இலங்கையின் முன்னேற்றம்; குறித்து அமெரிக்கா மதிப்பீடு-

Pisvalஇலங்கைமீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலை, அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வுக்கு முன்னர் இந்த மதிப்பாய்வினை மேற்கொள்ளும் நோக்கிலேயே புதிதாக நியமனம் பெற்றுள்ள உதவிச் செயலர் நிஷா தேசாயை அமெரிக்கா அனுப்பவுள்ளது. ஜனவரி இரண்டாம் வாரத்தில் இலங்கை வரவுள்ள நிஷா தேசாய், அரச மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டவர்களுடன் பேசவுள்ளதாக தெரியவருகிறது. அமெரிக்க அனுசரணையில் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டுவந்த தீர்மானம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடனும் நிஷா தேசாய் பேசவுள்ளதாக கூறப்படுகின்றது.

யுத்த பாதிப்புகள் குறித்து கூட்டமைப்பு தனியான கணிப்பீடு-

dயுத்த காலத்தில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பில் தனிப்பட்ட கணிப்பீடு ஒன்றை மேற்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. விரைவில் வடமாகாண சபையின் ஊடாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பிலும் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பிலும் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு கணிப்பீடுகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் இந்த கணிப்பீட்டில் நம்பிக்கை இல்லை. போலியான தகவல்களை மேற்கொண்டு சர்வதேசத்திடம் சமர்ப்பிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்நிலையில் உண்மையான தகவல்களை அறிந்து கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறித்த ஆய்வினை மேற்கொள்ளவிருக்கிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்திய ஊடகவியலாளரிடம் புலனாய்வினர் விசாரணை-

tamil_prabakaran_CInocreditஇலங்கையின் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரனை புலனாய்வுப்பிரிவினர் விசாரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகள் முடிந்ததும் அவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பிரபாகரன் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்தாலும், அவரிடம் கைப்பற்றிய கேமராவை ஆராய்ந்தபோது, அதில் அவர் இராணுவ நிலைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து படம் பிடித்திருந்ததை கண்டோம். குறிப்பாக நாவற்குடா பகுதி இராணுவ முகாம், அப்பகுதியின் இராணுவ நடமாட்டங்கள், இராணுவ வாகன நடமாட்டங்களையெல்லாம் அவர் படம் பிடித்திருந்தார் என அஜித் ரோஹன குறிப்பிட்டார். ஒரு சுற்றுலா பயணியான இவர் எதற்காக இராணு இலக்குகள், இராணுவத்தினரை மட்டும் குறிவைத்து படம் பிடிக்கவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது கைது குறித்தும், இலங்கையில் இவரது நடத்தை தொடர்பிலும் இந்திய தூதரகத்திற்கு அறிவித்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.  மேலும் இவர் கைதுசெய்யப்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ. சிறிதரனும் கூட இருந்துள்ளார் அவரிடம் விசாரித்த பொழுது இவர் தனது நண்பர்தான்  ஊடகவியலளர் என்பது தெரியாது என்றும் கூறியுள்ளார்.

சாவகச்சேரியில் ஆணின் சடலம் மீட்பு-

dead.bodyயாழ். சாவகச்சேரி தனங்கிளப்பு பிரதேசத்தில் ஏ32 வீதிக்கு அருகிலுள்ள வயலிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்றுமாலை 5மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. கோவிலாக்கண்டி மேற்கு, தச்சன்தோப்பைச் சேர்ந்த 48வயதான சோமசுந்தரம் குணரத்தினம் என்பவரே இவ்வாறு வயலிலுள்ள நீரில் தலை மூழ்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை விசாரணைகளை மேற்கொண்டார். விசாரணையையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை இந்திய மீனவர் குறித்து ஜெயலலிதா கலந்துரையாடல்-

bஇலங்கை மற்றும் தமிழக மீனவ பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவது தொடர்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். தமிழக அரச செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது தமிழகத்தின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. ஏற்கனவே இந்த மாதம் இரண்டு நாடுகளின் மீனவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் இந்திய பிரதமருக்கு ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் கடிதம் அனுப்பி இருந்தார். இந்த பேச்சுவார்த்தைகளில் தமிழக அரசாங்கத்தை மத்தியஸ்தராக கருதப்பட வேண்டும் என அவர் தமது கடிதத்தில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சியில் இளைஞர் கடத்தல்-

cயாழ். வடமராட்சி வடக்கைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இனந்தெரியாதவர்களால் வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி வடக்கு இன்பரூட்டியைச் சேர்ந்த 23வயதான சூரியகுமரன் கலையமுதன் என்பவரே நேற்று அதிகாலை 4 மணியளவில் கடத்தப்பட்டுள்ளதாக கடத்தப்பட்டவரின் தந்தை, கந்தவனம் சூரியகுமாரன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இளைஞன் கடத்தப்படும் போது ‘தன்னை 4பேர் கொண்ட கும்பல் ஒன்று வானில் கடத்திச் செல்வதாக’ தனது தொலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பியதாக சூரியகுமாரன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தனது மகனைப் பற்றி புலனாய்வாளர்கள் ஊரில் விசாரித்துள்ள நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால் புலனாய்வினருக்கு இதில் தொடர்பிருக்கலாமென தான் சந்தேகிப்பதாகவும் சூரியகுமாரன் மேலும் கூறியுள்ளார்.

வடக்கில் தமிழ் மொழியை புறக்கணிக்கும் பொலிஸார்-

LK policeவடக்கில் பொலிஸார் தொடர்ந்தும் தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில பொலிஸ் நிலையங்களில் இன்னும் தமிழில் முறைப்பாடு செய்ய முடியாதநிலை காணப்படுகிறது. பொலிஸாரினால் அனுப்பப்படும் கடிதங்கள் கூடத் தனிச் சிங்களத்திலேயே உள்ளன என்று யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள் நேற்று பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின்போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பிரதேச செயலர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது வடக்கில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் நூறு வீதம் தமிழில் முறைப்பாடு செய்யப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது பிரதேச செயலர்கள் பொலிஸாரின் கூற்றை முற்றாக மறுத்ததுடன் தமிழில் முறைப்பாடு பதிவு செய்யப்படுவதில்லை என்பதற்கான ஆதாரங்களையும் அங்கு அம்பலப்படுத்தினர். பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க பொலிஸ் நிலையங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அங்கு தமிழில் பேசுவதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் பின்னர் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸாரால் கூறப்படுகிறது. இங்கு அநேகமான பொலிஸ் நிலையங்களில் இப் பிரச்சினை தொடர்கிறது. சாவகச்சேரி பொலிஸ்நிலையம் நுணாவிலில் அமைந்துள்ளது. பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் வீடு ஒன்றில் கடந்த நவம்பர் 22ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் திருட்டு இடம்பெற்றது. அது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு உடனடியாகத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொலிஸார் அன்று வரவேயில்லை. மறுநாள் காலை 8.30மணியளவிலேயே சம்பவ இடத்துக்குச் பொலிஸார் சென்றுள்ளனர் என கூட்டத்தில் பிரதேச செயலர்களால் சுட்டிக்காட்ட்பபட்டது. இது தவிர பொலிஸாரினால் அனுப்பி வைக்கப்படும் கடிதங்கள் கூடத் தனிச் சிங்களத்திலேயே அனுப்பப்படுகின்றன. வவுனியா பொலிஸாரால் அண்மையில் அவ்வாறு தனிச் சிங்கள மொழியில் கடிதம் அனுப்பப்பட்ட விடயமும் அங்கு எடுத்துக் காட்டப்பட்டது. இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரிகள், தவறுதலாகச் சில சம்பவங்கள் அவ்வாறு இடம்பெறுகின்றன. அதனைத் திருத்துகிறோம். வவுனியா சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்துகிறோம் – என்று தெரிவித்துள்ளனர்.