Header image alt text

வடலியடைப்பு சைவப் பிரகாசா வித்தியாலய கட்டிடத் திறப்புவிழா-

iயாழ் வடலியடைப்பு சைவப் பிரகாசா வித்தியாலயத்தின் கட்டிடத் திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் நேற்றையதினம் காலை 9மணியளவில்; ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர் திரு. வ.அம்பலநாதர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டு பாடசாலைக் கட்டிடத்தினை திறந்து வைத்தார். பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் செ.சந்திரராஜா, சண்டிலிப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.சிவானந்தராஜா ஆகியோரும், கௌரவ விருந்தினராக சமுர்த்தி உத்தியோகத்தர் பாலமுரளி அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து பாடசாலைச் சிறார்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலைச் சிறார்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேற்படி கிராமத்துடன் தொடர்புடைய புலம்பெயர்ந்தவர்களும் பாடசாலையின் பழைய மாணவர்களும் இணைந்து இந்தக் கட்டிடத்தை நிர்மாணித்திருந்தனர்.

a b c d e f g hj

வட மாகாண வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்-

imagesCAA6XM32வட மாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்திற்கு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அங்கீகாரம் வழங்கியுள்ளார். இந்த அங்கீகாரம் கடந்த சனிக்கிழமை ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 2013ஆம் ஆண்டுக்கான நிதிநியதிச் சட்டத்திற்கும் ஆளுநர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். வட மாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டமும் 2013 ஆண்டின் முதலாம் இலக்க நிதிநியதிச் சட்டமும் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரானால் டிசம்பர் 12ஆம்திகதி மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாகாண ஆளுநரின் அங்கீகாரத்திற்காக வரவு–செலவுத் திட்டம் மாகாண பிரதம செயலருக்கு மாகாண சபை தவிசாளரால் அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் வரவு-செலவுத் திட்டத்திற்கான அங்கீகாரம் ஆளுநரால் சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

நீர்வேலி ஸ்ரீகணேஷா முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா-

யாழ். நீர்வேலி ஸ்ரீகணேஷா முன்பள்ளியின் வருடாந்தக் கலைவிழா நேற்றுப் பிற்கல் நடைபெற்றது. ஸ்ரீகணேசஷா முன்பள்ளியின் தலைவர் க.க.முருகையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் லஷீகன், ஓய்வுபெற்ற விலைக் கட்டுப்பாட்டு அதிகாரி சிவசீலன், கரவெட்டி பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் செல்வி செல்வநாயகம் சிவாநதி ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்று, கௌரவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆலய வழிபாட்டுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது முன்பள்ளிச் சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதா தெய்வேந்திரம்பிள்ளை சாதனை-

கிளிநொச்சி மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பிரதா தெய்வேந்திரம்பிள்ளை என்ற மாணவி மாவட்ட ரீதியாக முதலிடத்தை பிடித்துள்ளார். 2013ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலைய மாணவி பிரதா வர்த்தகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் ஒரு வயதாக இருக்கும்போதே தாயார் இறந்துவிட சிறியதாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் கற்க முடியாத சூழ்நிலையில் இவரது கல்வி இடைநிறுத்தப்பட்டது. இதனால் இவர் அந்த ஆண்டிற்குரிய பத்தாம் தரத்தினை படிக்க முடியாமல் போய்pருந்தது. இருந்தும் மனம் தளராது பல துன்பங்களுக்கு மத்தியில் இலட்சியக் கனவுகளோடு தவற விட்ட ஆண்டினையும் சேர்த்து பதினோராம் தரத்தில் கற்று சாதாரண தரத்தில் சித்தியெய்திய இவர் மேலும் தனது விடாமுயற்சியினால் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் பெற்ற பெறுபேறுகள் புள்ளி விபரவியல் யு, கணக்கீடு -யு, பொருளியல் -டீ ஆகும்.

தொண்டர் ஊழியர்கள் 12ஆவது நாளாக பணி பகிஷ்கரிப்பு-

எந்தவித தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு 12ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. தமது பிரச்சினைக்கு மூன்று நாட்களுக்குள் உரிய பதிலளிப்பதாக ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் ஊழியர் சங்கத் தலைவர் எஸ். ஈழவளவன தெரிவித்துள்ளார். இதற்கமைய அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைக்கும் வரை தொடர்ச்சியாக பணி பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும், தங்களின் பணிகளில் புதியவர்களை ஈடுபடுத்தக்கூடாது மற்றும் நிரந்தர நியமனத்திற்கான எழுத்துமூல உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் என மூன்று கோரிக்கைகள் தொண்டர் ஊழியர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாங்குளத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது-

முல்லைத்தீவு மாங்குளம் பாளப்பானி பகுதியில் அனுமதி பத்திரமின்றி வெடிப்பொருட்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து வெடிபொருள் தயாரிக்கத் தேவையான வெடிமருந்து உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பொலிஸார் இதுபற்றிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறைச்சாலையில் அதி நவீன தொழிநுட்பம் –

சிறைச்சாலைகளின் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைளை மேலும் வலுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையில் முதலில் அதிநவீன தொழிலுட்ப உபகரணங்கள் பொறுத்தப்படவுள்ளன. இந்த நடவடிக்கை இந்த வாரத்தில் இடம்பெறும் என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சிறைச்சாலையினுள் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைக்குள்ளும் அதி நவீன தொழிநுட்பங்கள் பொருத்தப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் 32 சிறைச்சாலைகள் காணப்படுகின்ற போதிலும் வெலிக்கடை சிறைச்சாலையிலேயே முதற்கட்டமாக இந்த அதி நவீன தொழிநுட்பங்கள் பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி-

சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழகம் – நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்;டுள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் நாகப்பட்டணம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் 200க்கும் அதிகமான மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, தமிழகம் – நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த கடந்த மூன்று தினங்களாக போராட்டம் மோற்கொண்டு வருகின்றனர்.

உரும்பிராயில் சிசுவின் சடலம் மீட்பு-

யாழ். உரும்பிராய் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில், சிசுவொன்றின் சடலம் நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளது. உரைப்பையில் இடப்பட்டு கட்டப்பட்டவாறு இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் அங்குள்ள பற்றையொன்றினுள் குழி தோண்டிக்கொண்டிருப்பதை ஒருவர் அவதானித்துள்ளார். இது தொடர்பில் சந்தேகமடைந்த அந் நபர், அயலவர்களின் உதவியுடன் குறித்த பற்றைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது குறித்த பற்றையினுள் குழி தோண்டப்பட்டு உரைப்பையினுள் கட்டப்பட்ட பொதியொன்று போடப்பட்டிருந்ததை கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கிராம அலுவலகர் மூலமாக கோப்பாய் பொலிஸாருக்கு அயலவர்கள் தகவல் வழங்கினர். இந்நிலையில், குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் குழியில் கிடந்த உரைப்பை பொதியை அவிழ்த்துப் பார்த்தபோது அதனுள் சிசுவின் சடலமொன்று இருப்பதைக் கண்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு ஜனாதிபதி விஜயம்-

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பலஸ்தீன் மற்;றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 6ஆம் திகதி ஜனாதிபதி புறப்படவுள்ளார். இந்த விஜயத்தின்போது இரு நாட்டு அரச தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 510 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு விற்பனை-

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மூன்று கிராமங்களை உள்ளடக்கிய, 510 ஏக்கர் காணி தனிநபர் ஒருவரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த காணி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வடமாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மன்னார் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ஓலைத்தொடுவாய் கிராம சேவகர் பிரிவின், உவரி, தாழங்காடு, கருப்பன் குடியிருப்பு ஆகிய மூன்று கிராமங்களையும் உள்ளடக்கி, புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர், 510 ஏக்கர் காணியை அபகரித்து, போலி ஆவணங்களை தயாரித்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். Read more