மாகாண சபைகளை கலைக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டது-

எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த தெற்கு மற்றும் மேல் மாகாணசபை தேர்தல்கள் மார்ச் 22 அல்லது 29ஆம் திகதிகளில் நடத்தப்படலாம் என அரசாங்கத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இதற்கமைய தென் மற்றும் மேல் மாகாணசபைகள், எதிர்வரும் ஜனவரி 8, 11 அல்லது 12ஆம் திகதிகளில் கலைக்கப்படலாமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இம்மாதம் 28ஆம் திகதி மாகாண சபைகள் கலைக்கப்படவிருந்த நிலையில், நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவை ஒத்திவைக்கப்பட்டதாக தெரியவருகிறது. 2013ஆம் திகதிக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 31ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படும் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

தென் மாகாண சபை உறுப்பினர் இராஜினாமா-

தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் டி.டப்ளியு பிரதாபசிங்ஹ இராஜினாமா செய்துள்ளார். முன்னர் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியிருந்த அவர் இராஜினாமா செய்வதற்கான காரணத்தை அறிவிக்கவில்லை. மாகாண சபையில் இன்றையதினம் விசேட உரையொன்றை ஆற்;றியதன் பின்னரே அவர் இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு விசேட பொறுப்புகளை ஒப்படைத்துள்ளமையால் தான் இராஜினாமா செய்து கொள்வதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

சி.ஐ.டியின் பணிப்பாளராக ரணவீர நியமனம்-

eகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஆர்.எல்.ரணவீர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை 12 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்றையதினம் முதல் அமுலுக்கு வருகின்ற வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலர் ஜனவரியில் ஜெனீவா விஜயம்-

ஐ.நா மனித உரிமை பேரவையின் 2014 மார்ச் அமர்வுக்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள சாதனைகளைப்பற்றி அரசாங்கம் இரு முக்கிய விளக்கங்களை அளிக்கவுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு பொறுப்பாகவுள்ள ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஜனவரியில் ஜெனீவா சென்று பல்வேறு நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார். இலங்கையிலுள்ள இராஜதந்திர நிறுவன தலைவர்களுக்கும் இது தொடர்பான விளக்கமளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

இணையத்தில் நிதி மோசடி என கணினி அவசர பிரிவு எச்சரிக்கை-

இணையத்தை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்தப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். மின் அஞ்சலை பயன்படுத்தி சிலர் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையர் ஐவருக்கு பாகிஸ்தான் உயர்கல்வி புலமைப்பரிசில்-

hபாகிஸ்தானில் உயர்கல்வி கற்பதற்காக இலங்கை மாணவர்கள் ஐந்து பேருக்கு புலமைப்பரிசில்களை அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது. உயர்கல்வி புலமைப்பரிசில் திட்டம் 2013இன் கீழ் இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் பாகிஸ்தானிலுள்ள பிரபல்யமிக்க பல்கலைக்கழகங்களில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய துறைகளில் உயர்கல்வியை மேற்கொள்ள முடியும். இந்த கற்கைநெறிகளை மேற்கொள்ளும் காலப்பகுதியில் தேவையான அனைத்து நிதி வசதிகளையும் பாகிஸ்தான் அரசாங்கம் வழங்குகின்றனது. இத்திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரான ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் காஷிம் குரேஷி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதுபோன்றே பொறியியல் மற்றும் மருந்தகம் ஆகிய துறைகளில் இலங்கை மாணவர்கள் உயர் கல்வியை மேற்கொள்ள பாகிஸ்தான் புலமைப்பரிசில் வழங்குகின்றது. இதற்கு மேலதிகமாக 150 பாடசாலை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம், ஜின்னா புலமைப்பரிசில்களை வருடாந்தம் வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் மனிதப் புதைகுழி தோண்டும் பணி நிறுத்தம்-

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்றுத் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை வரை புதைகுழியைத் தோண்டும் பணிகள் இடம்பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீட்கப்பட்ட 11 மண்டையோடுகளையும் பரிசோதனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, குடிதண்ணீர் குழாய் இணைப்பு வேலைகளுக்காக மன்னார் திருக்கேதீஸ்வரத்தை அண்டிய பகுதிகளில் வீதியின் அருகே மண்ணைத் தோண்டியபோது அங்கு மனித மண்டை யோடுகள், மனித எச்சங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் புதைகுழியைத் தோண்டும் பணிகள் இடம்பெற்றன. கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களும் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் வேகமாக இடம்பெற்றன. இதன்மூலம் இங்கு புதைக்கப்பட்டிருந்த 11 மண்டையோடுகள், எலும்புகள் என்பன மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று புதைகுழி தோண்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி பிரதேச செயலக பட்டதாரிகள் போராட்டம்-

dயாழ். சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுநர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்தால் 51 ஆயிரம் பட்டதாரிகள் கடந்த ஆண்டில் பிரதேச செயலகங்களுக்கு பயிலுநராக இணங்கப்பட்டிருந்தார்கள். இவர்களுள் வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பட்டதாரிகளுக்கு கடந்த மாதத்திற்கு முன்னர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளுள் சாவகச்சேரி பிரதேச செயலகம் தவிர்ந்த 14 பிரிவுகளுக்கும் கடந்த 15ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களாலும், அரச அதிகாரிகளாலும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நியமனங்கள் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் எதுவும் விடுக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தபோதிலும், கடந்த நாட்களில் தமக்கும் நியமனம் வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். a b cநியமனம் வழங்கப்படாத நிலையில் பட்டதாரிகள், இன்றுகாலை 9 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை பிரதேச செயலக வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பட்டதாரிகள் அனைவரும் கையொப்பமிட்டு மகஜர் ஒன்றையும் பிரதேச செயலரிடம் கையளித்துள்ளனர். தமது நியமனம் வழங்கப்படாமைக்கு அதிகாரிகளின் அசமந்தப் போக்கே காரணம் எனவும், எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் நியமனம் தொடர்பான உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக பேராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.