பொலிஸாருக்கு எதிராக அதிகமான முறைப்பாடுகள்- 

LK policeஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் அதிகளவிலான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிரானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 7ஆயிரத்து 765 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 80 வீதமான முறைப்பாடுகள் விசாரணைகள் நடத்தி பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளன. அதன்படி பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் விசாரணை செய்யாமை, துன்புறுத்தல்கள், சட்டவிரோத கைது, தடுத்துவைத்தல்கள் போன்றன தொடர்பிலேயே அமைந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை அகதிகளை ஆஸி நடத்தும் விதம் தொடர்பில் குற்றச்சாட்டு-

2fஇலங்கைத் தமிழ் அகதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஹிட்லர் நடத்துவதுபோல நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ராஜதந்திரி புருஸ் ஹெய்க் இதனைத் தெரிவித்துள்ளார். ஹிட்லர் காலத்தில் யூதர்களின் கருத்துக்கள் கேட்கப்படாமல், அவர்கள் அழிக்கப்பட்டனர். அதேபோன்று தற்போது அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அகதிகளை கேள்விகள் இன்றி நாடுகடத்தி வருகிறது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் அகதி அந்தஸ்து கோருகின்றவர்கள் சட்டத்தரணிகளை சந்திக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. இது ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் சகல தரப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்-ஆளுநர்-

imagesCAA6XM32வட மாகாணத்தில் உள்ள அரச பணியாளர்கள் வட மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். தற்போது வட மாகாண சபை சிறந்த அதிகாரத்துடன் சிறப்பாக இயங்குகின்றது. வடக்கில் உள்ள அரச அதிகாரிகள் அனைவரும், மாகாண சபையின் செயற்பாடுகள் சிறப்பாக முன் எடுக்கப்படுவதற்கும், மக்களின் நலனுக்காகவும் வட மாகாண சபையுடன் இணைந்து ஒத்துழைத்து நடக்க வேண்டும். இதற்காக, மாகாண முதலமைச்சர். மாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இது மாகாண அரசாங்கத்திற்கு மாத்திரமின்றி தேசிய அரசியலுக்கும் நன்மையாக அமையும் என ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.

போதையில் வாகனம் செலுத்திய 2392 சாரதிகள் கைது-

2aநாடு முழுவதும் நேற்றுக்காலை 6 மணி தொடக்கம் இன்று hலை 6 மணி வரை பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 253 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24ம் திகதி மாலைமுதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 2392 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மீட்பு-

2bகடந்த வருடத்தில் மாத்திரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.15 கோடிக்கு அதிகம் பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் தங்கம் தொடர்பில் 93 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். இதன்போது 24 கிலோ 800 கிராம் தங்கம் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வருடத்தில் முதல் சம்பவமாக 22 மில்லின் பெறுமதியான தங்கத்தை சென்னைக்கு கடத்தவிருந்த கொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த நபர் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளார் என லெஸ்லி காமினி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் இராஜினாமா-

rupaஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து மொஹான் சமரநாயக்க இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நேற்றையதினம் கையளித்துள்ளார். எனினும், தான் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து இருப்பேன் என்று மொஹான் சமரநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடியில் சிக்கி பெண் கால் இழப்பு-

2cயாழ். எழுதுமட்டுவாள் ஒட்டவெளி பகுதியில் கண்ணிவெடியில் சிக்கிய பெண் ஒருவர் தனது காலொன்றை இழந்துள்ளார். அதேயிடத்தைச் சேர்ந்த சந்திரசேகரம் புஸ்பமலர் (35) என்ற குடும்பப் பெண்ணே விறகு எடுப்பதற்காக நேற்று பிற்பகல் காணியொன்றிற்குள் சென்றவேளையிலேயே கண்ணிவெடியில் சிக்கியுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேற்படி பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, அங்கு மீளக்குடியமர அண்மையிலேயே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் ஆர்ப்பாட்டம்-

2dஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி பாம்பனில் மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500ற்கும் அதிகமான மீனவர்களும், பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டதாகவும் இந்திய ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக 256 தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் 81 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையிலும், மீனவர் பிரச்சினை தொடர்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியும் பாம்பனில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வி முறையில் மாற்றம்-

First Teaching Hospital-SAITM Hospital Malabeஇவ்வருடம் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்திய கல்வி முறை ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கலை, சமூகக்கல்வி மற்றும் முகாமைத்துவ பீடங்களில் முதலில் இந்த கல்வி முறை மாற்றம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்றவாறு பாடப்புத்தகங்கள் அச்சிடப்படவுள்ளன. விரிவுரைகளுக்கு பதிலாக மாணவர்களின் பங்களிப்பில் கல்வி கற்பிக்கும் முறையை அறிமுகம் செய்வதே நோக்கமாகும். படைப்புத்திறன் மிக்க மாணவர் சந்ததி ஒன்றை உருவாக்கி குழுவாக இயங்கும் வகையில் மாணவர் மத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.