வட மாகாணசபை கன்னி அமர்வில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் உரை-

imagesCAF63JNJ

கௌரவ உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்:-

அனைவருக்கும் வணக்கம்,

என்னை ஈன்றெடுத்த என் தாய், தந்தையர்க்கும், என்னைத் தேர்ந்தெடுத்த எனது மாவட்ட மக்களுக்கும் சமர்ப்பணம். கௌரவ அவைத் தலைவர் அவர்களே, கௌரவ முதலமைச்சர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, சக கௌரவ உறுப்பினர்களே, இங்கு வீற்றிருக்கின்ற மாகாணசபை அதிகாரிகளே, பார்வையாளர்களே, ஊடகவியலாளர்களே அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கௌரவ அவைத் தலைவர் அவர்களே, இந்த சபையில் உரையாற்றுவதற்காக என்னை அழைத்தமைக்காக முதற்கண் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த மாகாண சபை ஏன் உருவாகியது என்பது பற்றிய ஒரு பதிவு நிச்சயமாக இங்கே பதியப்பட வேண்டுமென்று எண்ணுகின்றேன். 1987ம் ஆண்டு 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபை, எங்களுடைய தமிழ் மக்களின் பிரச்சினையை தீரப்ப்தற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் இது இங்கு பலருக்கு தெரிவதற்கு நியாயமில்லை. இது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலே ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தம் அல்ல. இது இந்தியாவிற்கும் இலங்கை அரசிற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்தான் இந்த 13வது திருத்தச் சட்டம்.

ஆனால் இது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு இல்லை என்று அன்றைய எமது போராட்டத்தில் ஜாம்பவான்களாக இருந்த திரு.பிரபாகரன் அவர்களும் திரு உமாமகேஸ்வரன் அவர்களும் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்தார்கள். ஆனால்; இன்று காலத்தின் நிர்ப்பந்தத்தால் வடக்கு கிழக்காக இணைந்திருந்த இந்த மாகாண சபை சிறகொடிந்த நிலையில் வட மாகாணமாக பரிணமித்தது. இன்று நாம் இந்த மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மிகப் பெரும்பான்மையான வெற்றியுடன் இங்கு கூடியிருக்கின்றோம். எது எப்படியிருந்தாலும் கூட எங்களைப் பொறுத்தமட்டில் ஆளுமைமிக்க, சட்ட நுணுக்கம் தெரிந்த, நேர்மையான நல்ல முதலமைச்சரை நாங்கள் பெற்றிருக்கின்றோம். எங்களுடைய மக்களுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 30 உறுப்பினர்கள் மாத்திரமல்ல, ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒன்றிணைந்து எங்களுடைய மாகாணத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிச்சயமாக நாங்கள் கௌரவ முதலமைச்சர் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டுமென்று இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

இன்றிருக்கின்ற அரசியலமைப்பின்படி பாத்தால், ஒரு உள்ளுராட்சி மன்றம் ஒரு மாகாண சபையின் அனுசரணை இல்லாமல் நிச்சயமாக இயங்க முடியாது. அதேபோன்று மத்திய அரசாங்கத்தின் அனுசரணையில்லாமல் ஒரு மாகாண சபை இயங்க முடியாது. அந்த வகையில், மாகாண சபையைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு அப்பால் எல்லோரும் இணைந்து கௌரவ முதலமைச்சரின் தலைமையில் இதனை செயற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் நாங்கள் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை நாங்கள் தேசிய உணர்வின் ஊடாக செயற்படுத்த முற்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு மேலாக தந்தை செல்வா காலத்திலிருந்து பிரபாகரன் காலம் வரையும் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகள் போராட்டங்கள் நடைபெற்றும் கூட எங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

இன்று குறிப்பாக சிங்களத் தலைவர்கள் எங்களுக்கு ஒரு தீர்வை தருவார்கள் என்றும் நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால் பெரும்பான்மை உறுப்பினர்கள் 2 பேர் இருக்கின்றார்கள். அவர்கள் முன்னிலையில்தான் கூறுகின்றேன். தென்னிலங்கையில் முற்போக்கான அரசியல் தலைமை ஒன்று உருவாகாத பட்சத்தில் எமது தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லை. எனவே நாங்கள் இதற்காக போராடத்தான் வேண்டும். எதிர்வரும் காலங்களில் மக்கள் சக்தியாக திரண்டு எங்களுடைய உரிமைகளை வென்றெடுக்க நாங்கள் நிச்சயமாக போராட வேண்டும்.

அதே நேரத்தில் இன்று உங்களுக்குத் தெரியும். குறிப்பாக இந்த காணி விடயம். இது யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல., குறிப்பாக வன்னி மாவட்டத்திலேயும் நாளுக்கு நாள் எங்களுடைய காணிகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. அதேநேரம் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் பார்த்தீர்களானால், இலங்கை சுதந்திரமடைந்த காலத்திற்கு பிற்பாடு, காணி உறுதிகள் இற்றைவரை வழங்கப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக மன்னார் வீதி என்ற ஒரு இடம். கௌரவ முதலமைச்சர் அவர்களை நான் தனிப்பட்ட முறையில் சந்திக்கின்ற பொழுதும், வவுனியா அமைச்சர்களுடன் இணைந்து சந்திக்கின்ற பொழுதும் இந்த விடயங்களை தெரிவித்தோம். அதேபோன்று அன்றாடம் எமது பிரச்சினைகள் மிக மிக மோசமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இதற்கு இந்த கூட்டத்தில் அறைகூவல் விடுக்கின்றேன். எங்களுடைய எதிர்வரும் காலத்தில் மாகாண சபை அமைச்சுக்களை உள்ளடக்கிய ஒரு நடமாடும் சேவை மாவட்ட ரீதியாக நடத்தப்பட வேண்டும். அதன் மூலமாக அன்றாடம் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். அதில் முதற்கட்டமாக வவுனியா மாவட்டத்தில் உங்கள் நடமாடும் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு நான் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

இன்றுமொரு விடயத்தை சுட்டிக்காட்டி எனது உரையை முடிக்கலாம் என்று நினைக்கின்றேன். இதுவரை காலமும் உங்களுக்குத் தெரியும், உலக நாடுகள் மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவினால் கையாளப்பட்டுக் கொண்டிருந்தது. இதில் என்ன தவறு நடக்கின்றது என்றால் மாவட்ட ரீதியாக அனுப்பப்படுகின்ற நிதிகள் அரசாங்க அதிபர் ஊடாக மாவட்ட செயலகத்தின் ஊடாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் அமைச்சர்கள், ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதிக்கம் அங்கே ஓங்குகின்றது. ஆனால் இங்கே மாகாண திட்டமிடல் செயலகம் ஒன்று இருக்கின்றது. எனவே அதற்குரிய மத்திய அரசின் அல்லது வெளிநாட்டில் இருந்து வருகின்ற நிதியை மாகாண திட்டமிடல் செயலகத்திற்கு பெற்றுக் கொள்வதன் மூலம் நாங்கள் மாகாண மட்டத்தில் எங்களுடைய அதிகாரங்களுக்கு ஊடாக எங்களது மக்களுக்கான சேவைகளை செய்யலாம் என இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொண்டு, மீண்டும் ஒருமுறை வாக்களித்த மக்களுக்கும், அந்த சந்தர்ப்பத்தை வழங்கிய எங்களது கட்சிக்கும், சக உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றியைக் கூறி விடைபெறுகின்றேன். நன்றி. வணக்கம்.