இராணுவப் பயிற்சி நிறைவு செய்த 45 தமிழ் பெண்கள்-

unnamed1unnamed2unnamed3இராணுவத்தில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு 45 தமிழ் பெண்கள் உட்பட 55 பெண்கள் வெளியேறியுள்ளதாக பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது. பயிற்சிகளை முடித்து வெளியேறிய தமிழ் பெண்களின் அணிவகுப்பு மரியாதை கடந்த 18ஆம் திகதி அனுராதபுரத்தில் அமைந்துள்ள இராணுவ சமிக்ஞை படைப்பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் வன்னி பிராந்திய இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் போனிபஸ் பெரேரா பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். மதவாச்சியில் உள்ள இராணுவ தொண்டர் படையணிக்கு 45 தமிழ் பெண்களும் 10 சிங்கள பெண்களும் இணைத்து கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கு மூன்று மாத பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

திருமலை சென்றுள்ள இந்திய கப்பல்களை அழைக்கவும்: ஜெயலலிதா-

indஇலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு சென்றுள்ள இந்திய கப்பல்கள் இரண்டையும் திரும்ப அழைக்குமாறு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கோரியுள்ளார். இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் நடக்கும் பயிற்சியில் இந்தியா பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பு கூடாது என்று வலியுறுத்தி பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தமிழக மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் உள்ளது. இலங்கையுடனான கடல்சார் ஒத்துழைப்பு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கவே உதவும். எனவே, உடனடியாக இலங்கைக்கு கூட்டு பயிற்சியில் ஈடுபட சென்றுள்ள 2 இந்திய கப்பற்படை கப்பல்களை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும், இலங்கையுடன் எந்த கூட்டு பயிற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்று பாதுகாப்பு துறைக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் ஈரானிய போர்க்கப்பல்கள் தரிப்பு-

iranஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ந்துள்ள நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் வகையில், நீர்மூழ்கி உள்ளிட்ட ஈரானியப் போர்க்கப்பல்களின் அணியொன்று நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. போர்க்கப்பலான ஐஆர்என்எஸ் பன்டர் அப்பாஸ், பயிற்சிக் கப்பலான ஐஆர்என்எஸ் அல்போர்ஸ், கனரக தரிக் வகை நீர்மூழ்கியான யூனெஸ் ஆகியவற்றைக் கொண்ட ஈரானியக் கடற்படை அணியே மும்பைத் துறைமுகத்தில் இருந்து கொழும்பு வந்துள்ளன. இவை எதிர்வரும் திங்கட்கிழமை வரை கொழும்பில் தரித்து நின்று விட்டு ஓமான் நோக்கிப் புறப்படவுள்ளன. இந்த ஈரானியக் கடற்படை அணியின் தளபதியான கப்டன் பப்ரக் பெலூச், நேற்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகேயை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு தொடர்பான தகவல்களுக்கு 1962 ஐ அழைக்குமாறு அறிவுறுத்தல்-

passகடவுச்சீட்டுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் பொதுமக்களுக்கென 1962 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்களுக்கு புதிய கடவுச்சீட்டுக்களை எவ்வாறு பெறுவது, காலாவதியான கடவுச்சீட்டை எவ்வாறு புதுப்பிப்பது, கடவுச்சீட்டுகள் காணாமல் போனால் என்ன செய்வது என்பன உள்ளிட்ட கடவுச்சீட்டுகள் தொடர்பான சகல சந்தேகங்களையும் இந்த தொலைபேசி இலக்கத்தினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும். நாட்டின் எப்பகுதியிலிருந்தும் தமிழ், சிங்களம் அல்லது ஆங்கில மொழிகளில் இந்த இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும். இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். தொண்டர்களின் தொடர் போராட்டம்-

unnamed5நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழ். போதனா வைத்தியசாலையின் தொண்டர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும். தங்களின் பணிகளில் புதியவர்களை ஈடுபடுத்தக்கூடாது. நிரந்தர நியமனத்திற்கான எழுத்துமூல உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தொண்டர் ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது. இதனால் வைத்தியசாலையின் நோயாளர்களுக்கான சேவைகள் கடந்த இரண்டு வார காலமாக ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களை தற்காலியகமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தொண்டர்கள் கூறியுள்ளனர்.

தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க துணை நிற்போம்: பாஜக-

bjpஇலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாரதீய ஜனத்தா கட்சி துணைநிற்கும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர் பிரச்னைகள் குறித்தும், இலங்கைத் தமிழர் பிரச்னைகள் குறித்தும் நாங்கள் நன்கு அறிவோம். இவை முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்படும். குறிப்பாக, இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் எங்கள் கட்சி எப்போதும் துணைநிற்கும். அதே நேரத்தில் இலங்கையை நட்பு நாடாகவும் ஏற்றுக்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.