ஐந்து மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைப்பு-

sunamijaffnaதிருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் கடற்கரையில் இருந்து 100 மீற்றருக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கவேண்டுமென இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதேவேளை, வடபகுதியிலும், வடக்கு கடற்பரப்பிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய புத்தளம் தொடக்கம் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்பு கொந்தளிப்பாகவும், அபாயகரமாகவும் அமையுமென குறிப்பிட்டுள்ளது.

தமிழ் மக்களின் நிலவரங்கள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது-இரா.சம்பந்தன்-

tamilnaduஇந்தியா சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை சந்தித்துள்ளார். இசசந்திப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இதனிடையே, வட மாகாண சபை தேர்தலுக்கு பின்னரான நிலவரங்கள், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் அவர்களால் தெளிவுப்படுத்தப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுமாத்தளனில் மனித எலும்புக்கூடு மீட்பு-

fமுல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் உரிமையாளர் மலசலகூடமொன்றை அமைப்பதற்காக அங்கு குழியொன்றை வெட்டும்போது அதற்குள்ளிலிருந்து மனித எலும்புக்கூடொன்று இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கைதிகளின் சம்பளம் அதிகரிப்பு-

jailகைதிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம்முதல் அதிகரிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளொன்றுக்கு ஒரு ரூபா சம்பளம் பெறும் கைதிக்கு 60 ரூபாவும், 1 ரூபாய் 50சதம் பெறும் கைதிக்கு 75 ரூபாவும், 2 ரூபாய் 50 சதம் பெறும் கைதிக்கு 100 ரூபாவும் வழங்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திராரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். தச்சன், மேசன், பேக்கரி, அச்சு இயந்திரம் மற்றும் சவர்க்கார உற்பத்தி ஆகிய தொழில்களில் ஈடுபடுகின்றவர்களுக்கே சம்பளம் வழங்கப்படுகின்றது. அவ்வாறானவர்கள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைக் கடலில் தத்தளித்த ஆஸி பிரஜைகள் மீட்பு-

see3முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை கடற்பரப்பில் இன்று சிறிய படகொன்றில் தத்தளித்துக்கொண்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. காப்பாற்றப்பட்ட இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். இது தொடர்பில் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிலையம் குறிப்பிட்டுள்ளது. கடற்படையினரால் காப்பற்றப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவரும் முல்லைத்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகம் கூறியுள்ளார். வடபகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையை அறியாமல் இவர்கள் கடலுக்குச் சென்றிருக்கலாம் எனவும்; இதனாலேயே இவர்களின் படகு காற்றில் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இவர்களிடம் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனர்த்தங்களை எதிர்கொள்ளத் தயார் – பிரிகேடியர் ருவன் வணிகசூரிய-

ruwan wanigasuriyaதாழமுக்க தாக்கத்தினால் அனர்த்த நிலைமை ஏற்படும் பட்சத்தில், அதனை எதிர்கொள்வதற்காக முப்படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவசர நிலைமை ஏற்பட்டால் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கும் வகையில், படையினர் தயார்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தற்போதைய வானிலை குறித்து கவனம் செலுத்தி, இடர் முகாமைத்துவ அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பை வழங்க இராணுவம் முன்வந்துள்ளது, கரையோரப் பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான நிவாரணங்களை இராணுவத்தினர் வழங்குவார்கள் என இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார். அதேபோன்று விமானப் படையினர் மற்றும் கடற்படையினரும் அவசர நிலையை எதிர்கொள்வதற்கு தயார்நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

52 ஆவது படைத்தலைமையகம் எதிர்வரும் வாரம் விடுவிக்கப்படுமென அறிவிப்பு-

mahinda hadurusingheயாழ்.மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் பொதுமக்களின் சொத்துக்களை பயன்படுத்தி வருகின்றனர் என இடமாற்றம் பெற்றுச் செல்லும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். கட்டளைத்தளபதி என்ற கடமையில் இருந்து நாளைய தினம் விடுபட்டு இராணுவ தலைமையகத்திற்கு செல்லவுள்ள ஹத்துருசிங்கவிற்கு பிரியாவிடை வைபவம் நேற்று வசாவிளானில் நடைபெற்றது அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். யாழ்.மாவட்டத்தில் இராணுவ தேவைகளுக்காக பொதுமக்களுடைய சொத்துக்கள், வீடுகள் மற்றும் நிலங்களை நாம் பயன்படுத்தி வருகின்றோம். இதேவேளை எதிர்வரும் 8ஆம் திகதி வரணியிலுள்ள 52 ஆவது படைத்தலைமையகம் முற்றாக விடுவிக்கப்படவுள்ளதுடன் உரிமையாளர்களிடம் நிலங்கள் மற்றும் வீடுகளும் கையளிக்கப்படவுள்ளன என அவர் கூறியுள்ளார்.

தெல்லிப்பழை யூனியன்கல்லூரி மாணவி மாணவர் படையணியில் தெரிவு-

studentஇலங்கையின் மாணவர் படையணியின் பெண்களுக்கான மாணவர் படையனியில் இருந்து பங்களாதேசிற்கு பயிற்ச்சிக்காக சென்ற மாணவர் படையணிக் குழுவில் யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவி சஸ்மிதா ஜெகதீஸ்வரன் இடம்பெற்று கடந்தவாரம் பயிற்சியினை நிறைவு செய்துள்ளார். இலங்கையில் மாணவர் படையணியுள்ள 45 பாடசாலைகளில் இருந்து 10 மாணவர்கள் இப்பயிற்சிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரேயொரு தமிழ் மாணவியாக இவர் தெரிவாகியுள்ளார். இப்பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டமை தொடர்பாக சஸ்மிதா கருத்து தெரிவிக்கும்போது ‘மாணவர் படையணியின் பயிற்சியானது நன்மையளித்ததுடன் தலைமைத்துவ ஆற்றல், பயம், கூச்சம் அற்றநிலை விடயங்களினை பொறுப்பெடுத்து செயற்படுகின்ற ஆற்றல் எல்லோரிடமும் சகஜமாக பழகும் திறன் என்பவற்றினை பெற்க்கூடியதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.