இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேச ஏற்பாடு-

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், கைப்பற்றப்பட்டிருக்கும் படகுகளையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிகையை வலியுறுத்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலுவின் தலைமையில் தமிழக மீனவ பிரதிநிதிகள் புதுடில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது இலங்கைச் சிறையிலுள்ள 227 மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 77 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர். சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், இருநாட்டு மீனவர்கள் இடையிலும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுசெய்ய மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக தமிழக அரசிடமும் இலங்கை அரசிடமும் தொடர்புகொண்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு-

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியிலுள்ள தோட்டக் காணியிலிருந்து எரிந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காணியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதை அறிந்த அயலவர்கள், சுன்னாகம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 42வயதான வைத்தியலிங்கம் செல்வகணேசன் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். சடலம் ரயர் போட்டு எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலத்திற்கு அருகில் அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை பொலிஸார் மீட்டதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குச்சவெளி வெடிவிபத்தில் சிறுவன் உயிரிழப்பு-

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவரும் காயமடைந்தவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். சம்பவத்தில் 6வயதுச் சிறுவன் றினோஸ் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளார். அத்துடன் அவரின் சகோதரர்களான 10வயதான றிமாஸ் 03வயதான றினோஸா ஆகியோர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்கள் வீட்டு வளவில் கிடந்த மர்ம பொருளொன்றை எடுத்து அதில் ஆணி அடிக்க முற்பட்டபோது அந்த பொருள் வெடித்ததாக கூறப்படுகின்றது.

பாடசாலையில் கொள்ளையிடப்பட்ட கனிணிகள் மீட்பு, மூவர் கைது-

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தைமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் கொள்ளையிடப்பட்ட கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் கொள்ளையுடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேகநபர்களையும் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் 26ம் திகதி காவத்தைமுனை அல் அமீன் வித்தியாலய கணினி அறை உடைக்கப்பட்டு, கணினிகள் இரண்டு கொள்ளையிடப்பட்டதாக, பாடசாலை நிறுவாகத்தினரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத் துறையினரின் தகவலின்படி, கணினிகள் இரண்டும் மீட்கப்பட்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயிலில் தீ விபத்து, வெளியில் பாய்ந்தவர்களில் மூவர் உயிரிழப்பு-

மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கிய பயணித்த ரயிலின் இயந்திரத்தில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வியாங்கொடையில் வைத்தே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட வேளையில் அந்த ரயிலிருந்து பாய்ந்து தப்புவதற்கு முயன்றவர்களில், கொழும்பை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு மூவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் பலியானவர்கள் வரக்காபொலை, மெதவிய பகுதியைச் சேர்ந்த தம்பதியரும் வான்படையைச் சேர்ந்த ஒருவர் எனவும் அறியப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடலில் விபத்துக்குள்ளான இரு இளைஞர்கள் மீட்பு-

திருகோணமலை உப்புவெளி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றநிலையில் விபத்துக்குள்ளான இரு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். நேற்று விபத்துக்குள்ளான இந்த இரு இளைஞர்களும், சீகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. குறித்த கடற்பகுதியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளாலேயே இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உறவினர்களுடன் சுற்றுலாவின் நிமித்தம் இந்த கடற்பகுதிக்கு குளிப்பதற்காக சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் இஷ்ரேல் மற்றும் பாலஸ்தீன விஜயம்-

ஜனாதிபதி மகிந்த ராபக்ஷ ஜனவரி மாதம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு நாட்கள் விஜயமாக அங்கு செல்லும் அவர், இரண்டு நாடுகளிலும் தலா இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது. இதன்போது ஜனாதிபதி மகிந்த, இஷ்ரேலின் ஜனாதிபதி சிமோன் பெரேஸ் மற்றும் பாலஸ்தீன் ஜனாதிபதி மொஹமூட் அபாஸ் ஆகியோரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கைக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன், கலாசாரம், சுற்றுலா, மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.

யாழ். தளபதி ஹத்துருசிங்க உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம்-

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உட்பட ஆறு மேஜர் ஜெனரல் தரமுடைய அதிகாரிகளுக்கு ஜனவரி 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவ தலைமையகத்தின் நிர்வாக நிறைவேற்று அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகவும், நிர்வாக நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகவும், மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க், ஆயுதப் படைப்பிரிவின் பிரதம தளபதியாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர். இதேவேளை, இராணுவ செயலாளராக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் எஸ்.ரணசிங்க, கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதியாகவும், இராணுவ செயலாளராக மேஜர்ஜெனரல் டி.ஏ.கருணாசேகரவும் இடமாற்றப்பட்டுள்ளனர். அதேசமயம் பிரிகேடியர் தரமுடைய ஐந்து இராணுவ அதிகாரிகளுக்கும் அடுத்த வருடத்திலிருந்து இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. இராணுவ தலைமையகத்தின் இராணுவ உதவி நிதிக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் சி.கே.ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதிமுதல் வடக்கின் முன்னோக்கிய பரமாரிப்பு பிரிவின் கட்டளை அதிகாரியாக பதவிமாற்றம் பெற்றுள்ளார். தற்சமயம் வடக்கின் முன்னோக்கிய பராமரிப்பு பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஏ.வி.ரூபசிங்க, இராணுவ தலைமையகத்தின் இராணுவ உதவி நிதிக்கு பொறுப்பான இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியின் முன்னோக்கிய பராமரிப்பு பிரிவின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் டபிள்யூ. காரியவசமும், இராணுவ தலைமையக தொழில்பாடுகளின் இயக்குநராக பிரிகேடியர் முதன்னயகேவும், இராணுவ மரபுப் பிரிவின் இயக்குநராக பிரிகேடியர் வி.ஏ.சுதசிங்கவும் இடமாற்றம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.