு மட்டுமல்ல.. இப்பிரதேசத்து மக்கள் அனைவருக்குமே பேரிழப்பே…!! இருந்தபோதும், இயற்கையின் யதார்த்தத்தை மனதிலிறுத்தி, அவரது பணிகள் மூலம் அவர் என்றும் எம் மத்தியில் வாழ்ந்திருப்பார் என மனதையாற்றுவோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது உற்றார் உறவினர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய(புளொட்) நாமும் எமது ஆழ்ந்த துயரினை பகிர்ந்து கொள்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) மட்டக்களப்பு. 13-12-2013.