வட மாகாணசபை விவகாரத்தில் ஜனாதிபதி அக்கறை செலுத்த வேண்டும்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-
வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்துப் பல்வேறு விடயங்களைத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு வரவேற்கத்தக்கது.
ஆனால், ஜனாதிபதியும் வடமாகாண சபை விவகாரத்தில் முழுமையாக அக்கறை செலுத்தி அதன் சீரான செயற்பாட்டுக்கு உதவ வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வீரகேசரிக்கு மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபையின் செயற்பாட்டை செயற்றிறமை மிக்கதாக மாற்றுவதுடன் மக்களது சுயநிர்ணய கோரிக்கையையும் முன்னெடுக்க வேண்டும். ஆனால், இவை இரண்டினையும் வௌ;வேறாக அணுகுதல் அவசியமாகும்.
இவற்றினை முழுமையாக அடைந்து கொள்வதற்கு மாகாண சபையும் அரசும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும். மாகாண சபை என்பது மத்திய அரசின் கீழான ஒரு விடயம் என்பதால் நாம் அனைத்தையும் தனித்துச் செய்து விடமுடியாது. ஆகவே பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்புகளுடன் காரியங்கள் ஆற்றப்பட வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம், கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் மக்களுக்கு அபரிமிதமான வாக்குறுதிகளை வழங்கி விட்டோம். இருப்பினும் மாகாண சபை ஊடாக அனைத்தையும் செய்ய முடியாது என்ற கருத்தினையும் வெளியிட்டிருந்தோம். ஆனால் நாம் அனைத்தினையும் செய்வோம் என்றே வடபுல தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் ஆதரித்தமைக்கான காரணங்களாக இரண்டினைக் கூறமுடியும். அவர்கள் தங்கள் சுய உரிமைக் கோரிக்கையை வெளிக்காட்டியமை, தங்களது வாழ்வாதார பிரச்சினைக்கான தீர்வை வேண்டி நிற்பது ஆகியனவே இவை.
மேலும் இதுவரை காலமும் செயற்படாதிருந்த ஒரு கட்டமைப்பான வட மாகாண சபையை இயக்குவதிலும் நாம் சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். வடக்கில் கடமையாற்றும் அரச அதிகாரிகளில் பெரும்பாலோனோர் இதுவரை காலமும் ஆளுநரின் கீழே செயற்பட்டு வந்ததனால் அவர்கள் மாகாண சபையின் கீழ் பணியாற்றுவதிலும் சிக்கலான நிலைமைகளை எதிர்கொண்டுள்ளனர். இது அவர்களின் தவறல்ல என்று தெரிவித்துள்ளார்.