உள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத்திட்ட (பட்ஜெட்) தோல்விகள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் பதவி இழக்க நேரிடும்: மாவைசேனதிராஜா

maaviஇலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்திலுள்ள சில உள்ளுராட்சி சபைகளில் வரவுசெலவுத் திட்டப் பிரேரணைகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் மேலும் சில உள்ளுராட்சி சபைகளில் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், தமது கட்சி உறுப்பினர்களிடையே இணக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் வல்வெட்டித்துறை நகரசபை உட்பட இதுவரை மூன்று உள்ளுராட்சி சபைகளில் வரவுசெலவுத் திட்டத்தை ஆளும் கட்சி உறுப்பினாகள் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் தோற்கடித்துள்ளனர்.
கிழக்கிலும் காரைதீவு, நாவிதன்வெளி, வெருகல் மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய உள்ளுராட்சி சபைகளிலும் வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்படுமானால் தோற்கடிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.
உட்கட்சி முரண்பாடுகள் இலங்கையில் உள்ளுராட்சி சபை சட்ட வழக்கத்தின்படி, வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றவதற்காக உள்ளுராட்சி சபையின் தலைவர் அதனை இரண்டு தடவைகள் முன்வைக்க முடியும். இரண்டாவது தடவை தோற்கடிக்கப்பட்டால் தலைவர் பதவி இழக்க நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா,’ஏற்கனவே நிறைவேற்ற முடியாமல் போன உள்ளுராட்சி சபைகளில் வரவுசெலவுத் திட்டம் மீண்டும் நிறைவேற்றப்படும்’ என்று நம்பிக்கை வெளியிட்டார். தமது கட்சி அதிகாரத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளில் வரவுசெலவுத் திட்டம் தோல்வி அடைந்தால் அதற்கு காரணமான கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் மூலம் சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள் தமது பதவியை இழக்க நேரிடும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.
இதேபோல் வடக்கு-கிழக்குக்கு வெளியே, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளிலும் ஏற்கனவே வரவுசெலவுத் திட்டப் பிரேரணைகள் ஆளுங்கட்சி உறுப்பினர்களாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான 15-க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளில் இம்முறை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கட்சியும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. ஆளும் கட்சிகளுக்குள் நிலவும் முரண்பாடுகளே இம்முறை வரவுசெலவுத் திட்ட தோற்கடிப்புகளுக்கு பிரதான காரணம் என்றும் கூறப்படுகிறது.