Header image alt text

பாரதிபுரம் வடக்கு பாடசாலைப் பிள்ளைகளுக்கு உதவி-

unnamed 3 unnamed 5 unnamed 6 unnamed3 unnamed4கிளிநொச்சி பாரதிபுரம் வடக்கில் பாடசாலைப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றுமுற்பகல் 10மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாரதிபுரம் வடக்கில் அமைந்துள்ள கணனி மையத்தில் பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது பிரதேச பாடசாலைகளில் பயிலும் 120 பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் இதற்கான நிதி நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், நாகராஜா அவர்களின் தாயாரும் இந்நிகழ்வில் பங்கேற்று பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். இந்;நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) கிளிநொச்சி கிளையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியின் அழைப்புக்கு கூட்டமைப்பு பதில்-

tna13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகிநிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா..சம்பந்தன் தெரிவித்துள்ளார். 13ஆம் திருத்தத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சகல ஜனாதிபதிகள் தலைமையிலான அரசகளும் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் அமைத்திருந்த தெரிவுக்குழுக்களும் நிபுணர் குழுக்களும் 13ஆம் திருத்தத்துக்கும் அப்பால்சென்று முன்னேறிய அரசியல் தீர்வுத் திட்டத்தையே பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டீயள்ளார். நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட நிறைவுரையை கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றிய ஜனாதிபத ‘வெளிநாட்டிடம் தீர்வு தேடாமல் உள்நாட்டிலேயே தீர்வொன்றை’ எட்ட முன்வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்புக்கு பதிலளிக்கும் வகையிலேயே இரா. சம்பந்தன் மேற்கண்ட தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் அழைப்பை கவனமாக பரிசீலிப்போம். உள்ளுரிலேயே பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமாகவும் விசுவாசமாகவும் நாங்கள் செயற்பட்டு வந்திருக்கிறோம். அரசாங்கத்துக்கும் எமக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தும் அதன்போது நாம் முன்வைத்திருந்த தீர்வு யோசனைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து உறுதியளிக்கப்பட்டவாறு இன்னும் பதில் கிடைக்கவில்லை. பின்னர் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட உடன்பாடுகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் 13ஆம் திருத்தத்தை முற்றாக இல்லாது செய்வதற்கான அல்லது அதிகாரங்களைக் குறைப்பதற்கான தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாது என இரா. சம்பந்தன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இந்து ஆலயங்களில் கொள்ளை-

unnamed7மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள இரண்டு இந்து ஆலயங்கள் இன்று அதிகாலை உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. 300 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆரையம்பதி எள்ளிச்சேனை பிள்ளையார் ஆலயம் மற்றும் 100 வருடங்கள் பழைமை வாய்ந்த சிறீ பேச்சியம்மன் ஆலயம் ஆகியனவே உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஆலய பரிபாலன சபையினரால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானுடன் இணைந்து செயற்பட இணக்கம்-

sri pakiவலயம் மற்றும் பூகோள நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் தேசிய சபையின் சபாநாயகர் சர்தார் அயேஸ் சதீக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தபோதே, இது தொடர்பில் பரிமாறிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானுடனான ஆழமான நட்பை மேலும் வலுப்படுத்தவுள்ளதாக கூறிய ஜனாதிபதி, இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க பாகிஸ்தான் உதவியமை குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சபாநாயகர் கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அத்துமீறும் தமிழக மீனவர்கள் குறித்து ஆலோசனை-

unnamed10இலங்கைக் கடறபரப்பில் அத்துமீறி நுழைகின்ற தமிழக மீனவர்களுக்கு எதிராக மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. பிரதி மீன்பிடித்துறை அமைச்சர் சரத் குமார குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் நாளாந்தம் 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதால், இலங்கையின் கடல் வளம் சூரையாடப்படுகிறது. ஆனால் அந்த படகுகளில் சிலவற்றை மாத்திரமே கடற்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிகிறது. இந்நிலையில் இலங்கையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் அனைவரையும் ஒருசேர கைதுசெய்ய பாரிய முன்னெடுப்பு ஒன்று மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே இது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளோம் என பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

தேர்தல் பணிகள் ஆரம்பம்

unnamed8அடுத்த வருடம் தேர்தல்கள் பணிகளில் ஈடுபடவுள்ள அரச பணியாளர்களை கணக்கெடுக்கும் பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல்களின்போது, பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள் தொடர்பில் கணக்கெடுக்கும் பணிகளை தற்போது தேர்தல்கள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. எனினும் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டதன் பின்னரே, இது குறித்த தகவல்கள் அரச நிறுவனங்களுக்கு வெளியிடப்படும் எனவும், எவ்வாறாயினும், தேர்தல் ஒன்றுக்கான பூர்வாங்க பணிகளையும் தேர்தல்கள் திணைக்களம் ஆரம்பித்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் கடற்படையினர் இருவர்மீது கொழும்பில் கல்வீச்சு-

unnamed9ஈரான் கடற்படையினர் இருவர்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கல்வீச்சு தாக்குதலை நடத்தினார் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கொழும்பு துறைமுகத்தின் நான்காவது படலைக்கு முன்பாகவுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகாமையில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை, ஈரானின் இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நங்கூரமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மல்லாகம் விபத்தில் இருவர் படுகாயம்-

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படைவீரர் ஒருவரும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு மோட்டார் சைக்கிளொன்றும் சைக்கிளொன்றும் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தரான சி.சர்வானந்தன் (வயது 34), படைவீரரான ஜி.ஜி.எம்.கங்கொடகெதர (வயது 21) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவர். மல்லாகம் கே.கே.எஸ்.வீதியிலுள்ள மதுவரித் திணைக்களத்திற்கு முன்பாக ரோந்து சென்றுகொண்டிருந்த படைவீரரின் சைக்கிளுடன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாகவும், இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெல்லிப்பழை பொலீசார் தெரிவித்துள்ளனர்.