Header image alt text

இராமநாதபுரம் அ.த.க பாடசாலை பிள்ளைகளுக்கு புளொட் உதவி-

kiliகிளிநொச்சி கிழக்கு இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இப்பாடசாலையானது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளுள் ஒன்றாகும். இப்பாடசாலையில் 600 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களுள் 180 பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்றுப் பிற்பகல் 2மணியளவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஆறாம் தரத்திற்கு கீழ்;ப்பட்ட 110 மாணவர்களுக்கும், ஆறாம் தரத்திற்கு மேல் க.பொ.த சாதாரண தரம்வரையான மாணவர்களுள் 70 பேருக்குமே இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் இதற்கான நிதி நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், நாகராஜா அவர்களின் தாயாரான தர்மலிங்கம் குஞ்சரம் அவர்கள் மேற்படி கற்றல் உபகரணங்களை பாடசாலைப் பிள்ளைகளுக்கு வழங்கிவைத்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) கிளிநொச்சி கிளை பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது மேற்படி பாடசாலைக்காக திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒருதொகை பணமும் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

kili2 kili3 kili4 kili5 kili6 kili7 kili8kili 1kili-east Ramanathapuram (2)kili-east Ramanathapuram (18)

யுத்தக்குற்றங்கள் தொடர்பான அமெரிக்கத் தூதுவர் இலங்கைக்கு விஜயம்-

யுத்தக் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீவன் ஜே ரெப் நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கைவரும் ஸ்டீவன், எதிர்வரும் 11ம்திகதி வரையில் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்வாரென கூறப்படுகிறது. இந்த சந்திப்புகளின்போது, அவர் இலங்கையின் பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்களில் அவதானம் செலுத்தவுள்ளார். ஸ்டீவன் ரெப் இரண்டாவது தடவையாக இலங்கைக் விஜயம் செய்கிறார். முன்னதாக அவர் கடந்த 2012ம் ஆண்டு பெப்ரவரியில் இலங்கை வந்திருந்தார். அவரது விஜயத்தின் அடிப்படையிலேயே 2012ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை அமெரிக்கா முன்வைத்திருந்தது. இந்நிலையில் மீண்டும் அவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற நிலையில், அது எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை கருதியதாக அமையும் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் போட்டியிடுவோர்க்கு புதிய தகவல்-

மாகாண சபை தேர்தல்களின்போது போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேசிய அடையாள அட்டையில் உள்ள பெயரின்படியே போட்டியிட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களான மேற்கு மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களின் போது வேட்பாளர்கள் தமது தேசிய அடையாள அட்டையில் உள்ள பெயரைக் கொண்டே போட்டியிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையாளருக்கும் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்குமிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலின்போது வேட்பாளர்களுக்கான இலக்கங்களை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலத்திரனியல் அடையாள அட்டைக்கான தரவுகள் திரட்டல்-

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்காக தரவுகள் திரட்டும் பணிகள் நாடுபூராவும் அமைக்கப்பட்டுள்ள 331 நிலையங்களினூடாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு இறுதியில் சகலருக்கும் சர்வதேச தரத்திலான இலத்திரனியல் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மார்ச் மாதத்திலிருந்து கையினால் எழுதப்பட்ட அடையாள அட்டைக்குப் பதிலாக அச்சிடப்பட்ட அடையாள அட்டைகளே விநியோகிக்கப்பட இருப்பதாக குறிப்பிட்ட அவர், வரலாற்றில் முதற் தடவையாக கடந்த வருடத்தில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டதாகவும் கூறினார்..

சிறைச்சாலைக் கூரை மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்-

கண்டி – போகம்பர சிறைச்சாலையின் கூரைமீதேறி கைதிகள் இன்றும் ஆர்ப்பாட்டத்தை தொடர்கின்றனர். நேற்றுமுதல் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ள இவர்களில் மரணதண்டனைக் கைதிகள் 20 பேர் மற்றும் வாழ்நாள் தண்டனைக் கைதிகள் ஐவர் உட்பட முப்பதுபேர் அடங்குகின்றனர். பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் அல்லது தமக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை குறைக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை சிறைச்சாலையினுள் மேலும் பல கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. நேற்றையதினம் முற்பகல் ஆறுபேர் சிறையின் கூரைமீது ஏறி இந்த ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கனேடிய எம்.பி ராதிகா இந்தியாவிற்கு விஜயம்-

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இன்றுகாலை இலங்கையிலிருந்து இந்தியாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். ராதிகா கடந்த டிசம்பர் 28ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இலங்கை விஜயத்தின்போது ராதிகா வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது. எனினும் இலங்கை அதிகாரிகள் தம்மை கடுமையாக எச்சரித்தனர் என ராதிகா சிற்சபேசன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று முற்பகல் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ஜேர்தான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார். ஜனாதிபதி ஜேர்தான் மற்றும் பாலஸ்தீனத்தில் ஒவ்வொரு நாள் தங்கும் அதேவேளை இஸ்ரேலில் இரு நாட்கள் தங்கவுள்ளார்.

கொழும்பு – யாழ். பேரூந்து மீது கல்வீச்சு

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்துமீது இக்கிரிக்கொல்லாவையில் வைத்து நேற்றிரவும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சாரதியான அல்வாய் பகுதியைச் சேர்ந்த எஸ்.யோகராஜா (45) என்பவர் காயமடைந்துள்ளார். கல்வீச்சுத் தாக்குதலினால் பேரூந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சாரதி முதலுதவியினை செய்துவிட்டு, பயணிகளுடன் பருத்தித்துறையை இன்றுக்காலை சென்றடைந்துள்ளார். யாழ். கொழும்பு பேரூந்துகள்மீது மதவாச்சி பிரதேசங்களில் வைத்து அண்மைகாலமாக பரவலாக கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

60 செய்மதி தொலைபேசிகளுடன் ஒருவர் கைது-

தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி பெங்களுரிலிருந்து செய்மதி தொலைபேசிகள் மற்றும் அதற்கு தேவையான 200 உபகரணங்களை கொண்டுவந்த கொழும்பைச் சேர்ந்த ஒருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்கப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபரின் மற்றொரு பயணப்பையிலிருந்து 50 கிலோகிராம் விதைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். இந்த விதைகள் கமத்தொழில் திணைக்கள அனுமதியின்றி கொண்டுவரப்பட்டதாகவும், கைதானவர் அடிக்கடி இந்தியா சென்று வருபவர் என்றும், இன்று அpகாலை இலங்கை வந்தநிலையில் கைதுசெய்யப்பட்டதாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.

வலி.வடக்கு மீள்குடியமர்வு விடயம் ஜனாதிபதியே முடிவு-

யாழ். வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பில் என்னால் எதுவும் கூறமுடியாது. அது தொடர்பில் ஜனாதிபதியே முடிவு செய்வார் என மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் மற்றும் பிரதேச செயலர்களை மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தனியார் வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள மக்களின் மீளக்குடியமர்வு தொடர்பில் அமைச்சரிடம் பிரதேச செயலர்கள் சுட்டிக்காட்டினர். பலாலி விமான நிலையம், காங்கேசன்துறைத் துறைமுகம் ஆகிய இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், மக்களை மீளக்குடியமர்த்த வேண்டும். ஆனால் அதுபற்றி ஜனாதிபதியே முடிவு செய்வார். மீளக்குடியமர்வு இடம்பெறும்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதுவரை நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுக்க முடியும் என்றார்.

அமரர் கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் உதய நாள் மற்றும் பரிசுத் தின நிகழ்வுகள் –

sina sina2அமரர் கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் உதய நாள் மற்றும் பரிசுத் தின நிகழ்வுகள் எதிர்வரும் 11.01.2014 சனிக்கிழமை காலை 8.45மணியளவில் சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வகத்தில் அதன் தலைவர் திரு.ஆ. ரவீந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு வாழ்வக சமூகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.