பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் காலம் நீடிப்பு-
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியல் அமைப்பை தயாரிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் காலத்தை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் ஜூன் 21ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறி பாலடி சில்வா சமர்ப்பித்த யோசனைக்கே நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த தெரிவுக்குழுவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணாமற் போனோர் மற்றும் சொத்து சேத மதிப்பீட்டுப் பணிகள் பூர்த்தி-
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற மோதல்நிலை காரணமாக 1982 ஆம் ஆண்டு தொடக்கம், காணாமல் போனவர்கள் மற்றும் சொத்துக்களுக்கான சேதம் தொடர்பில் புள்ளிவிபரங்களை சேகரிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனைத் தவிர ஏனைய பகுதிகளில் இந்த தகவல்களை திரட்டும் பணிகள் நாளை நிறைவடையவுள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.ஏ.சீ குணவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்தறை ஆகிய மாவட்டங்களில் கணக்கெடுப்பாளர்கள் சென்று சேகரிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே, பூரணமாக புள்ளிவிபரங்கள் திரட்டும் பணிகள் நிறைவயடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறாது-
2016ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இந்திய கரையோர காவல்படைக் கப்பல்கள்-
இந்தியாவின் இரண்டு கரையோரப் காவல்படைக் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. ‘விஷ்வாஸ்ட்’ மற்றும் ராஜ்கமல் ஆகிய கப்பல்களே திருமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையேயான முத்தரப்பு பயற்சி ஒன்றில் கலந்துகொள்ளும் முகமாகவே இக் கப்பல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துமிந்த சில்வா வெளிநாடு செல்வதற்கு அனுமதி-
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினாலேயே வழங்கப்பட்டுள்ளது. வைத்திய சிகிச்சைகளுக்காக ஜனவரி மாதம் 6ஆம் திகதிமுதல் ஒருமாத காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு செல்ல முடியும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28இல் மேல், தென் மாகாணசபைகள் கலைக்கப்படுமென தகவல்-
மேல் மற்றும் தென் மாகாணசபைகள் எதிர்வரும் 28ஆம் திகதி கலைக்கப்படும் என அரச தகவல்கள் கூறுகின்றன. இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருடம் மார்ச்சில் நடைபெறும் எனவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாகாணசபைகள் இம்மாத இறுதியில் கலைக்கப்படும். எனவே, தேர்தல்களை நடத்த தயாராக வேண்டும் என நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். இதேவேளை, விரைவில் தேர்தல்களை நடத்துவதற்காக அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்த மாகாணசபைகள் கலைக்கப்படும்; என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சுட்டிக்காட்டியிருந்தார்.
மடு, கோவில் புளியங்குளத்தில் சடலம் மீட்பு-
மன்னார் – மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோவில் புளியங்குளம் பிரதேசத்தில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்றுகாலை ஆணொருவரின் சடலத்தினை மடு பொலிஸார் மீட்டுள்ளனர். வவுனியா கல்மடு கிராமத்தை சேர்ந்த 54வயதான சண்முகம் தியாகராசா என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-
இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் மாவட்டம் வென்னப்புவ, தோப்புவ பாலத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு – சிலாபம் வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெனாண்டோவுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் முரண்பட்ட நிலையில் மீன்பிடி பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன மற்றும் மாகாண மீன்பிடி அமைச்சர் சனத் நிசாந்த ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.