கிளிநொச்சியில் இந்திய ஊடகவியலாளர் கைது-

sசுற்றுலா விசாவில் வந்து படையினர் நிலைகொண்டுள்ள இடங்களை படம் பிடித்ததற்காக இந்தியர் ஒருவர் கிளிநொச்சி கிராஞ்சிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவில் வந்த தமிழகத்தைச் சேர்ந்த 24வயதான அவர் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடன் இடங்களை புகைப்படம் எடுத்த காரணத்தாலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டங்களை அந்நபர் மீறியுள்ளார். மேலதிக நடவடிக்கைக்காக அவரை குடிவரவு அதிகாரிகளிடம் பொலீசார் ஒப்படைப்பர் கைதானவர் தன்னை ஒரு ஊடகவியலாளர் என தெரிவிக்கவில்லை சுற்றுலா விசாவில் வருபவர்கள் இவ்வகையான நடவடிக்கையில் ஈடுபட முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சிறீதரன் அந்நபருடன் பயணித்துள்ளார் என பொலீஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் நேற்றையதினம் பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் விபத்துக்களால் 546 பேர் வைத்தியசாலையில் அனுமதி-

bநத்தார் தினத்திலும், அதற்கு முந்தைய தினத்திலும் திடீர் விபத்துகளுக்கு உள்ளான 546 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதி விபத்துகள் காரணமாக 114 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். வீதி விபத்துகள் மற்றும் துன்புறுத்தல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு அனர்த்தங்களுக்கு இலக்கான 85 பேர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் சம்பா அலுத்வீர கூறியுள்ள

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்-

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத, அதிகளவிலான இஸட் புள்ளிகளை பெற்றுள்ள மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் வழங்குவதற்கு உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்திய அரசாங்கத்தினால் 180 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார். இதற்காக மருத்துவ மற்றும் பல் மருத்துவம் தவிர்ந்த ஏனைய மாணவர்கள் விண்ணப்பிக்க முடியுமெனவும், இதற்கான விண்ணப்ப படிவங்களை உயர்கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்த்தவ ஆலயத்துக்கு எதிர்ப்பு-

cமொனராகலை – வெல்லவாய பகுதியில் உள்ள ஆனைப்பள்ளம் பிரதேச மக்கள், கிறிஸ்த்தவ தேவாலயம் ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள சுதர்சனாராம விகாரை வளாகத்தில் இந்த தேவாலயம் நிர்மாணிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பௌத்த மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதியில் இவ்வாறு கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்பகுதியில் ஒரே ஒரு இந்து குடும்பம் மாத்திரமே இருக்கின்றனர். ஏனையவர்கள் பௌத்தர்கள். இதனால் அங்கு கிறிஸ்த்தவ தேவாலயம் ஒன்று அமைக்க வேண்டியதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எவ்வாறாயினும் உரிய அனுமதியுடனேயே இதனை நிர்மாணிப்பதாக இதனை நிர்மாணிக்கும் பாதிரியார் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சி தலைவரை தாக்கியர்கள் அடையாளம் காணப்பட்டனர்-

புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் கெலும் நிசாந்தவின் வீட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் கண்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் சேதமடைந்ததாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோவில் சென்ற 6பேர் கொண்ட குழுவினர் நேற்றிரவு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் கெலும் நிசாந்தவின் வீட்டின்மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர. இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலீசர் சந்தேகநபர்களை தாம் அடையாளம் கண்டுள்ளதாக கூறியுள்ளனர்.

பிள்ளையாரடி புத்தர் சிலை சேதம்-

1(3591)மட்டக்களப்பு பிள்ளையாரடியில் தனியார் காணியொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டு வீசப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தர் சிலை கீழே வீசப்பட்டுக் கிடப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்தே சேதமாக்கப்பட்ட சிலையின் பாகங்களை தாங்கள் மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையிலிருந்து சிலை வெளியே எடுத்து வீசப்பட்டதில் சிலை பல பாகங்களாக நொருங்கியுள்ளது. சிலையின் பாகங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளோம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். முற்றிலும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசமான பிள்ளையாரடியில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அங்கு நிலைகொண்டு முகாமிட்டிருந்த படையினரும் பொலிஸாரும் குறித்த புத்தர் சிலையை அங்குள்ள தனியார் காணியொன்றில் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அனர்த்தங்கள் அறிவிக்க 117 தொலைபேசி இலக்கம் அறிமுகம்-

அனர்த்தங்கள் தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு 117 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் 24 மணிநேரமும் இந்த இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ஏறாவூரில் கடை உடைத்து பொருட்கள் கொள்ளை-

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள பலசரக்குக் கடை ஒன்றிலேயே நேற்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த, 1,50,000 ரூபா பெறுமதியான மீள்நிரப்பு அட்டைகளும், 3,00,000 ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களும் 100,000 ரூபா பணம் ஆகியனவே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கடையின் கூரையை பிரித்து அதன் ஊடாக உள்நுழைந்த கொள்ளையர்கள், திருட்டை மேற்கொண்டுள்ளதாகவும் கடை உரிமையாளர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். ஏறாவூர் பொலீசார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

லிஸ்பென் கடலில் வீழ்ந்து காணாமற்போன இலங்கையர்-

vபோர்த்துக்கல் லிஸ்பென் கடலில், இலங்கை கொடியை தாங்கிச்சென்ற கப்பலிலிருந்து பணியாளர் ஒருவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்பெயின் நேரப்படி மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அவரை கண்டுபிடித்து மீட்பதற்காக போர்த்துக்கல் ஹெலிகொப்டர்களும் கரையோர காவல் படையினரும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரும் இந்நபர் மீட்கப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

சூடானிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர எற்பாடு-

qதெற்கு சூடானிலுள்ள 13 இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தெற்கு சூடான் மோதல் தற்போது உக்கிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொழிலாளர்கள் 13 பேரும் தற்போது உகண்டாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல்கள் செயலகத்தில் விசேட கூட்டம்-

unnamed3சகல மாவட்டங்களின் பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையார்கள் கொழும்பில் கூடியுள்ளனர். தேர்தல்கள் அணையாளர் தலைமையில் இன்றுகாலை தேர்தல்கள் செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்களின் தகவல்கள் கூறுகின்றன. எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இந்த கூட்டத்தின்போது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வரவு – செலவுத் திட்டம் இரண்டாம்முறை தோற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தலைவர்கள் தெரிவு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

65 ஆயிரம் போலி தேசிய அடையாள அட்டைகள்-

நாடு முழுவதிலும் 65 ஆயிரம் போலி தேசிய அடையாள அட்டைகள் உலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது வெளியிடப்பட்ட அடையாள அட்டைகளில் பல போலியானவை. இவற்றில் உள்ளடக்கப்பட்ட தகவல்கள் பிழையானவை என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார். இதேவேளை, 2016ம் ஆண்டு முதல் நவீன இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது என ஆணையாளர் சரத் குமார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.