வலி தெற்கு இளைஞர் கழக சம்மேளனத்தின் விளையாட்டுப் போட்டி-
யாழ். வலி தெற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் நடாத்தும் தாச்சு விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு நேற்றுமாலை உடுவில் உதயசூரியன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. வலி தெற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் திரு.விஜிதரன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. தாவடி சிறீ காளியம்பாள் விளையாட்டுக் கழகத்திற்கும், தையிட்டி வள்ளுவன் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் தாச்சி இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் வள்ளுவன் விளையாட்டுக் கழகம் 6இற்கு 2என்கின்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றியடைந்து சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது. இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. ஆனோல்ட் மற்றும் வடமாகாண தாச்சி விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத் தலைவர் திரு. சண்முகலிங்கம், சுன்னாகம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இறுதிப்போட்டி மற்றும் அதையொட்டிய நிகழ்வுகளில் ஊர்ப் பிரமுகர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.