இலட்சியம் தான் முக்கியம் என்று யாதார்த்தத்தை கோட்டை விடுவதில் எந்த பயனுமில்லை – வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

CV01“இலட்சியம் தான் முக்கியம் என்று யாதார்த்தத்தை கோட்டை விடுவதில் எந்த பயனுமில்லை. மாறாக யாதார்த்தத்தை உணர்ந்து இலட்சியத்தை அடையும் வழியை மறுசீரமைத்துச் செல்வதே புத்திசாலித்தனம்”

சாவகச்சேரி சிவன் கோயில் வீதியிலுள்ள தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் இன்று (16.12.13) தென்மராட்சி கல்வி வலயத்தின் மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலை விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நான் நீதிபதியாக கடமையாற்றிய இப்பிரதேசங்களில் புதியதொரு உருவமெடுத்து முதலமைச்சராக உங்கள் முன் சமூகமளிப்பேன் என்று அண்மைக்காலம் வரையிலும் கனவிலும் நினைக்கவில்லை.
அன்று நான் இங்கிருந்து சென்ற பின் உங்கள் பழைய நீதிமன்ற கட்டிடம் (சாவகச்சேரி) தீக்கிரையானது. அதேபோல் மல்லாகம் நீதிமன்றக் கட்டிடமும் தீக்கிரையானது. ஆனால் தற்போது இரு இடங்களிலும் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தான் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ ஆகும்.  இது தான் வாழ்க்கையில் நிரந்தர குணாம்சங்களாகும். இதனால் தான் புத்தபெருமான் ‘மாற்றம் ஒன்றே இந்த மாற்றமுறும் மாநிலத்தில் மாறாததொன்று’ என்று கூறியிருக்கின்றார்’ என்றார்.
‘தமிழ் மக்களின் அரசியல் சிந்தனைகள் இலங்கையில் சுதந்திரம் கிடைத்த காலத்தில் சிங்கள அரசியல் தலைவருடன் ஒத்துழைத்து செல்வோம் என இருந்தது. ஆனால் சிங்கள தலைவர்கள் இந்திய வம்சா வழியினரின் வாக்குரிமையை பறித்தபோது எம்மக்களிடையே முரண்பாடுகள் வளரத்தொடங்கின. காரணம் வாக்குரிமை பறிக்கப்பட்டவர்களும் தமிழர்களே. அது படிப்படியாக ஒடுக்குமுறையாக இலங்கைத் தமிழர்களுக்கும் பிரயோகிக்கப்பட பிற்காலத்தில் எமது இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.
எம்மவரிடையே (தமிழ் மக்கள்) மூன்று தரப்பினர் காணப்படுகின்றனர். தமது தனிப்பட்ட நல உரித்துக்களை பாதுகாக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒரு தரப்பினர், ஆயுதம் ஏந்திப் போராடியவர்களின் இலச்சியங்களையும், ஆசைகளையும் இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் இன்னொரு தரப்பினர், மூன்றாமவர்கள் இலட்சியத்தையும் யாதார்த்ததையும் ஐக்கியப்படுத்த முடியாது என்று தெரிந்தும் கூட அடையமுடியுமான இலட்சியத்தை வெளியிட்டு அதை நோக்கி முடிந்த வரை பயணித்து கொண்டிருப்பவர்கள்.
இதில் வடமாகாண சபையினரின் பெரும்பாலானோரின் மனோநிலை மூன்றாவது தரப்பினருடைய மனநிலையே இருக்கின்றது. எமது ஆயுதப் போராட்டத்தை முறியடிக்க உதவியவர்களில் பல வெளிநாட்டு அரசாங்கங்களாகும். போராளிகளின் நடவடிகைக்களை பயங்கரவாதிகள் என அடையாளம் கண்டனர். அதனால் பாவம் இலங்கை அரசு அவர்களுக்கு உதவ வேண்டுமென்றும் பயங்கரவாதத்தை அங்கு அழிக்காவிட்டால் எங்கள் நாட்டிற்குள்ளும் அந்த பயங்கரவாதம் வந்துவிடுமோ என்ற மனநிலையிலும் தான் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்தன.
ஆனால் போர் முடியும் போது தான் தெரிந்தது பயங்கரவாதம் இளைஞர்களின் தனிப்பட்ட சொத்தல்ல என்பது. இப்பொழுது சர்வதேச அரசாங்கங்கள் யாதார்த்தத்தை புரிந்துகொண்டு நடந்து வருகின்றனர்.
முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் குடாநாட்டு மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. இது 2009 மே மாதத்திற்கு பின்னர் என்பது குறித்துக்காட்ட வேண்டும். யார் யார் வந்து இதனை அறிமுகப்படுத்தினர் என்று ஆராய்ந்து பார்க்க முடியவில்லை ஏனெனில் சகலதும் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. இராணுவ பிரசன்னத்தினால் பொலிஸார் தமது பணிகளை சரியாக செய்து வரக்கூடியதாக இருக்கின்றதா? என்பதை கேட்க வேண்டியுள்ளது. எமது மாணவ சமூகத்தை சீர்குலைக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்கள் எங்கள் மாணவர்களிடமுள்ள சுதந்திர வேட்கையை அழிப்பதுடன், மாணவர்களின் கல்வி மீதுமுள்ள பற்றை இல்லாதாக்கி புலன் இன்பங்களில் மாணவர்;களின் எண்ணங்களை திசைதிரும்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே மாணவர் சமுதாயம் இவற்றை தவிர்த்து விளையாட்டுகளிலும், கலைகளிலும், கல்வியிலும் தமது ஈடுபாட்டைக் காட்ட வேண்டியது அவர்களின் இன்றியமையாத கடமையாகும்.
புலன் இன்பங்களுக்கு காலம் இருக்கின்றது. முதலில் மாணவர்கள் சமுதாயம் கட்டுபாட்டுடன் வளர முன்வர வேண்டும். இன்று இங்கு நடக்கும் விழாக்களைப் போன்ற நிகழ்வுகள் மாணவர்களின் மனதில் மகிழ்வையும் கலாசாரம் மீது மதிப்பையும் உண்டாக்கும் என எதிர்பார்கின்றேன்’ என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.