அமெரிக்கத் தூதுவர் புதுமாத்தளன் பிரதேசத்திற்கு விஜயம்-
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது புதுமாத்தளன் பாடசாலை, வைத்தியசாலை மற்றும் யுத்த காலத்தில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த ஐ.நா அலுவலகம் என்பவற்றைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன் வன்னியில் ஐ.ஓ.எம் எனப்படும் புலம் பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பின் அலுவலகத்தில் வைத்து முன்னாள் புலி உறுப்பினர்களையும் அவர் இன்று சந்தித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசனும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தார். இதேவேளை வட மாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரனுக்கும் ஸ்டீவன் ஜே ரெப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. அத்துடன் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், மன்னார் ஆயர் ராயப்பு ஜோசெப் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரையும் அவர் நேற்று சந்தித்திருந்தார்.
மல்லாகம் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி திறப்பு-
யாழ். மல்லாகம் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி இன்றுமுற்பகல் 11.30 மணியளவில் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ், நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற ஆணையாளர் அ.பிறேம்சங்கர், மல்லாகம் நீதிமன்ற நீதிபதிகளான சி.சதீஷ்கரன், மேலதிக நீதிபதி மொகமட் ஆகியோர் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து மேளவாத்தியம் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, மல்லாகம் மகா வித்தியாலயம், உடுவில் மகளிர் கல்லாரி மாணவ மாணவிகளின் மேலைத்தேய பேண்ட் வாத்திய இசையுடன் ஊர்வலமாக நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அத்தோடு தேசியக்கொடி ஏற்றல், நினைவுப் பலகை திறந்து வைக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து நீதிமன்றக் கட்டிடத்தை பிரதம நீதியரர் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
லோகோஸ் ஹோப் நடமாடும் புத்தகக் கண்காட்சி கப்பல் திருமலையில்-
லோகோஸ் ஹோப் என்னும் பெயருடைய உலகின் மாபெரும் நடமாடும் புத்தகக் கண்காட்சி கப்பல், திருகோணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறைமுகத்தினை அடைந்துள்ளது. இன்றுபிற்பகல் 3 மணியளவில் வந்த இக் கப்பலில், 60 உலக நாட்டைச் சேர்ந்த 400 உதவியாளர்கள் உள்ளனர். 9 தட்டுக்களைக் கொண்ட இக்கப்பலில் 5000 வகையான புத்தகங்களும் உள்ளன என இதன் இணைப்பாளர் கிறிஸ்தோபர் தெரிவித்துள்ளார். இவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் ஆவார். எதிர்வரும் 16ம் திகதிவரை குறித்த கப்பல் திருகோணமலை சீனக்குடா துறைமுகத்தில் தங்கியிருக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
வாக்காளர் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தல்-
2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும், பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் இந்த பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதனைத் தவிர, கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் 2013ஆம் ஆண்டுக்கான பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 2013ஆம் ஆண்டுக்கான பெயர்ப்பட்டியல் கடந்த 31ஆம்திகதி உறுதிப்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை இந்திய கைதிகள் பரிமாற்றம்-
இலங்கையுடன் பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழ், இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை பரிமாற்றிக் கொள்வது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரியப்படுத்தியிருப்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 275க்கும் அதிகமான மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் தமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இலங்கையைச் சேர்ந்த 223 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை புரிந்துணர்வின் அடிப்படையில் பறிமாற்றிக் கொள்வது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக டீ.ஆர்.பாலு தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்து – லங்கா உடன்படிக்கையை மதிக்க வேண்டும்-சல்மான் குர்சித்-
இந்தியாவில் காணப்படுகின்ற அதிகாரப் பகிர்வினை ஒத்ததாக இலங்கையிலும் அதிகாரப்பகிர்வுகள் வழங்கப்படும் என, இலங்கையரசு உறுதியளித்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்து – இலங்கை உடன்படிக்கைக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும் என இந்தியா, இலங்கையிடம் கோரி வந்துள்ளது. 13ஆம் திருத்தச் சட்டமே இலங்கையில் உள்ள அனைத்தின மக்களும் சமத்துவத்துடனும், சம உரிமையுடனும் வாழ்வதற்கான அடிப்படையை ஏற்படுத்தும். இந்நிலையில் இந்தியாவில் காணப்படுகின்ற கட்டமைப்பின் அடிப்படையில் இலங்கையில் அதிகாரப்பகிர்வினை மேற்கொள்ள, இலங்கை உறுதியளித்துள்ளது என்றார்.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்-
இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்களை இந்த மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இரண்டு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை, பேச்சுவார்த்தைக்கு முன்னர் விடுதலை செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது. மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக நல்லெண்ண அடிப்படையில் தமிழகம் மற்றும் ஆந்திரா சிறைச்சாலைகளிலுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இந்திய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் சுதர்ஷன நாச்சியப்பன் ‘தி இந்து’விற்கு கூறியுள்ளார். அதேபோல், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாவகச்சேரி நீதிமன்றம் திறந்து வைப்பு-
யாழ். சாவகச்சேரியில் புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று திறந்துவைத்து திரைநீக்கம் செய்துள்ளார். சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தனர். இதில் மாவட்ட நீதிமன்றமும் நீதவான் நீதிமன்றமும் இயங்கவுள்ளன. அத்துடன், இலவச சட்ட உதவி மன்றம், சமுதாய சீர்திருத்தப் பிரிவு என்பனவும் இயங்கவுள்ளன. மேலும், இக்கட்டிடத் தொகுதியின் பின்பகுதியில் 02 நீதிபதிகளின் வாசஸ்தலங்களும் ஒரு அரச சட்டத்தரணியின் வாசஸ்தலமும் அமைக்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்நீதிமன்ற கட்டிடத்தொகுதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 159 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
விண்வெளி செல்லவுள்ள தமிழ் மாணவி-
விண்வெளிக்கு முதல்முறையாக செல்வதற்கு தமிழ் மாணவியொருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது. அதில் மிகத் திறமையாக சித்தியடைந்துள்ளார் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மாணவி. அவர் பெயர் சிவேன் ஞானகுலேந்திரன். இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருக்கிறார். அத்தோடு அவர் விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்-
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அமெரிக்காவின் போர்க்குற்ற விசாரணைக்குப் பொறுப்பான தூதுவர் ஸ்டீபன் ஜெ ரெப் இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் தலையீடு மற்றும் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சி ஆகிய செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய விமானப்படை தளபதியாக கோலித குணதிலக்க நியமனம்-
இலங்கையின் புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.