மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 7,765 முறைப்பாடுகள் பதிவு-

4இந்த வருடத்தின் (2013) இதுவரையான காலப்பகுதியில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 7,765 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகளவிலான முறைப்பாடுகள் பொலிஸார் தொடர்பில் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீப மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். அத்துடன் கல்வி அமைச்சு மற்றும் அரச நிறுவனங்கள் குறித்தும் அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பில் 1996 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். அதற்கான தீர்வுகள் விரைவில் வழங்கப்படும் என ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

இந்திய வீட்டுத் திட்டம்-

3இந்திய வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் வட கிழக்குப் பகுதிகளில் 2013ம் ஆண்டு இலங்கையரசின் ஒத்துழைப்புடன் 10250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. யுத்தத்தால் அகதியானவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 43000 இந்திய வீட்டுத் திட்டத்தில் 10184 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் யாழ். மாவட்டத்தில் 1832 வீடுகளும் 3090 வீடுகள் கிளிநொச்சி மாவட்டத்திலும் 3540 வீடுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் 1074 வீடுகள் மன்னார் மாவட்டத்திலும் 648 வீடுகள் வவுனியா மாவட்டத்திலும் 66 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 100 வீடுகள் நவீனமயப்படுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் 2,50,000 ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. 7.8 மில்லியன் ரூபா பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்பிலிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வீட்டுத்திட்டப் பணிகள் 2012 ஒக்டோபர் 2ம்திகதி ஆரம்பிக்கப்பட்டது. 2014ம் ஆண்டில் 16,000 வீடுகளை கட்டி முடிக்க எதிர்பார்த்துள்ளோம். 2015ம் ஆண்டில் 17,000 வீடுகளை கட்டிமுடிக்க எதிர்பார்த்துள்ளோம் என அவ் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாக்காளர் பெயர்ப் பட்டியல் இன்று உறுதிப்படுத்தல்-

62013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் இன்று உறுதிப்படுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களால் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் 2013ஆம் ஆண்டுக்கான பெயர்ப்பட்டியலின் முதலாவது பிரதியை நாளைமுதல் வாக்காளர்கள் பார்வையிட முடியுமெனவும் அவர் கூறியுள்ளார். 2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலின் இறுதி அச்சுப்பிரதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் வெடிப்புச் சம்பவம்-

யாழ்., ஏழாலைப் பகுதியில் குப்பையினை எரித்தபோது அதனுள் இருந்த மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது. யாழ்., ஏழாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று தனது காணியிலுள்ள பாழடைந்த கிணற்றினை துப்புரவு செய்தபோது குப்பைகளை வெளியில் எடுத்து எரித்தநிலையில் அதற்குள்ளிருந்த மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள சுன்னாகம் பொலிஸார், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மங்கள சமரவீர வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு-

5ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கு சொந்தமான பாணந்துறை பிரதேசத்திலுள்ள வீட்டுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரவு பகலாக இவ்வாறாக பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நேற்றுப் பகல் வேளையில் குறித்த வீட்டினுள் கொள்ளையர்கள் நுழைந்ததாக மங்கள சமரவீர முறைப்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு பாதுகுhப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மதவாச்சி – மன்னார் வீதியில் இளைஞன் சடலமாக மீட்பு-

kaiமதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள மைல் கல்லுக்கருகில் நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றுமாலை 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்த இந்நபர் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சீப்புகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 28வயதான ஒருவரே இவ்வாறு மரணமாகியுள்ளார். சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.

வடக்கில் மீண்டும் கரும்பு உற்பத்திக்கென காணி சுவீகரிப்பு-

கரும்பு உற்பத்தியை மேற்கொள்வதற்கென வடக்கில் பெருமளவான காணிகளை சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் 71ஆயிரத்து 716 ஏக்கர் காணிளை சுவீகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் 3ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடும் அமைச்சரவையில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இதற்கிணங்க வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிகுளம், ஓமந்தை, கனகராயன்குளம், நயினாமடு, தந்திரிமலை ஆகிய பகுதிகளில் 42 ஆயிரத்து 111 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் 24 ஆயிரத்து 340 ஏக்கர் காணிகளும் மன்னார் மாவட்டத்தில் மடு, மாந்தை தெற்கு ஆகிய பகுதிகளில் 5185 ஏக்கர் காணிகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் பகுதியில் 80 ஹெக்டெயர் காணிகளும் சுவீகரிக்கப்படவுள்ளது. கரும்புச் செய்கைக்காக காணி சுவீகரிப்பு என்ற பெயரில் வடக்கில் பெருமளவான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளமை தற்போதைய நிலையில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. லங்கா சீனி தனியார் கம்பனி என்ற நிறுவனமொன்றை ஆரம்பித்து அந்த கம்பனிக்கே இந்தக் காணிகள் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.