சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம்-
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான விசேட திட்டங்களை உறுவாக்குதல் என்பதே இவ் வருடத்திற்கான தொனிப் பொருளாக அமைந்துள்ளது. சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மங்கள ரன்தெனிய கூறியுள்ளார். ஐ.நா சபையின் 2000ஆம் ஆண்டு சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
50 ஏக்கர் காணியை மாத்திரமே தனி நபர் வைத்திருக்கும் சட்டம்-
காணி உரிமை தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்டதைப் போல சட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அதன்படி தனி நபர் ஒருவர் வைத்திருக்கக் கூடிய அதி கூடிய காணியின் அளவு 50 ஏக்கர் எனவும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இச்சட்டம் காரணமாக சட்டவிரோதமான முறையில் காணி உரிமையை பேணி வருவதனால் அரசாங்கத்திற்கு பாரியளவில் வரி வருமான இழப்பு ஏற்படுவதை குறைக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு-
யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை அனைத்து துறையினரும் இன்று ஒரு மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக பணிபுரிந்தோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறாவது நாளாக இன்றைய தினமும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை மருத்துவர்கள், தாதியர்கள், நிறைவு காண் மருத்துவவியல் தொழில் வல்லுனர்கள், சிற்றூழியர்கள், சாரதிகள், மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர்கள் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆறாவது நாளாக இன்றும் எம் போராட்டத்தை முன்னெடுக்கிறோம் இதுவரை எமக்கு எந்த தீர்வும் வழங்கப்படவில்லை. நாளையும் தீர்வு கிடைக்காவிடின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்.
நானாட்டான் விவகாரம்; 18பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு-
மன்னார், நானாட்டான் பிரதேச செயலகம்மீது தாக்குதல் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18பேருக்கான விளக்கமறியலை எதிர்வரும் 23ஆம் திகதிவரை நீடிக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் இன்று உத்தரவிட்டுள்ளார். நானாட்டான் பிரதேசச் செயலகம்மீது கடந்த 9ஆம் திகதி தாக்குதல்களை மேற்கொண்டதாக கூறி பொன்தீவுகண்டல் கிராமத்தைச் சேர்ந்த 65பேரை முருங்கன் பொலிஸார் கைதுசெய்து கடந்த 15ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மன்னார் மாவட்ட பதில் நீதவான் இவர்களில் 18பேரை இன்று 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு ஏனைய 47 பேரையும் தலா 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார். அத்துடன் அந்த 47 பேரையும் இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தார். விளக்கமறியலில் இருந்த 18பேரும் இன்று மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் குறித்த அவர்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பிணையில் விடுதலை செய்யப்பட்ட 47 பேரும் மன்றில் ஆஜராகிருந்த நிலையில் அவர்களை எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஐ.நா. பிரதிநிதி பாதுகாப்புச் செயலர் சந்திப்பு-
போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கை உள்ளக விசாரணை நடத்தவில்லையென்றால், ஐ.நா சபையினூடாகச் சர்வதேச விசாரனை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரிட்டன் எச்சரித்துள்ள நிலையில், ஐ.நா பிரதிச் செயலாளர் எலியாசனுடன் சந்திப்பொன்றைப் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பாதுகாப்புச் செயலர், நியூயோர்கிலுள்ள ஐ.நா பொதுச்சபைக் கட்டடத்தில் பிரதிச் செயலருடன் திங்கட்கிழமை சந்திப்பை நடத்தியுள்ளார். இச் சந்திப்பு தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், இன்ன சிற்றி பிரஸ் பிரதிச் செயலரிடம் மின்னஞ்சல் மூலமாக கலந்துரையாடப்பட்ட விடயங்களைக் கேட்டிருந்தது. அதற்குப் பதிலளித்துள்ள பிரதிச் செயலர், இந்தச் சந்திப்பு விசேடமான சந்திப்பு ஒன்றும் இல்லை. உறுப்பு நாடுகளுக்கிடையேயான வழக்கமான சந்திப்புக்களின் ஒரு பகுதியாகவே இது அமைந்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விடயத்தில் உறுதியாகவே இருப்பதாக காங்கிரஸ் தெரிவிப்பு-
இலங்கை விடயத்தில், காங்கிரஸ் கட்சி அதன் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பி எஸ் ஞானதேசிகன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு வியடத்தில் தாமதம் ஏற்படுவதையும் காங்கிரஸ் அனுமதிக்காது எனவும் ஞானதேசின் குறிப்பிட்டுள்ளார்.
கனகராயன்குளம் பகுதி கிணற்றில் விழுந்து சிறுவன் மரணம்-
கிளிநொச்சி – கனகராயன்குளம் பகுதியில் பொதுக்கிணறு ஒன்றினுள் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் நடைபெற்றுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிணற்றில் விழுந்த 7வயதான விஜயன் ஆதித்தியன் என்ற சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மொழிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் நல்லிணக்கம் ஏற்படும்-வாசுதேவ-
தனித் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மொழியிலும், தனிச்சிங்கள பிரதேசங்களில் சிங்கள மொழியிலும் கடமையாற்றக் கூடியவாறு அரச ஊழியர்களுக்கு மொழி அறிவு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மொழி அமுலாக்கல் மற்றும் அரச மொழிகள் அமைச்சு உட்பட தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட 10 சிரேஷ்ட அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழர் ஒருவருக்கு அவர் தமிழ் என்று தெரிந்தும் தனிச் சிங்களத்தில் கடிதம் அனுப்புவது அவரை கத்தியால் குத்துவதற்கு சமனாகும். தனித்தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மொழியிலும், தனிச்சிங்கள பிரதேசங்களில் சிங்கள மொழியிலும் கடமையாற்றக் கூடியவாறு அரச ஊழியர்களுக்கு மொழி அறிவு வழங்கப்பட வேண்டும். மேலும் அரச அலுவலகங்களில் தமிழ், சிங்கள மொழி பெயர்ப்பாளர்கள் இருக்க வேண்டும். அத்துடன் அரச அலுவலகங்களில் வெளியிடப்படும் சுற்று நிருபங்கள் விண்ணப்பப்படிவங்கள் அனைத்தும் மும்மொழிகளிலும் இருக்க வேண்டும். அரச அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் அங்கு சென்று மொழிப் பிரச்சினைக்கு உள்ளானால் 1956 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு உதவிகளை பெற முடியும். அத்துடன் தனியார் பஸ் வண்டிகளில் தற்போது மும்மொழியிலும் பெயர்ப்பலகைகள் இடப்படுகின்றன. ஆனால் இ.போ.ச. பஸ் வண்டிகளில்தான் இன்னமும் அமுல்படுத்தவில்லை. எனவே எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும். இந்த நாட்டில் மொழிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மாத்திரமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். எனினும் மொழி அமுலாக்கல் தொடர்பாக பலவிதமான திட்டங்கள் முன்னெடுத்த போதும் அவை சரியான முறையில் வெற்றியளிக்கவில்லை. எனவே 2014ல் கிளிநொச்சியிலும் இரத்தினபுரியிலும் மொழி அலுவலகம் திறக்கப்படும். இதேபோன்று அடுத்தாண்டு தேசிய ஒற்றுமை மாநாடும் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சகல இனங்களிலும் தலைவர்கள், மதத் தலைவர்கள், பிரதிநிதிகளும் கலந்து கொள்வர். மொழிப் பிரச்சினைக்கு தீர்வு எடுக்கப்படாமல் எதனையும் சாதிக்க முடியாது. அதன்படி நானும் மொழியை கற்கவுள்ளேன். சிங்கள மக்கள் இல்லாமல் தமிழருக்கு தீர்வு இல்லை. இதேபோன்று தமிழ் மக்களின் உடன்பாடு இல்லாமல் சிங்களவர்களுக்கு இந்த நாட்டில் ஒற்றுமைப்பாட்டை ஏற்படுத்தவும் முடியாது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த போதும் வடக்கு மாகாண சபை நடவடிக்கைகளில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் இருதரப்புக்கும் இடையே பேச்சுக்கள் இடம்பெற வேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.