மன்னார் மனித புதைகுழியில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு-
மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இதுவரை 11 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளநிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்றுகாலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண ஆகியோர் முன்னிலையில் இன்றுகாலை 8 மணிமுதல் பிற்பகல் 2.15 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. ஏற்கனவே 11 மனித எழும்புக்கூடுகள் முழுமையாகவும் சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று மேலும் 4 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேவேளை சில தடையப்பொருட்களும் குறித்த புதைகுழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது மீட்கப்பட்ட எழும்புக்கூடுகளை அடையாளப்படுத்தி வருகின்றனர். மேலும் பல மனித எழும்புக்கூடுகள் இருக்கலாம் என தெரியவந்துள்ள நிலையில் அப்பகுதியில் விரிவுபடுத்தி மனித புதைகுழிகள் தோண்டப்படவுள்ளது. இன்று மீட்கப்பட்ட மனித எழும்புக்கூடுகளில் உள்ள மண்டையோடுகள் சிலவற்றின் மேல் பகுதியில் துவாரங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த மனித புதைகுழி தோண்டும் பணி நாளைகாலை மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எழும்புக்கூடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.