வடக்கு முதல்வருக்கும் உள்ளுராட்சி மன்ற தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு-

unnamed unnamed1                              வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது. இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ். பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்றுகாலை 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது உள்ளுராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய பிரதேச மட்ட அபிவிருத்தி மற்றும் நிர்வாக ஒழுங்குமுறைகள், உள்ளுராட்சி மன்றங்களிற்கான சட்ட அமுலாக்கல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன. இந்த கலந்துரையாடலில் இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளன உறுப்பினர்கள், வட மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்துள்ளனர்.

காணாமல் போனார் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள விசேடஆணைக்குழு-

unnamed 4யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட ஆணைக்குழுவை அமைக்க அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 11ஆயிரம் பேர் தொடர்பில் இந்த விசேட ஆணைக்குழு விசாரணை நடத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற நீதவான் பராக்கிரம பரனகம இந்த ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்குகின்றார். நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின்போது 11ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் காணாமல்போதல் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமராகும் ஆசை எனக்கில்லை-அமைச்சர் தினேஷ் குணவர்த்தன-

unnamed2மாகாண சபை முறைமையானது நாட்டின் கல்வித்துறையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதென அரசாங்கத்தின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சியின் அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமை நாட்டின் நிர்வாகத்தை பெரியளவில் குழப்பிவிட்டது. கல்வியமைச்சின் மேற்பார்வையில் 400 பாடசாலைகள் மட்டுமே இன்றுள்ளன. ஆனால் 9000 பாடசாலைகள் மாகாணசபைகள் வசமுள்ளன. நாம் நெருக்கடி வலையில் அகப்பட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது குறிக்கிட்ட அத்துகோறளை எம்.பி, அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பிரதமராகும் ஆசையை கொண்டிருப்பதாக கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன தனக்கு அவ்வாறான ஆசை இல்லையென பதிலளித்துள்ளார்.

யாழ். வைத்தியசாலை தொண்டர்களின் போராட்டம்-

unnamed5unnamed4நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழ். போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபுறக்கணிப்பு போராட்டம் ஒன்பதாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. யாழ். தொண்டர் ஊழியர்களின் தொடர்ச்சியான பணிபுறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் நோயாளர்களுக்கான சேவைகள் கடந்த ஒருவார காலமாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. தொண்டர் ஊழியர்கள் அனைவரும் சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் வரை தங்களின் பணிபுறக்கணிப்பு போராட்டம் தொடரும் என சங்கத்தின் தலைவர் எஸ். ஈழவளவன் தெரிவித்துள்ளார். பணிப்பறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் பணியாளர்கள் தமது சின்னத்தை அணிந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டாமென சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையினர் வலியுறுத்தியதாகவும் அதற்கு தாம் மறுப்பு தெரிவித்தாகவும் தொண்டர்கள் கூறியுள்ளனர்.

மீனவர் பிரச்சினை தீர்க்க அமைச்சர் ராஜித இந்தியாவிற்கு விஜயம்-

unnamed6இந்திய – இலங்கை மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண விரைவில் இந்தியா செல்ல தீர்மானித்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதுவரை 213 இலங்கை மீனவர்கள் மற்றும் 40 மீன்பிடிப் படகுகளையும் இந்திய பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களை விடுவிப்பது மற்றும் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில், இந்திய மத்திய அரசின் மீன்பிடித்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் அங்கு செல்ல தீர்மானித்துள்ளேன் என அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி அமைச்சு கட்டடத்தில் தீ-

கொழும்பு, பத்தரமுல்லயில் அமைந்துள்ள கல்வி அமைச்சு கட்டடத்தில் இன்று காலை தீ பரவியுள்ளது. கல்வி அமைச்சு கட்டடத்தின் நான்காம் மாடியிலுள்ள ஓய்வூதிய பிரிவிலேயே தீ பரவியதாக கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார். குளிரூட்டி இயந்திரமொன்றில் ஏற்பட்ட மின்கசிவே தீ பரவியமைக்கு காரணமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மற்றும் கோட்டை சிறீ ஜெயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் தியணைப்பு சேவைப் பகுதியினர் தியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இறுதி யுத்தம் – உறுப்பு நாடுகளும் பொறுப்புக்களிலிருந்து தவறின-

unoஇலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகள் மாத்திரமன்றி, ஐக்கிய நாடுகளின் அங்கம் வகிக்கின்ற உறுப்பு நாடுகளும் தமது பொறுப்புகளில் இருந்து தவறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பிரதி பொதுச் செயலாளர் ஜேன் எலிசன் இதனைத் தெரிவித்துள்ளார். நிவ்யோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அவரிடம் இறுதி யுத்தகாலத்தில் ஐ.நா சபை கிளிநொச்சி உள்ளிட்ட வடமாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து இடைவிலகி இருந்தமை தொடர்பில் இன்னர்சிட்டி பிரஸின் செய்தியாளர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டது. இலங்கையில் இறுதி யுத்தத்தில் ஐ.நா சபை கட்டமைப்பு தோல்வி அடைந்ததாக கூறப்படுவதில் இருந்து எவ்வாறான விடயங்கள் கற்றுக் கொள்ளப்படுகின்றன என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இறுதி யுத்தம் தொடர்பில் 2008 ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையில் மௌனம் காத்து வந்தது. அந்த காலப்பகுதியிலேயே கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை இடைவிலகியது. தற்போது கடந்த வாரம் திருகோணமலைப் பகுதியில் இடம்பெற்று ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது, குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இப்போதும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை விடயத்தில் மௌனமாகவே இருக்கிறது. உண்மையில் இலங்கை விடயத்தில் ஐ.நாவின் பங்கு என்ன? என்று அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் வழங்கிய ஐக்கிய நாடுகளின் பிரதி பொது செயலாளர் ஜேன் எலிசன், 2009ம் ஆண்டு இலங்கையில் நிறைவடைந்த யுத்தம் தொடர்பில் அந்த காலப்பகுதியின் பின்னர் வெளியாகி அறிக்கையில் இருந்து இறுதியாக வெளியான சார்ல்ஸ் பெற்றியின் அறிக்கை வரையில் மேற்கோளிடப்பட வேண்டும். இந்த அறிக்கைகளில் இலங்கையின் யுத்தத்தில் ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் தோல்வி குறித்து பேசப்படும்போது, ஐக்கிய நாடுகளின் செயலகம் மாத்திரம் இன்றி, அதன் உறுப்பு நாடுகளும் தோல்வி அடைந்துள்ளன. பாதுகாப்பு சபைக்கு மாத்திரம் இன்றி, ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கும் அதன் மீதான பொறுப்புகள் உள்ளன. இந்நிலையிலேயே சந்தித்த தோல்வி குறித்து ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த விடயத்தில் இலங்கை மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களுக்கு மிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற செய்திகள் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நீண்ட நேரம் ஒதுக்கப்படவில்லை. எனினும் இலங்கையில் ஏற்பட்டதைப் போன்ற நிகழ்வொன்றி, இனி எங்கும் நிகழக்கூடாது என்று அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை செயற்படுவதற்கான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, செயற்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.