யுத்தகால மண் அணைகளை அகற்றுமாறு கோரிக்கை-

unnamedமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் காணப்படும் மண் அணைகளையும் கைவிடப்பட்ட காவலரண்களையும் அகற்றித் தருமாறு மீள்குடியேறியுள்ள மக்கள் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களில் யுத்த காலத்தில் போடப்பட்டிருந்த மண் அணைகள், கைவிடப்பட்ட காவலரண்கள் ஆகியன இன்றுவரையும் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இவை அகற்றப்படாமையால் விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. கைவிடப்பட்ட காவலரண்களில் வெடிபொருட்களின் அச்சம் காணப்படுவதால் அவற்றினை அப்பகுதி மக்கள் அகற்ற முடியாத நிலையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்களின் விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்-

sri india mapஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மற்றும் பதுவை மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி இந்திய தலைநகர் புதுடில்லியில் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. தலைநகர் புதுடில்லியில் மீனவர்கள் ஐக்கிய முன்னணியின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு உள்ளுர் மீனவர்களும் ஆதரவு வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பங்குகொண்ட மீனவர்கள், இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்களையும் அவர்களது உடைமைகளையும் உடனடியாக மீட்க வலியுறுத்தி எட்டு அம்ச கோரிக்கையை இந்திய மத்திய அரசிடம் விடுத்துள்ளனர். தமிழகத்தின் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மத்திய அரசாங்கம் உதாசீனப்படுத்தி வருவதாகவும் புதுடில்லியில் கூடிய மீனவர்கள் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதிக பஸ் கட்டணம் அறவிட்டால் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்-

unnamed 4பண்டிகைக் காலத்தில் பயணிகளின் நலன்கருதி கால அட்டவணைக்கு புறம்பாகவும் தூரப் பிரதேசங்களுக்கான பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் பயணிகளை சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் கூடுதல் கட்டணம் அறவிடும் பஸ் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. உரிய பஸ் கட்டணங்களை விட அதிகமாக பணத்தை அறவிடும் நடத்துநர்கள் தொடர்பில் 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு ஆணைக்குழுவின் தலைவர் பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூரப் பிரதேச பஸ் சேவைகளை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்றை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்காளர் இடாப்பு இறுதிப் பட்டியல் தயாரிப்பு-

unnamed32013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கான இறுதிப் பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தற்போது மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறியுள்ளார். இதேவேளை, உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். 2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை அத்தாட்சிப்படுத்துதல் மற்றும் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கம் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை யுத்தத்தின்போது ஏராளமான பாடம் கற்றோம்-பான் கீ மூன்-

unnamed6இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, ஏராளமான பாடங்களை கற்றுக் கொண்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நிவ்யோர்கில் உள்ள ஐ.நா தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இதனை தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளில் விடப்படும் தவறுகளை இதன்மூலம் திருத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான, முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, ஐ.நா சபை உரிய வகையில் செயற்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பாக ஆரய்வதற்காக தம்மால் நிபுணத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், அவர்களினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமையவே, முன்னேற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்துக்கு இலங்கை ஆலோசனை-

imagesCAQV6EVTதாய்லாந்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டின் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் சகல கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் சுமூக நிலையை ஏற்படுத்த முடியும் என இலங்கை ஆலோனை தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தாய்லாந்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையால் வழங்கக்கூடிய பூரண ஒத்துழைப்புகளையும் தமது நாடு வழங்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறுவர் துஸ்பிரயோக வழக்கை விசாரிக்க நீதவான், மேல்நீதிமன்றம்-

unnamed5சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகம் மற்றும் வல்லுறவு குறித்து விசாரிக்க விரைவில் விசேட நீதிமன்றம் அமைக்கப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதற்காக நீதவான் மற்றும் மேல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் துஸ்பிரயோக வழக்குகளை விரைவில் நிறைவுக்கு கொண்டுவர இதன்மூலம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பாராளுமன்றில் இன்று கூறியுள்ளார். ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி ரோசி சேனாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே நீதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு வருடங்களில் 2420 சிறுவர் துஸ்பிரயோக மற்றும் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 517 வழக்குகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு மாத்திரமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.