தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டார்-

tamil_prabakaran_CIவிசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கிளிநொச்சியில் இராணுவ முகாமை படம்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை நாடு கடத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார். பின்னர் மகா தமிழ் பிரபாகரன் குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 6.00 மணிக்கு சென்னை நோக்கி பயணித்த விமானத்தில் தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன், புலித்தடம் தேடி என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி பின் அதனை புத்தகமாக வெளியிட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவத் துறைக்கு தெரிவான மட்டக்களப்பு மாணவி-

v1அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி விஞ்ஞான பிரிவில் பேத்தாழை பிரதேசத்தில் இருந்து பற்குணராஜா தயானி 1 யு, 2 டீ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 21வது நிலையினை பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளார். மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலையில் உயர்தரம் பயின்று பரீட்சைக்கு தோற்றியிருந்தார். இவர் ஆரம்பம் முதல் க.பொ.த. சாதாரணம் வரை பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். இவர் சாதாரண தர பரீட்சையில் 8 யு, 1ஊ பெற்று பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் முதலிடத்தை பெற்றிருந்தார். பரீட்சையில் சித்தி தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவி, மிகுந்த குடும்ப கஷ்டத்தின் மத்தியில் கல்வியை தொடர்ந்ததாகவும் ஆரம்பம் முதல் தனது பெற்றோர் தன்னை வைத்தியராக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், வறிய நிலையிலும் தன்னை கற்பித்ததாகவும் இந்த நிலைக்கு வர உதவிய பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அரசியல் அமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும் – வாசுதேவ-

vaasudevaஅரசியலமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணனி வலியுறுத்தியுள்ளது. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னணியின் பிரதம செயலரும் அமைச்சருமான வாசுதேவ நாணாயக்கார இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். லிபரல் ஜனநாயகத்தை மக்கள் ஜனநாயமாக மாற்றி அமைப்பதற்கான எமது பயணத்தில் முதலாவது இலக்காக அமைவது அரசியலமைப்பு எழுச்சியாகும். இதனை இந்நாட்டில் நடுத்தர வகுப்பினரின் ஆயுதமாக செயற்படுகின்ற லிபரல் ஜனநாயகமாக உள்ள ஏனைய சக்திகளின் கரங்களுக்கு செல்ல அனுமதிக்க முடியாது. ஆகவே, இந்த அரசியல் அமைப்பின் தேர்தல் முறைமை மற்றும் நிறைவேற்று அதிகாரம் என்பதற்கு பதிலாக இந்த நாட்டின் மக்களின் ஜனநாயக சிந்தனை அத்துடன் சமூக அபிவிருத்தி ஏற்படும் வகையில் புதிய ஜனநாயக மாற்றத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். இதற்காக 2014 ஆம் ஆண்டில் முகாமிட்டு செயற்படுவோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரணைமடு நீர் விநியோகத் திட்டம், விவசாயிகள் அதிருப்தி-

v3கிளிநொச்சி, இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரை விநியோகிக்கும் திட்டம் தொடர்பாக கிளிநொச்சி விவசாயிகள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். இந்த நீர்விநியோகத் திட்டம் தொடர்பாக கிளிநொச்சியில் நேற்று முன்தினம் மாலை கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரை விநியோகிக்கும் திட்டத்தினால் தமது விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனத்திற்கும், கிளிநொச்சி மாவட்ட இரணைமடு குளத்துநீரைப் பயன்படுத்தும் 21 அமைப்புக்களுக்கும் இடையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தமது எதிர்ப்பை எழுத்துமூலம் வெளியிடுவது குறித்து விவசாயிகள் தீர்மானமொன்றையும் நிறைவேற்றியுள்ளனர்.

கேதீச்சரம் மனித புதைகுழி தோண்டும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்-

1(3618)மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியின் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியைத் தோண்டும் பணி நேற்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்;னம்; மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி நேற்று தோண்டப்பட்டது. மனித புதைகுழி காணப்படுகின்ற இடத்தைச்சுற்றியுள்ள வீதி உடைக்கப்பட்டு புதைகுழி தோண்டப்பட்டது. இந்நிலையில், மண்டையோடு மற்றும் மனித எச்சங்கள் சிலவும் புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதோடு அதனைச் சூழ்ந்த பகுதிகளும் தோண்டப்பட்டன. மேற்படி மனித புதைக்குழியின் மண் மற்றும் தாவரங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில், விசேட பொலீஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர்களின் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது-

v5வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரால் தூர இடங்களுக்கான போக்குவரத்தை நிறுத்தும் பகிஸ்கரிப்பு போராட்டம் நேற்று மாலை முடிவுக்கு வந்ததாக, வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரி.கே. இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். பரந்தன் ஊடாக முல்லைத்தீவுக்கு சென்ற வவுனியா சங்கத்தை சேர்ந்த பஸ்களை பரந்தன் சந்தியில் கிளிநொச்சி பஸ் உரிமையாளர்கள் மறித்து வைத்துள்ளனர் எனவும் அவற்றை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்து வவுனியா பஸ் உரிமையாளர் சங்கத்தினால் தூர இடங்களுக்கான பஸ் பகிஸ்கரிப்பு இடம்பெற்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். இதேவேளை அரச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த பஸ்களில் மக்கள் முண்டியடித்து ஏறமுற்பட்டதால், வயோதிபர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். இந்நிலையில் நேற்றுமாலை வடமாகாண பஸ் உரிமையாளர் சங்கங்களின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் பகிஸ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றுமுன்தினம் வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தால் முறைகேடான விதத்தில் சில இடங்களுக்கு சேவை இடம்பெறுவதாகவும், இதனை தடுத்துநிறுத்த வேண்டும் எனவும் கோரி வவுனியா மாவட்டம் தவிர்ந்த வட மாகாணத்தை சேர்ந்த ஏனைய மாவட்ட தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தன.

தமிழ் பெண்ணின் வீடு எரிப்பு, நால்வர் கைது-

imagesCAYGW205வவுனியா சுந்தரபுரத்தில் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணின் வீட்டை எரித்த குற்றச்சாட்டில் நால்வரை சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா – சுந்தரபுரம் வீட்டுத் திட்ட பகுதியில் இராணுவத்தில் இணைந்துள்ள யுவதியொருவரின் வீடு நேற்று அதிகாலை இனந்தெரியாதோரால் எரியூட்டப்பட்டிருந்தது. எனினும் சம்பவம் இடம்பெற்றவேளை தாயார் அவரது மகன் வீட்டிற்கு சென்றிருந்ததுடன், ஏனையவர்கள் அருகில் உள்ள வீடொன்றில் இரவு தங்கியிருந்த நிலையில் குறித்த வீட்டிற்குள் நுழைந்து பெறுமதிமிக்க தளபாடங்கள், ஆவணங்களை தீயிட்டு எரித்துள்ளனர். அத்துடன் வீடும் எரியூட்டப்பட்டுள்ளது. தற்போது வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டின் பாதிக்கப்பட்ட வீட்டார் தங்குவதற்கு தற்காலிக கொட்டகை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரால் சமைத்த உணவும் வழங்கப்படுகிறது. இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.