Header image alt text

நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வருகை-

Pisvalதெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்றுபகல் இலங்கை வந்தடைந்ததாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. எதிர்வரும் 2ஆம் திகதி வரையிலும் இங்கு தங்கியிருந்து அரசியல் முக்கியஸ்தர்களை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இரு தரப்பு விடயங்கள், போருக்குப் பின்னரான நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக் கூறும் விடயங்கள் தொடர்பில் அவர் இதன்போது கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அவர் தமிழ அரசியல் பிரதிநிதிகளையும் சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

காத்தான்குடியில் படகு கரையொதுங்கியது-

kaththankudi padakuமட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரையில் இன்றுகாலை ஆளில்லாத படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கரையொதுங்கிய இந்த படகு மூங்கில்களால் செய்யப்பட்ட 27 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டது. இப்படகினை, காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் உட்பட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் இராணுவ அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். இந்த படகு மியன்மார் நாட்டு படகாக இருக்கலாம் எனவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு சவுக்கடி கடலிலும் இவ்வாறான ஒரு படகு கரையொதுங்கியதாகவும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் தெரிவித்துள்ளார். குறித்த படகின் சில பகுதிகள் தீப்பற்றி எரிந்து காணப்படுகின்றதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மீனவர் கைது பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் செயல்- தமிழக முதல்வர்-

bஇலங்கை கடற்படையால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கை தமிழக-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையால் கடந்த 29-ம் திகதி கைதுசெய்யப்பட்ட 38 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவில் இலங்கைத் தூதரகம் திறக்க நடவடிக்கை-

keralavil thootharakamஇலங்கைக்கான புதிய துணைத் தூதரகம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பெப்ரவரி மாதம் திறக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்ததன் காரணமாக, இருதரப்பு நல்லுறவில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் வகையில் திருவனந்தபுரத்தில் கௌரவ துணைத் தூதரகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இருதரப்பு நல்லுறவு பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துணைத் தூதரகத்தின் முதன்மை அதிகாரி ஜோமன் ஜோசப்பின் நியமனத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான நியமன உத்தரவை ஜோமன் ஜோசப்பிடம் டெல்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவம்சம் ஒப்படைத்துள்ளார்.

ஜயலத் ஜயவர்த்தனவின் மகன் ஐ.தே.க. சார்பில் கம்பஹாவில் போட்டி-

jeyalath son 2மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் மகன் டாக்டர் கவிந்து ஜயவர்த்தன எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே டாக்டர் கவிந்து ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். எனது தந்தை இந்த நாட்டில் விட்டுச் சென்ற சேவையை தொடரவே நான் அரசியலுக்குள் வந்துள்ளேன். அவர் விட்டுச் சென்ற சேவையை நான் தொடர்வேன். அனைத்து இன மற்றும் அனைத்துப் பகுதி மக்களுக்கும் நான் சேவையாற்றுவேன். எனது தந்தை டாக்டர் ஜயலத் வர்த்தன சகோதர இன மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார். அதனை நான் தொடர்வேன். அத்துடன் அனைத்து இன மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் எலும்புகூடுகளை பெட்டிகளில் அடைக்கும் பணி ஆரம்பம்-

thiruketheeswaram manitha puthaikuli (3)மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை பெட்டிகளில் அடைக்கும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய மனிதப் புதைகுழியை தோண்டும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 18 ஆவது நாளான நேற்று 5 மனித எலும்புக்கூடுகள் பாதுகாப்பாக பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளன. இந்த மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை பாதுகாப்பாக பெட்டிகளில் அடைக்கும் நடவடிக்கைகள் இன்றும் இடம்பெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் தங்கத் தகடுகள் திருட்டு-

imagesமட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தின் நாகதம்பிரான் சந்நிதி உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுதியான இயந்திரத் தகடுகள் களவாடப்பட்டுள்ளன. நேற்று மதியம் ஆலயம் பூஜைக்காக திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவந்தது. நாகதம்பிரான் சந்நிதி உடைக்கப்பட்டு தங்கத் தகடுகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பல ஆலயங்களில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உறுப்பினர்கள் தொகை குறைப்பு-

elections_secretariat_68நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல்களுக்காக, கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உறுப்பினர்கள் தொகை குறைவடைந்து கம்பஹா களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் உறுப்பினர் தொகை அதிகரித்துள்ளது. இதனை தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மூன்று உறுப்புரிமைகள் குறைவடைந்துள்ளதுடன் அதில் இரண்டு உறுப்புரிமை களுத்துறைக்கும் ஒரு உறுப்புரிமை கம்பஹாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் 43 உறுப்பினர்களாக காணப்பட்ட அதேவேளை, இந்த முறை தேர்தலில் அது 40ஆக குறைவடைந்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 20 உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றதுடன் அது தற்சமயம் 22 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் nரிவித்துள்ளது.

அகதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி-

aasi akthikal ennaikai veelchi'இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்கின்றவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அகதிகளின் வருகை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலியக் குழு ஒன்றின் அறிக்கையை மேற்கோள்காட்டி, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த குழு நியமிக்கப்பட்ட 100 நாட்களில், இலங்கையில் இருந்து அகதிகளாக அவுஸ்திரேலியா செல்பவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு மாத காலப்பகுதியில் எந்த ஒரு இலங்கை அகதியும் அவஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்களுக்கு உதவுவது போல் சுஷ்மா நாடகம்-சுதர்சன நாச்சியப்பன்-

sudarsana nachchiyapanதமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை கண்டித்து மீனவர்களுக்கு ஆதரவாக கடல்தாமரை என்ற போராட்டத்தை பாரதீய ஜனதா கட்சி இன்று இராமேசுவரத்தில் நடத்துகிறது. இந்த போராட்டத்துக்கு சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குகிறார். இந்த போராட்டம் பற்றி இன்று சென்னை சென்ற இந்திய மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை பற்றி சுஷ்மா சுவராஜுக்கு நன்றாகவே தெரியும். அவர் இலங்கை அரசுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்ளாதபோதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இலங்கை சென்று வந்தவர். அந்த அளவுக்கு இலங்கை அரசுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். இப்போது தமிழக மீனவர்களுக்கு உதவுவது போல் தேர்தலுக்காக அவர் ஆடும் நாடகம்தான் இந்த போராட்டம். மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு மீனவர்களும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். துறைமுக பகுதிகள் தவிர இதர பகுதிகளில் மீன்பிடிக்க ஒப்பந்தம் பேசி இருக்கிறார்கள். அதுவரை இருநாட்டு அமைச்சர்களோ, அதிகாரிகளோ இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இந்த பிரச்சினைக்கு விரைவில் சுமூக உடன்பாடு ஏற்படும். ஆனால் அதை உடைக்க சிலர் முயலுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் இழப்புகள் கணக்கிடப்பட வேண்டும் – ஹஸன் அலி-

muslim congressஇலங்கையில் போர்க் காலத்தில் முஸ்லிம்கள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. அப்படியான கணக்கெடுப்பை அரசே விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும், அதன் மூலமே முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் பாதிப்புகள் முழுமையாகத் தெரியவரும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலர் ஹஸன் அலி தெரிவித்துள்ளார். தமது தரப்பில் பல அமைப்புகள் இந்தக் கணக்கெடுப்பு மற்றும் குறிப்புகளை சேகரித்திருந்தாலும், அவற்றுக்கு சட்டரீதியான ஒரு அந்தஸ்து இல்லையென்றும், அதன் காரணமாகவே அரசே இப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தமது கோரிக்கை தமிழ் மக்களின் குரலுக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே இருக்கும் என்றும், தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு முரணானது இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். Read more

வவுனியா மனநல காப்பாகப் பிரிவு நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைப்பு-

vavuniya hospital (1) vavuniya hospital (3) vavuniya hospital (5) vavuniya hospital (6) vavuniya hospital (7) vavuniya hospital (9) vavuniya hospital (13) vavuniya hospital (14)வவுனியாவின் முன்னைநாள் உப நகர பிதாவும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியா பொது வைத்தியசாலையின் மனநல காப்பாக பிரிவைச் சேர்ந்த நோயாளிகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வைத்திய கலாநிதி சுதாகரன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வவுனியா ஸ்டார் மீடியா பிரியந்தனின் ஒழுங்கமைப்பில் இப்பொருட்கள் வழங்கப்பட்டன. இப்பொருட்களை வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகர் வைத்திய கலாநிதி அகிலன் அவர்களிடம் திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ்மணி அகளங்கன் ஆசிரியர், கோவில்குளம் இந்துகல்லூரியின் முன்னாள் அதிபர் சிவஞானம், கவிஞர் மாணிக்கம் ஜெகன், கோவில்குளம் இளைஞர் கழக இணைப்பாளர் காண்டீபன், கோவில்குளம் இளைஞர் கழக தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த சதீஸ் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்களான சந்திரன், சுகந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

உகண்டா பாதுகாப்பு அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

ugandaudandaஉகண்டாவின் பாதுகாப்பு அமைச்சரும் அவரது குழுவினரும் இன்றுகாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். யாழ். பலாலி விமான நிலையத்தை அடைந்த உகண்டா பாதுகாப்பு அமைச்சருக்கும் அவரது குழுவினருக்கும் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டு, இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் விமானப்படையின் யாழ்.கட்டளை அதிகாரியினாலும் வரவேற்பளிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் ஒடாங்கோஜீயை உகண்டா நாட்டிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலய தூதுவர் வி.கணநாதன் மற்றும் உகண்டா பிரதி பாதுகாப்பு அலுவலர் லெப்ரினன்ட் ஜெனரல் சாள்ஸ், அன்ஜினா லிவரோ நிறுவன மகாமைத்துவப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜேம்ஸ் மேலினா மற்றும் பலர் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இதனையடுத்து உகண்டா பாதுகாப்பமைச்சர் அடங்கிய குழுவினர் நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன், யாழ்.பொது நூலகத்தினையும், யாழ் கோட்டையையும் பார்வையிட்டுள்ளனர்.

கண்ணிவெடியில் சிக்கி ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் படுகாயம்-

2cயாழ். பருத்தித்துறை நாகர்கோயில் பகுதியில் இன்றையதினம் காலை கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்த ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவன பணியாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இத்தகவலை பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்ணிவெடியில் சிக்கியதால் 22 வயதான ஜே.சயந்தன் எனும் பணியாளரின் கைகள் இரண்டிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் 38 இந்திய மீனவர்கள் கைது-

indian fishermenயாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் 38 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் இன்று அதிகாலை கைதுசெய்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பணிப்பாளர் என்.கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார். இவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர். இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 06 படகுகளில் வந்த 38 இந்திய மீனவர்களையும் இன்று நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல், தென் மாகாணசபைத் தேர்தலுக்கு 1,200 மில்லியன் ரூபா செலவு-

unnamed3கடைசியாக நடைபெற்ற தேர்தலுக்கு செலவான 874 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுமிடத்து மேல் மற்றும் தென் ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு 1,200 மில்லியன் ரூபா செலவாகும் என தேர்தல் திணைக்களம் மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள 14.1 மில்லியன் வாக்காளர்களில் ஆறு மில்லியன் வாக்காளர்கள் இந்த இரண்டு மாகாணங்களில் உள்ளனர். இவ்வாறு பெருந்தொகை வாக்காளர்கள் காணப்படுகின்றமையே செலவு அதிகரிப்புக்கான பிரதான காரணமாகும் என தேர்தலகள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அடிப்படை செலவுகள், வாக்காளர் அட்டை மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடல் உள்ளிட்ட பல செலவுகள் உள்ளன. இது சாதாரணமாக வாக்காளர் ஒருவருக்கு 200 ரூபாவரை செலவாகும். இதுவே அடிப்படை மதிப்பீடாகும் என தேர்தல்கள் ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு-

mahinda-deshapriyaதபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் காலம் பெப்ரவரி 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முன்னர் விண்ணப்பங்களை ஏற்பதற்கான கடைசி நாள் பெப்ரவரி 7ஆம் திகதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த மாகாணசபை தேர்தலில் பிளாஸ்ரிக் வாக்குப் பெட்டிகளையும் சில இடங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மரத்தாலான வாக்குப் பெட்டிகள் செலவு கூடியவை. இதனால் மீள்சுழற்சிக்குள்ளான பிளாஸ்ரிக் கழிவை பயன்படுத்தி செய்யப்பட்ட பெட்டிகளை பயன்படுத்துவோம். இது செலவு குறைந்தாக இருக்கும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகளுக்கு புதிய தலைவர்களை நியமிக்க தடை-

high court2014 வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறை தோற்கடிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கவோ அல்லது இருப்பவர்களை நீக்கவோ கூடாது என உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. அதன்படி மார்ச் மாதம் 31ம் திகதிவரை இவ்வாறு மாற்றம் செய்ய முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளுராட்சி சபை தலைவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது. எனினும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட மாத்தறை, புளத்சிங்கள, கெஸ்பேவ ஆகிய பிரதேச சபைகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தடையின்றி செயற்பட முடியும் என நீதிமன்றம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பிக்குகளுக்கு ஆர்ப்பாட்டம் செய்யத் தடை-

law helpஅக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட சிஹல ராவய அமைப்பின் அனைத்து தேரர்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. அண்மையில் பிரதமர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்த அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்தபோது கொழும்பு நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார். வழக்கு விசாரணை முடியும்வரை சிஹல ராவய அமைப்பின் தேரர்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்ப நல சுகாதார அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு-

srilankaஅரச குடும்ப நல சுகாதார அதிகாரிகள் இன்று காலை தொடக்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து தாதியர்களுக்கு மகப்பேற்று சிகிச்சை சம்பந்தமான பயிற்சிகளை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அரச சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் ஏற்கனவே தாதியர்களுக்கான மகப்பேற்று பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

புல்மோட்டை மீனவர்கள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்-

மீன்பிடி நடவடிக்கைகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து திருகோணமலையின் புல்மோட்டை மீனவர்களால் முன்னெடுக்கபடும் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கொக்கிளாய் களப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற தமக்கு கட்டுவலையைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் திணைக்களம் தடை விதித்துள்ளதாக தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுவடுவதாக கூறி பலர் கடற்றொழில் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புல்மோட்டை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும், கொக்கிளாய் களப்பில், ஏனைய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோத முறையிலே மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும், தமக்கு மாத்திரம் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீமன்காமம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-

imagesCA507CSSveemankamam school 28.01.2014 (9)யாழ். தெல்லிப்பளை வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் கல்விபயிலும் பிள்ளைகளுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) யாழ் மாவட்ட பொறுப்பாளர் விஜயபாலன் (சின்ன மெண்டிஸ்) அவர்களின் ஞாபகார்த்தமாக கனடாவிலிருந்து வருகை தந்திருக்கின்ற மனோகரன் (கண்ணன்) அவர்களின் உபயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலையின் அதிபர் திரு.இராமநாதன் அவர்களின் தலைமையில் நேற்றுப் பிற்பகல் 1மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது அப்பாடசாலையின் பழைய மாணவர் மனோகரன் (கண்ணன்) திருமதி மனோகரன், பழைய மாணவர் சிவநாதன், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பாடசாலைப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்கள். Read more

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் மோசடி; வவுனியாவில் ஆர்ப்பாட்டம்-

vavuniya-protest_ vavuniya-protest_1-626x380 vavuniya-protest_2 vavuniya-protest_3-1024x575இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. வீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகம் வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் பயனாளிகள் தெரிவு இடம்பெற்று தற்போது 3ஆம் கட்ட வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டவுள்ள நிலையிலும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய கிராமங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாது அமைச்சரொருவரின் சிபாரிசில் வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாணசபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சி. சிவமோகன், முன்னைநாள் வவுனியா நகரபிதா ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர்களான க.பரமேஸ்வரன், எஸ்.பார்த்தீபன், பிரஜைகள் குழு தலைவர் எஸ். தேவராஜா உட்பட மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

யாழில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணை-

kaanaamt ponavarkal saatsiyamimagesCAOD1KU1காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்திலும் சாட்சியங்களை பதிவுசெய்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. யாழ்ப்பாணத்தில் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை காணாமல்போனவர்களின் உறவினர்கள் தகவல்கள், சாட்சியங்களை வழங்க முடியுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது. காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, வடக்கு, கிழக்கில் 6,500 பேர் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் கடந்த மாதம் 17ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்ததாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது. கிளிநொச்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து முதலாவது இடைக்கால அறிக்கை தயாரிக்கப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது யாழ்ப்பாணத்திலும் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இரு மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முதலாவது அறிக்கை தயாரிக்கப்படுமென காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது.

இரு மொழிகளையும் தாய்மொழியாக ஏற்கவேண்டும் -அமைச்சர் வாசுதேவ-

irumozhi uthavu......தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் எமது தாய்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினைகளும் இல்லையென மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் வடமாகாணத்தில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட விவாதத் தொடரில் வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு நேற்றுப் பிற்பகல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டிலுள்ள பாரதூரமான பிரச்சினை ஒற்றுமையின்மையாகும். இதற்கு இருமொழி கொள்கையென்பது அவசியமானதாகவுள்ளது. நாம் வௌ;வேறு மதங்களினை மதித்து புரிந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் சட்டமீறல்களை தெரியப்படுத்த குழு நியமனம்-

mahinda-deshapriyaதேர்தல் சட்ட திட்டங்கள் மீறப்படுகின்றமை தொடர்பில் ஆராய்ந்து பொலீசாருக்கு தகவல் வழங்குவதற்காக சகல பொலீஸ் பிரிவுகளிலும் பொது அதிகாரி உட்பட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டத்திட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக காவற்துறையினர் மாத்திரமே செயற்பட முடியும் எனவும், எனினும், சில காரணங்கள் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் தலையீட்டை மேற்கொள்ளும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கைக்கு விஜயம்-

Pisvalதெற்கு-மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் எதிர்வரும் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இவர் எதிர்வரும் 2ஆம் திகதி வரையிலும் இங்கு தங்கியிருப்பார். அத்துடன் அரச பிரதிநிதிகளை அவர் சந்திப்பதுடன் யாழிற்கும் விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணத்தில் வடமாகாண பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதுடன் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகேதீஸ்வரத்தில் 16 தடவைகளில் 53 எலும்பு கூடுகள் மீட்பு-

mannarமன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து 16 தடவைகளில் 53 எலும்புப்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை தோண்டப்பட்டபோது மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகளுடன் எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினர் இணைந்தே குறித்த எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர். இதேவேளை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி உள்ள இடத்திற்கு வருகைதந்த குற்றப் புலனாய்வுப்பிரிவினர் (சி.ஐ.டி) நான்காவது நாளாகவும் இன்று தமது விசாரனைகளை அங்கு முன்னெடுத்துள்ளனர். கடந்த டிசெம்பர் 20ஆம் திகதி குறித்த மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டன. மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பான இடம் ஒன்று தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்றுவரை 16 பெட்டிகளில் 18 எலும்;புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மனித புதைக்குழி புதன் கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம்-

GL Peiriesவெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். புதுடில்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது மீனவர் பிரச்சினை, இரு நாட்டு உறவுகள் குறித்து இருவரும் பேசுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் மாநாட்டில், போர்க் குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடாத்த வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அந்த தீர்மானம் குறித்தும், அதற்கு இந்தியா ஆதரவு அளிக்கக்கூடாது என்றும் சல்மான் குர்ஷித்தை, பீரீஸ் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரியவருகிறது.

மரண தண்டனை கைதிகளை ஆராயும் குழுவுடன் நீதியமைச்சர் ஹக்கீம் சந்திப்பு-

hakeem met 1மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை பொறுத்தவரை அத் தண்டனையை சில விதிமுறைகளை அனுசரித்து ஆயுள் தண்டனையாக மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு விதந்துரைப்பதற்காக அத்தகைய குற்றவாளிகள் ஒவ்வொருவர் பற்றியும் உரிய ஆலோசனைகளைத் தமக்கு வழங்குமாறு நீதியமைச்சரும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அது சம்பந்தமாக நியமிக்கப்பட்டுள்ள குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளார். Read more

யுத்த வடுவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை-இமெல்டா சுகுமார்-

imelda sugumarயுத்த வடுவால் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறு ஆலோசனை வழிகாட்டல் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளதாக சமூக சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வழிகாட்டல் சிகிச்சை முறையில் வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு இவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக இமெல்டா சுகுமார் கூறியுள்ளார். மேலும், வடக்கு கிழக்கு மாவட்டச் செயலக அடிப்படையில் சமூக நல மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. நாள் தோறும் பத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று உருவாக்கப்பட உள்ளது. யுத்த கால உளவியல் பாதிப்புக்களுக்கு தீர்வு காணுவது தொடர்பில் தெளிவான திட்டங்கள் வகுக்கப்படவில்லை. விரைவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இமெல்டா சுகுமார் மேலும் கூறியுள்ளார்.

இலங்கைகெதிரான பிரேரணையை முன்வைப்பதில் அமெரிக்கா உறுதி-

imagesCAH8ITDXஎதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிரான யோசனையை முன்வைக்கவுள்ளதாக அமெரிக்கா நேற்று மீண்டும் உறுதிப்படு;த்தியுள்ளது. எவ்வாறாயினும், மாநாட்டின்போது இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பது பற்றி அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தால் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இலங்கையின் பொறுப்புக்கூறும் செயற்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இதற்கு முன்னரும் மனிதவுரிமைகள் ஆணையகம் நிறைவேற்றிய யோசனைகளின் பரிந்துரைகளை செயற்படுத்தாமை தொடர்பில் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக மூன்றாவது யோசனையை கொண்டு வருவதற்கு இந்நிலைமை தாக்கம் செலுத்தியதாக ராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் பாரிய பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இலங்கையில் இடம்பெற்ற 3 தசாப்த கால யுத்தத்தை நிறைவுசெய்த பின்னர் 5 வருட காலப்பகுதியில் மேம்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பில் அமெரிக்காவுக்கு விளக்கமளிக்கும் விஜயமாக அமெரிக்க தரப்பினர் இதனைக் கருதுகின்றனர்.

கப்பம் கொடுப்பதை நிறுத்தும் தீர்மானத்திற்கு பாதுகாப்பு பேரவை அங்கீகாரம்-

imagesCA5L8U3Dபயங்கரவாத குழுக்களுக்கு நாடுகள் கப்பம் கொடுப்பதை நிறுத்தும் தீர்மானத்திற்கு ஐ.நா பாதுகாப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடுகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் பிரித்தானியாவினால் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் பணயக் கைதிகளிடமிருந்து அல் கைதா இயக்கத்துடன் தொடர்புடைய குழுக்கள் 105 மில்லியன் அமெரிக்க டொலர்களை கப்பமாக பெற்றுள்ளதாக ஐ.நாவிற்கான பிரித்தானிய தூதுவர் கூறியுள்ளார். இத்தீர்மானத்தில் புதிய சட்டரீதியான விடயங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை. 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு பேரவையில் இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.

தபால் மூலம் வாக்களிப்போர் தகவல்களைப் பெற 1919 அறிமுகம்-

anjal vaakkalippu 1தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் அரச ஊழியர்கள் தமது பதிவு தொடர்பிலான தகவல்களை, அரச தகவல் கேந்திர நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் கடமைகளில் ஈடுபடும், தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் பதிவு தொடர்பான தகவல்களை, 1919 என்ற அரச தகவல் கேந்திர நிலையத்தின் தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. நெருக்கடி நேரத்தில் இந்தத் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள சிரமம் ஏற்படுவதால், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலீஸ் மா அதிபருக்கு பவ்ரல் அமைப்பு மனு-

paffrelபவ்ரல் அமைப்பினால் எதிர்வரும் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில், காவல்துறை மா அதிபருக்கு நேற்று மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்களுக்கு அமைய இந்தமுறை தேர்தலின்போது அவதானம் செலுத்தப்பட வேண்டிய சில விடயங்கள் குறித்து அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில், அரசாங்க சொத்துக்களின் முறையற்ற பயன்பாடு, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் சிவப்பு இலக்கத் தகடு பதித்த வாகனங்களை பயன்படுத்துதல் போன்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளன. இதேவேளை, தேர்தல் பிரசாங்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையினரால் வழங்கப்படும் பாதுகாப்பு பக்கச்சார்பின்றி சமநிலைமையாக அமையவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. பிரசாரங்களுக்கான அனுமதிகளும் சமாந்தரமாக அமைய வேண்டும். தேர்தல் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்துக்கட்சி தேர்தல் வன்முறை கண்காணிப்பு மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் காவல்துறையிடம் ஒப்படைக்கும் போது கூடிய கவனம் செலுத்துமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

நியுசிலாந்தில் இலங்கை மாலுமிகள் இன்னல்-

imagesCAFCRLNUநியுசிலாந்து – நோஃபுலொக் தீவுக்கு அருகில் அசாதாரண காலநிலை காரணமாக மீனவ படகொன்று சிக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. நியுசிலாந்தில இருந்து குயின்ஸ்லான்டின் கிலேட்ஸ்டோன் பகுதிக்கு குறித்த படகு பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் இலங்கையைச் சேர்ந்த பல பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் மறுமுனைக்கு செல்வதற்கான வீசா அனுமதிப்பத்திரங்களை கொண்டிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ட்ரோலர் படகு ஏற்கனவே, பயண ஆரம்பத்தின்போது தாமத்ததாக கப்பல்துறை முகவர் ஜெஸ்மின் கெய்ரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலிருந்து ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றம்-

Colombo peopleகொழும்பு நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின்கீழ் பௌத்தலோக மாவத்தையில் இருந்து ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஸ்யாவின் புதிய தூதரகம் அமையவுள்ள இடத்தில் உள்ள மக்களே இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த இடத்தில் உள்ள 9 ஏக்கர் காணியை இலங்கை அரசாங்கம், ரஸ்யாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதற்காக குறித்த பிரதேசத்தை முழுமையாக சன நடமாட்டம் அற்ற பிரதேசமாக உருவாக்கி தருவதற்கும் இலங்கை அரசாங்கம் ரஸ்யாவுக்கு உறுதியளித்துள்ளது. அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமானால், ரஸ்ய தூதரகத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றப்படும் ஆபத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குடும்பங்களின் பரம்பரையினர் பௌத்தலோக மாவத்தையில் சுமார் 100 வருடங்களாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு விவகாரத்தில் இராஜதந்திரிகள் தலையீடு;-கோத்தபாய-

Kothabayaஇலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சில வெளிநாட்டு இராஜதந்திரிகள் தலையீடு செய்கின்றனர் என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் ஹில்டன் விடுதியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையைத் தமது நிகழ்ச்சி நிரலின்கீழ் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி முயற்சிக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் அதிகளவு படை முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயங்கள் சுருக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புக்குத் தேவையான கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களில் மட்டுமே தற்போது வடக்கில் படையினர் நிலை கொண்டுள்ளனர். வடக்கில் சட்டம் ஒழுங்கை முழுமையாக பொலிஸாரே கவனித்துக் கொள்கின்றனர். இதற்கென வடக்கு, கிழக்கில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டு, தமிழ்பேசும் பொலிஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் இழக்கப்பட்ட வாய்ப்புகளை இலங்கை இப்போது மீளப்பெற்று வருகிறது. போருக்குப் பின்னர், குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சிலர் அரசின் பெயரைக் கெடுக்க முனைகின்றனர். பிரச்சினைகளை நியாயமாகத் தீர்க்க விரும்பினால் அவர்கள், எமது பிரச்சினைகளை அனைத்துலக கவனத்துக்கு கொண்டு செல்லாமல் உள்நாட்டு செயல் முறைகளின் மூலம் தீர்ப்பதற்கு அரசுடன் கலந்துரையாட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளன. வடக்கில் முழுமையான அமைதி நிலை நாட்டப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா வீதியோரத்தில் பழங்காலத்து நாணயங்கள் மீட்பு-

vavuniya Nanayamவவுனியா, மருக்காரம்பளையில் வீதி திருத்தப் பணியின்போது பழங்காலத்து நாணயங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. தாண்டிக்குளத்தில் இருந்து கல்மடு வரையான வீதி தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் மருக்காரமபளை கிராமத்தில் வீதிக்கு அருகாமையில் நீர் ஓடுவதற்கான கால்வாயை கனரக இயந்திரத்தின் மூலம் தோண்டியபோதே சுமார் 120 பழங்காலத்து நாணயங்கள் மீட்கப்பட்டன. மண் பானையொன்றில் காணப்பட்ட இந் நாணயங்கள் எக்காலத்துக்குரியவை என்பதனை அறிவதற்காக தொல்பொருள் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர மேற்கொண்டுள்ளார். சுமார் இரண்டு அடி தாழ்ப்பத்தில் வீதியோரத்தில் காணப்பட்ட இந் நாணயங்களில் சின்னங்கள் பொறிக்கப்பட்டு காணப்பட்டதுடன் சோதமடையாத நிலையில் காணப்பட்டது. கனரக இயந்திரம் மூலம் கால்வாய் திருத்தம் செய்யப்பட்டு வருவதனால் இந் நாணயங்கள் வைக்கப்பட்டிருந்த பானை உடைந்து காணப்பட்டதுடன் அதனுள் இருந்த நாணயங்களும் சிதறிக்காணப்பட்டது. இதேவேளை அங்கிருந்து அகற்றப்பட்ட மண் வேறோர் இடத்தில் கொட்டப்பட்டு வருவதனால் மேலதிக நாணயங்கள் மண்ணோடு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை சம்பவ இடத்திற்கு வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயகுமார், கிராமசேவகர் எஸ். உமாபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேற்படி பழங்காலத்து நாணயங்களை மீட்டு ஆய்வுக்காக பாதுகாப்பாக எடுத்துச்சென்றுள்ளனர்.

மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைவதற்கு வாய்ப்பு-

courtமரண தண்டனை பெற்றுள்ள கைதிகளுக்கு அதனை ஆயுள் சிறை தண்டனையாக குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனை ஆராயவென விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் கமலநீ டி சில்வா தலைமையில் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கி இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்டி, போகம்பர சிறையில் மரண தண்டனை பெற்றுள்ள கைதிகள் கூரை மீதேறி தமக்கு மரணதண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அது குறித்து ஆராயப்படும் என அதிகாரிகள் கைதிகளிடம் தெரிவித்ததை அடுத்து கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்படி, தற்போது மரண தண்டனை பெற்றுள்ள கைதிகள் குறித்த தகவல் அடங்கிய அறிக்கை ஒன்றை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய மரணதண்டனை கைதிகள் குறித்து ஆராய விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது. மரணதண்டனை பெற்றுள்ள ஒவ்வொரு கைதி குறித்தும் தனித்தனியே ஆராயுமாறு நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம், விசாரணை குழுவிற்கு பணித்துள்ளார். மரண தண்டனை பெற்ற 425 பேர் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிச்சையடிக் கடலில் மூழ்கிய இருவரின் சடலங்கள் மீட்பு-

neeril moolkiமட்டக்களப்பு பனிச்சையடிக் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்கள் மூவரில் இருவரின் சடலங்களை சவுக்கடி கடற்கரையோரத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் நண்பர்கள் 07பேர் ஒன்றாக மேற்படி கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது, மூவர் கடல் அலையால் அள்ளுண்டு சென்றனர். ஏனைய நான்கு பேர் திரும்பி கரைசேர்ந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மற்றையவரது சடலம் தேடப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் இரு மொழி உதவு நிலையம் திறப்பு-

irumozhi uthavu..irumozhi uthavuirumozhi uthavu......மொழி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இரு மொழி உதவு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நிலவிவரும் மொழிசார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ், அமைச்சர் வாசுதேவ நாணயகாரவினால் இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை கலாச்சாரம், பண்பாடு, மொழி அடையாளங்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இரு மொழிக் கொள்கை மற்றும் மொழிசார்ந்த ஒருமைப்பாட்டை அவசியம் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கோடு இந் நிலையம் திறந்துவைக்கப்பட்டதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, வவுனியா மாவட்ட அரச அதிபர், ஜனாதிபதி செயலக வவுனியா இணைப்பாளர் சிவநாதன் கிசோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்க பிரேரணை நிறைவேற்றம்-

fig-17இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று யாழ். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போது வன்னியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் இவ்வாறு கொல்லப்பட்டவர்களுக்கு இன்றுவரை அவர்களை நினைவுகொள்ள நினைவுத்தூபி ஒன்று இல்லாத காரணத்தினால் இந்த மக்களை நினைவுகூறும் வகையில் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சபையில் பிரேரணை ஒன்றை முன்வைத்தார். இதனை மாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் வழிமொழிந்ததைத் தொடர்ந்து, இந்த பிரேரணை சபையில் எதிர்ப்புக்கள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெனீவா செல்ல அனந்திக்கு அனுமதி-

ananthiஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் வட மாகாண சபை சார்பாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு மாகாண சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்குச் செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்புத் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அனந்தி மாகாண சபையில் முன்வைத்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், ‘இந்த விடயம் தொடர்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவராகவுள்ள சகோதரி அனந்தி தகுதியானவர் என நினைக்கின்றேன்’ என்றார். இதனை ஏற்றுக்கொண்ட சபை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு அனந்தி சசிதரனுக்கு அனுமதியளிப்பதாக சபை தவிசாளர் சி.வீ.கே. சிவஞானம் அறிவித்துள்ளார்.

பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெறும் என்ற நம்பிக்கை இல்லை-இரா. சம்பந்தன்

untitledசர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் பக்கச்சார்பற்ற நம்பகத்தன்மையுடன் கூடிய விசாரணையை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் அத்தகையதொரு விசாரணையை நடத்தும் என்ற நம்பிக்கை எவருக்கும் இல்லை என கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்று நிறைவுபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பம்-

gமன்னர் திருகேதீஸ்வரம் பகுதியில் மனித புதைக்குழியில் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த மனித புதைக்குழியில் இதுவரை 14 நாட்கள் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. திருகேதீஸ்வரம், மாந்தை வீதியினூடாக குடிநீர் வழங்குவதற்காக நீர் குழாய்கள் பதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கடந்த வருடம் டிசம்பர் 20ஆம் திகதி இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது 44 மண்டையோடுகள், எழும்புக்கூடுகள் உள்ளிட்ட எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

சொத்து விபரங்களை வெளிப்படுத்தாத வேட்பாளர்களுக்கு அனுமதி அட்டை இல்லை-

unnamed3சொத்து விபரங்களை வெளிப்படுத்தாத வேட்பாளர்களுக்கு அவர்களுக்கான வேட்பாளர் அனுமதி அட்டைகள் வழங்கப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இந்த வேட்பாளர் அனுமதி அட்டைகள் இன்றி அவர்களுக்கு வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு செல்ல முடியாது. இந்நிலையில், வேட்பாளர்கள் தமது செத்து விபரங்களை வெளியிடாத வேட்பாளர்களுக்கு இந்த அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கட்சியின் செயலாளர்களுடனான சந்திப்பின்போது, வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் அனைவரும் தமது சொத்து விபரங்களை தேர்தல்கள் செயலகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் மா அதிபரிடம் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கோரிக்கை-

ilangakoon NK IGPநடைபெறவுள்ள தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலை நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை பக்கச்சார்பின்றி எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனிடம் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கோரியுள்ளன. சட்டம் மற்றும் ஒழுங்கைப் பின்பற்றி தேர்தல் நியாமானதும் நேர்மையானதுமான தேர்தலாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு, பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளது.

பலத்த பாதுகாப்புடன் மாகாண சபை அமர்வில் கமலேந்திரன் பங்கேற்பு-

kamalendran (2)வடமாகாண சபையின் ஐந்தாவது அமர்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் க.கமலேந்திரன் ஆயுதம் தாங்கிய பொலிசார் மற்றும் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்புடன் சபைக்கு அழைத்துவரப்பட்டார். வடமாகாண சபையின் ஜந்தாவது அமர்வு கைதடியிலுள்ள வடமாகாணசபைக் கட்டடத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. இந்த அமர்வுக்கு நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் றெக்சியன் கொலை வழக்கில் கைதாகியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் சிறைக்காவலர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய பொலிசாரின் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் சபைக்கு அழைத்துவரப்பட்டார். பின் சபை அமர்வில் கமல் கலந்துகொண்டார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இன்றைய வடமாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித் தலைவர் க.கமலேந்திரனுக்கு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொண்டர் ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்களாக நியமனம்-

imagesCA1E1D7Kவடமாகாணத்திலுள்ள தமிழ் மொழிமூலம் தொண்டர் ஆசிரியர்களை பகுதிநேர ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான கலந்துரையாடல் இன்றுகாலை 11மணியளவில் வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு பகுதிநேர ஆசிரியர்களாக தற்போது கடமையாற்றி வருபவர்களுக்கு கல்வித்தகைமை அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்கள், டிப்ளோமா கற்கைநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே நிரந்தர நியமனம் வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ. சந்திரசிறி, கல்விஅமைச்சின் செயலாளர் சத்தியசீலன் மற்றும் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

நீரில் மூழ்கி உயிரிழப்புகள்-

neeril moolkiமட்டக்களப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் சிலர் நீரில் மூழ்கியுள்ளனர். மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியைச் சேர்ந்த 7 மாணவர்கள் நேற்றையதினம் இவ்வாறு நீரில் மூழ்கிய நிலையில், அவர்களில் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனினும் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கல்கிஸ்ச கடலில் குளிக்கச் சென்ற ஒருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார். நாகொட மருத்துவமனையைச் சேர்ந்த 35வயதான மருத்துவர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். இந்நிலையில், தொம்பே கபுகொட பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் நீழில் மூழ்கி பலியாகியுள்ளனர். கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு பலியானதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

மெனிக்பாம் முன்பள்ளிக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு-

manickfarm  (2) manickfarm  (3) manickfarm  (5) manickfarm  (11) manickfarm  (12)யாழ். வடலியடைப்பு, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட 17.12.2013 அன்று இறைபதமடைந்த கிருஷ்ணர் கமலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தையொட்டி கனடாவிலுள்ள அன்னாரின் உறவுகளின் 35,000 நிதியுதவியின் கீழ், கோவில்குளம் சிவன்கோவில் முதியோர் இல்ல முதியோர்க்கான சிறப்பு உணவும், அத்தியாவசிய பொருட்களும் கடந்த வெள்ளிக்கிழமை (17.01.2014) வழங்கி வைக்கப்பட்டன. இதன்; தொடர்ச்சியாக. வவுனியா மெனிக்பாம் முன்பள்ளிச் சிறார்களின் நலன்கருதி மேற்படி முன்பள்ளிக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றுகாலை இடம்பெற்றது. புளொட் முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பின்கீழ் இந்நிகழ்வு மெனிக்பாம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் சமூக சேவையாளர் தயா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்நிகழ்வில் கவிஞர் மாணிக்கம் ஜெகன், கிராம அபிவிருதிச் சங்க தலைவர் ந.நடராசா, முன்பள்ளி ஆசிரியர் ச.ஜெசி, கோவில்குளம் இளைஞர் கழக செயலாளர் ஜெனார்த்தனன், கோவில்குளம் இளைஞர் கழக இணைப்பாளர் காண்டீபன், சமூக ஆர்வலரும், கோவில்குளம் இளைஞர் கழக உறுப்பினருமான சதீஸ், பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரன் ஆகியோரும் பெருமளவு பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

யாழில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்-

india kudiyarasu thinam (2)india kudiyarasu thinam (3)இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்றையதினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூரகத்தில் கொண்டாடப்பட்டது. துணைத்தூதரகத்தின் உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் சம்பிரதாயபூர்வமாக இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்திய தேசியக் கீதம் இசைக்கப்பட்டதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் குடியரசு தின வாழ்த்து செய்தி உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் அவர்களினால் வாசிக்கப்பட்டது. இதேவேளை, உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் அவர்களின் உரையும் இடம்பெற்றது. மேலும் யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதரகம் ஆரம்பிக்கப்பட்டு 4ஆவது தடவையாக 2014 ஆண்டு இந்திய குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோர் தகவல் திரட்டும் ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கை-நிமல்கா-

nimalka fernando.....அரசாங்கம் நியமித்துள்ள காணாமற் போனோர் தகவல்களைத் திரட்டும் ஆணைக்குழு ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்பதை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என இனப்பாகுபாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பின் தலைவி நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் விளக்கமளித்துள்ளார். வட மாகாணசபை ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் வடமாகாணசபை முறையாக இயங்க இடமளித்திருக்க வேண்டும். இவ்விடயம் குறித்தும் பேரவையில் பிரஸ்தாபிப்போம். காணாமல் போனோரின் தொடர்பான தகவல்களைத் திரட்டும் ஆணைக்குழு திரட்டும் தகவல்கள் பூரணமானதாக இருக்காது. யுத்தத்தில் ஒரு குடும்பம் முன்பதாக அழிந்திருந்தால் அல்லது வெளிநாடு சென்றிருந்தால் அது குறித்த தகவல்களை இந்த ஆணைக்குழு பதிவு செய்யாது. இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்க முடியாது என நிமல்கா பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நிமல்கா மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

மார்ச்சில் இலங்கைக்கெதிரான மூன்றாவது தீர்மானம்-

srilankaஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக 3ஆவது தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக, அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளமை குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கைக்கு எதிரான 3ஆவது தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் சிசன், தெரியப்படுத்தியுள்ளார். எனினும் நாம் ஜெனீவாவில் தோன்றவுள்ள சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு தயாராகவுள்ளோம் என தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த அறிவிப்பை அடுத்து இலங்கையரசு தமக்கு ஆதரவு தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஆயர் கோரிக்கை-

batti ayar meet Kotabayaதமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதை நாம் அதிகம் விரும்புகின்றோம் எனவே சிறைச்சாலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் புனர்வாழ்வு பெற விரும்பினால் வழக்கறிஞர் ஊடாக சம்மதத்தை தெரிவிக்கவும் என மட்டக்களப்பில் வைத்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பிற்கு சென்றிருந்த பாதுகாப்புச் செயலர் மட்டு ஆயர் யோசப் பொன்னையாவை சந்தித்து பேச்சு நடாத்தியிருந்தார். இதன்போது சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க அல்லது புனர்வாழ்வளிக்க ஆவன செய்யுமாறு மட்டு. ஆயர் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும்போதே பாதுகாப்பு செயலர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஐ.நாவில் இலங்கை பாதுகாக்கப்படுமென தகவல்-

imagesCAATDTCUஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது, இம்முறையும் இலங்கை அரசாங்கம் காப்பாற்றப்படலாம் என நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றவிசாரணையை முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ளபோதிலும், ஏனைய அங்கத்துவ நாடுகளுள் பெரும்பாலானவை இலங்கைக்ககு எதிராக சாதாரண பிரேரணை ஒன்றுக்கே தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் மாதம் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணை இந்தியாவினால் திருத்தப்படாதிருந்தால், அது நிறைவேற்றப்பட்டிருக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த தடவையும் ஐக்கிய நாடுகளின் அங்கத்துவம் கொண்ட நாடுகளில் பெரும்பாலானவை, இலங்கையின் பொறுப்புக் கூற வேண்டிய விடயங்களில் காலதாமதமற்ற செயற்பாட்டினை கோரிய பிரேரணை ஒன்று மாத்திரமே முன்வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமற்போனோர் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் உதவி

missing personsகாணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளின்போது கிடைத்த முறைப்பாடுகள் குறித்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனவர்கள் தொடர்பில் கிடைத்த 150 முறைப்பாடுகள்மீதான முதற்கட்ட விசாரணை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டதாக காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ கூறியுள்ளார். இதில் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய முறைப்பாடுகளை சட்டமாஅதிபரின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இம்மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்காக 150பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் 500க்கும் மேற்பட்டவர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக அங்கு வருகைதந்ததால் பிரிதொரு நாளில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

அரச உயர்மட்ட அதிகாரிகள் முல்லைத்தீவுக்கு விஜயம்-

mulathivuமீள்குடியேற்ற நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. இந்த குழுவில் குடியேற்ற அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் இந்த குழு பங்கேற்றுள்ளது கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு, மணலாறு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலாளர்களும், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான  அமைப்பின் வன்னிப் பிராந்தியந்திற்க்கு பொறுப்பான அதிகாரியும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை முன்னெடுக்க தடையாகவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, குறித்த பகுதிகளில்  மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிகாரிகள் கேப்பாபிலவு, முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தீர்மானம் நிறைவேற்றுவதில் பிரித்தானியா, அமெரிக்கா தீவிரம்-

british america.....எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தீவிர முயற்சி எடுத்துள்ளன. இந்த தீர்மானத்திற்கு பெரும்பான்மை ஆதரவினை திரட்டும் கடுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் செயலாளர் மார்ச் சிம்சன் தெரிவித்துள்ளார். அமைச்சு மட்டத்தில் ஆதரவு திரட்டும் பணிகளை பிரித்தானியா மேற்கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்படாவிட்டால், சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமெனவும் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் செயலாளர் மர்ச் சிம்சன் மேலும் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளணி நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு-

imagesCALD0KWMகிழக்கு மாகாணசபை நிர்வாகத்தின் ஆளணி நியமனத்தில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் விவாதிப்பதற்காக தன்னால் அவசர பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் தெரிவித்துள்ளார். மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் போட்டிப் பரீட்சை மூலம் ஆட்திரட்டலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு மாவட்ட ரீதியாக இன விகிசார அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என இது தொடர்பான அறிவித்தலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் நியமனத்திற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றபோது தகுதிக்குரிய புள்ளிகளை பெற்றிருந்த தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இரா. துரைரெத்தினம் கூறியுள்ளார். போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின்படி 80 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்த 273 தமிழர்களில் ஒருவர் கூட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. ஆனால் 172 முஸ்லிம்களில் 115 பேரும் 184 சிங்களவர்களில் 40 பேரும் தெரிவாகி நியமனம் பெறவிருக்கின்றார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தகர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் கடுவெலயில் மீட்பு

imagesCA4W14EAகண்டி, பேராதனை பொலிஸ் பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் வர்த்தகர் ஒருவரை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெள்ளைநிற வேன் கடுவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் பேராதனை கொழும்பு வீதியில் நானுஓயா பாலத்திற்கருகில் நள்ளிரவுவேளை வீட்டிலிருந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை வெள்ளைநிற வேன் ஒன்றில் கடத்திச் சென்றனர். பின்னர் இவ்வர்த்தகர் தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் கடுகண்ணாவ வீதியில் பாழடைந்த இடம் ஒன்றில் கைவிடப்பட்டிருந்தார். இந்நிலையில் பொதுமக்கள் அவரை மீட்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பேராதனை பொலிஸார் வர்த்தகரை கண்டி வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் கடுவல பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சாரதி மற்றும் சந்தேகநபர்கள் தற்போது தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலி தெற்கு பிரதேச சபையில் கணனிமயப்படுத்தப்பட்ட ஆதன வரி செலுத்தும் நிகழ்வு-

vali south 23.01.2014 (21)vali south 23.01.2014 (20)யாழ். வலி தெற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி வார இறுதிநாள் நிகழ்வாக வலி தெற்கு பிரதேச சபையின் கணனி மயப்படுத்தப்பட்ட ஆதன வரி செலுத்தும் நிகழ்வு நேற்று முன்தினம் (23.01.2014) இடம்பெற்றது. வலி தெற்கு பிரதேச சபையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கணனிமயப்படுத்தப்பட்ட முதலாவது ஆதன வரியினை செலுத்தி இப்பணியை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் அனந்தி சசிதரன், பா.கஜதீபன், சுகிர்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை யாழ். சிறுபிட்டி கிழக்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் முப்பதாவது ஆண்டுவிழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், ஊர்ப் பிரமுகர்கள், பெண்கள், இளைஞர்கள் என பெருமளவிலானோரும் பங்கேற்றிருந்தனர். 

vali south 23.01.2014 (1)vali south 23.01.2014 (3)vali south 23.01.2014 (4)vali south 23.01.2014 (5)vali south 23.01.2014 (7)vali south 23.01.2014 (8)vali south 23.01.2014 (9)vali south 23.01.2014 (10)vali south 23.01.2014 (11)vali south 23.01.2014 (12)vali south 23.01.2014 (13)vali south 23.01.2014 (14)vali south 23.01.2014 (15)vali south 23.01.2014 (16)vali south 23.01.2014 (17)vali south 23.01.2014 (18)vali south 23.01.2014 (19)

 

 

 

 

வேட்புமனு தாக்கலுக்கு அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சிப் பத்திர பிரதி அவசியம்-

elections_secretariat_68எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு தாக்கல் செய்யப்படும் வேட்புமனுவுடன், வேட்பாளர்களின் அடையாள அட்டை அல்லது பிறப்பு அத்தாட்சிப் பத்திர பிரதியும் சமர்ப்பிக்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் சொத்துகள், பொறுப்புகள் தொடர்பிலான பிரகடனங்களின்போது தோன்றும் பிரச்சினைகளை தவிர்ப்பதே இந்நடவடிக்கையின் நோக்கம் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இந்த அடையாள அட்டைகள் மற்றும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களின் பிரதிகள் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் அல்லது சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது. கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் மற்றும் வேட்புமனுவில் உள்ளடக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் முதல் மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேரணையை வலுப்படுத்த நடவடிக்கை-

imagesCA5L8U3Dஇலங்கை அரசுக்கு எதிராக, எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை மேலும் வலுசேர்க்க முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் மார்க் சைமண்ட்ஸ் நேற்றையதினம் நடைபெற்ற பிரித்தானிய நாடாளுமன்ற விவாதத்தின்போது இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் பிரித்தானிய வெளிவிவகார திணைக்களம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மார்க் சைமண்ட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறவருக்கு விசேடஅடையாள அட்டை-

NICஇலங்கையில் குறவர் இன மக்களுள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விசேட அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வனவளத்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஷா இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த இனத்தவர்களுடன் பேசி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மிருகங்களை காட்சிப்படுத்துவதுடன் சாத்திரம் பார்த்து பிழைப்பு நடத்தும் குறித்த மக்கள், நீண்ட காலத்துக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கெண்ணும் பணிகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்க நடவடிக்கை-

mahinda-deshapriyaஎதிர்வரும் மாகாண சபை தேர்தல்களின்போது, வாக்கெண்ணும் பணிகளை மேலும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி பொதுச் செயலாளர்களுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர் மத்தியில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த தேர்தல்களின்போது, அரசாங்க சொத்துகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டதாக கூறியுள்ளார். இம்முறை மீண்டும் வேட்பாளர்கள் அரச வாகனம் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை பயன்படுத்தாமல் இருப்பதற்கும், அவர்களுக்கான பிரசார இடங்களை நிர்ணயிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.