சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்தவின் நினைவு தினம்-

vasandaசிரேஷ்ட ஊடகவியலாளரும் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க கொலைசெய்யப்பட்ட ஐந்தாண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டக்கப்பட்டது. அன்னாரது நினைவு தினத்தை முன்னிட்டு விசேட அஞ்சலி வைபவமொன்று கொழும்பு பொரளை பொது மயானத்தில் அமைந்துள்ள அவரது சமாதியின் முன்பாக இடம்பெற்றது. லசந்த விக்கிரமதுங்க 2009ஆம் ஆண்டு, ஜனவரி 8ம்திகதி காலை தனது அலுவலகத்திற்கு செல்லும் வழியில் கல்கிஸ்சையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இதனை நினைவுகூறும் பொருட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள், பொரளையில் உள்ள லசந்தவின் சமாதியின் முன் உருவப் படமொன்றை வைத்து மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செய்துள்ளனர்.

கொழும்பில் காணாமல்போன வர்த்தகர் வீடு திரும்பினார்-

imagesCA4W14EAநேற்று முன்தினம் காணாமற் போனதாக கூறப்பட்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சங்கரலிங்கம் (வயது 52) என்ற வர்த்தகர் இன்று வீடு திரும்பியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு, மெயின் ஸ்ரிட் பகுதியில் இறக்குமதி வியாபரத்தில் ஈடுபட்டுவந்த சங்கரலிங்கம், வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்காக நேற்று முன்தினம் மதியம் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என தெரிவில்லை எனவும் அவரது மனைவி, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு அவர் வீடு திரும்பியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  தான் கடத்தப்பட்டமை தொடர்பில் சங்கரலிங்கம் கூறுகையில்,
வங்கியிலிருந்து வெளியில் வரும்போது கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் வெள்ளை சட்டை, கறுப்பு காற்சட்டை உடுத்தியிருந்த ஒருவர் என்னை சிங்களத்தில் அதட்டிக் கூப்பிட்டார். நான் அவரருகில் சென்று என்னவென்று கேட்டபோது அருகிலிருந்த வானுக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டார்கள். வானுக்குள் மூவர் இருந்தனர். என்னை சத்தம் போடவேண்டாம் என்றும், சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டி வான் ஆசனத்தில் படுக்குமாறு கூறினர். அதன் பின்னர் என்னை எங்கோ ஒரு வீட்டில் அடைத்து வைத்து, என்னிடமிருந்த 8 லட்சம் பணத்தினையும் பறித்துக்கொண்டு, இன்று மதியம் ஆமர் வீதியில் இறக்கிவிட்டுச் சென்றனர்; என்றார்.