சாதனை படைத்த மாணவி பிரதா தெய்வேந்திரம்பிள்ளைக்கு பாராட்டு-

aகிளிநொச்சி மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலிடத்தைப் பெற்ற மாணவி பிரதா தெய்வேந்திரம்பிள்ளைக்கு இன்று பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலய மாணவியான பிரதா தெய்வேந்திரம்பிள்ளை வர்த்தகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். கல்விக்கு பலவகையிலும் தடைகள் ஏற்பட்டிருந்த நிலையிலும், மனம் தளராது பல துன்பங்களுக்கு மத்தியில் இலட்சியக் கனவுகளோடு தவறவிட்ட படிப்புக்களை கற்றுமுடித்து கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தியெய்தினார். பின்னர் இவர் தனது விடாமுயற்சியின் பயனாக உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதற்காக மாணவி பிரதாவைப் பாராட்டி, அவரின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் இவருக்கு பாராட்டுச் சான்றிதழும், நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) கிளிநொச்சிக் கிளையினர் இன்றுபிற்பகல் மாணவி பிரதாவின் இராமநாதபுரம் இல்லத்திற்குச் சென்று 5,000 ரூபாய் உதவித் தொகையையும், வாழ்த்துச் சான்றிதழையும் வழங்கியுள்ளனர். இதன்போது குறித்த மாணவியின் பாடசாலை ஆசிரியரும் உடனிருந்துள்ளார்.