தமிழ் மாணவி விண்வெளி செல்ல தெரிவானமை தமிழ் இனத்திற்கு தனித்துவமான கௌரவம்-வலி மேற்கு தவிசாளர்-

விண்வெளிக்கு முதன்முறையாக செல்வதற்கு தமிழ் மாணவி ஒருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது தமிழ் இனத்திற்கு ஓர் தனித்துவமான கௌரவத்தை வழங்கியுள்ளது. இச் சந்தர்ப்பம் தமிழ் மங்கையருக்கு மிகமிக உயர்ந்த நிலையாகவே உள்ளது. தமிழ் இனம் தனித்துவமான பண்புகளை கொண்ட இனம் என்பதை எமது இனம் பல வடிவங்களில் பல காலங்களில் வெளிப்படுத்தி எமது இனத்தின் பெருமையை உலகறியச் செய்துள்ளது. இவ்வாறே மீண்டும் ஒரு தடவை இவ் தமிழ் மாணவி எமது இனத்தின் பெருமையை உலகறியச் செய்துள்ளார். இம் மாணவிக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவிக்கும் அதேவேளை அவர் மென்மேலும் உயர்வு பெற வாழ்த்துகிறேன்.
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், தவிசாளர், வலிமேற்கு பிரதேச சபை.

யாழ். கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்பு-

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா இன்று கடமைகளை பொறுப்பேற்கின்றார். கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா, இதற்கு முன்னர் செயற்பட்டு வந்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார. யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தின் பிரதம நிறைவேற்று ஜெனரலாக கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்hளர்.

பளை வரையில் பரீட்சார்த்த ரயில் ஓட்டம்-

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் யாழ். எழுதுமட்டுவாள்வரை பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி பளைவரை பரீட்சார்த்த ரயில் ஓட்டம் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை புனரமைப்புக்கு 1,500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்திருந்தது. ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் சேவையை 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 14ஆம் திகதி ஜனாதிபதி ஆரம்பித்து வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மீதி இடங்களுக்கான ரயில் பாதை புனரமைக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது எழுதுமட்டுவாள்வரை முடிவடைந்துள்ளது என அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா-

யாழ். பல்கலைக்கழகத்தின் 29ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று(10.01.2014) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றுவரும் இந்த பட்டமளிப்பு விழாவில், 1369 பேர் பட்டங்கள் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இன்றைய முதல்நாள் அமர்வுகளில் 707 பேருக்கும் நாளைய தினம் நடைபெறவுள்ள இரண்டாம் நாள் அமர்வில் 662 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இணையவில்லை- ஜோன் அமரதுங்க –

தாம் அரசாங்கத்துடன் இணையவிருப்பதாகவும், சபாநாயகர் பதவியை பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் வெளியான செய்தியில் உண்மை இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், தமது விஜயத்தை முடித்து நாடுதிரும்பிய பின்னர் ஊடகத்தினரிடம் அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். அதேநேரம் தமது விஜயம் தொடர்பில் தாம் எதிர்கட்சித் தலைவரிடம் இரகசிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவிருப்பதாக வெளியான செய்தியையும் அவர் நிராகரித்துள்ளார்.

மத்திய கிழக்கிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர் மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். ஜோர்தான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட சிறப்பு தூதுக்குழுவினர் இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர். கடந்த சனிக்கிழமை ஜோர்டான் சென்றிருந்த ஜனாதிபதி, அங்கிருந்து பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்திருந்தார். அங்கு அந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், பல்வேறு உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை-

சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இலங்கை வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சுக்கும் இடையில் தொழிலாளர்கள் தொடர்பில் முதன் முறையாக உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதுபோன்ற எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனிய கூறியுள்ளார். வீட்டுப் பணிப்பெண்களின் பாதுகாப்பு, பணியாளர் உரிமைகளை இந்த உடன்படிக்கையின் மூலம் பேணுவதற்கு முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் – பலஸ்தீனம் ஐ.நா பரிந்துரைக்கு இலங்கை ஆதரவு-

சகல இனத்தவர்கள் மத்தியிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி, அந்நாட்டு ஜனாதிபதி ஷிமோன் பெரெஸ்சை நேற்று ஜெருசலேம் நகரிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்திற்குள் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இதன்போது இஸ்ரேல் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னர் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்ற விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இஸ்ரேல் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன் இஸ்ரேல் – பலஸ்தீன மோதலுக்கான தீர்வாக 2 அரசாங்கங்களை உருவாக்கும் ஐ.நாவின் பரிந்துரைக்கு இலங்கை ஆதரவு வழங்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் சுகாதார ஊழியர்களின் கவனயீர்ப்பு நிறைவு-

மன்னார் மாவட்ட சுகாதார ஊழியர்கள் சிலர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மன்னார் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, முசலி பிரதேச சபை ஆகியவற்றைச் சேர்ந்த தற்காலிக அமைய சுகாதார ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர். சுகாதார ஊழியர் நியமனம் தொடர்பில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட வார்த்தமானி அறிவித்தலை கவனத்திற்கொள்ளாது தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கில் அசாதாரண சூழல் நிலவிய காலப் பகுதியிலும் தாம் சேவையாற்றியதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற சுகாதார ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, மன்னார் மாவட்ட தற்காலிக மற்றும் அமைய சுகாதார ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். ஊழியர்களின் கோரிக்கையை வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன், விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகவும் அதிகாரிகள் இதன்போது உறுதியளித்துள்ளனர். இந்த உறுதிமொழியை அடுத்து மன்னார் மாவட்ட தற்காலிக, அமைய சுகாதார ஊழியர்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை-

இலங்கைச் சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் இந்திய உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது குறித்து திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் ஆணைப்படி வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்தை டெல்லியில் 7ம் திகதி சந்தித்து இலங்கைச் சிறையிலுள்ள தமிழக மீனவர்களை எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னால் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கலைஞரின் வேண்டுகோளை வலியுறுத்தினேன். இதைத் தொடர்ந்து சல்மான் குர்ஷித் இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வெளியுறவுத்துறை இணைச் செயலர் சஞ்சய்சுதீர் நேற்றிரவு 8 மணியளவில் தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கைச் சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக சல்மான் குர்ஷித் மேற்கொண்ட நடவடிக்கையின் விவரங்களை தெரிவித்தார். சல்மான் குர்ஷித் இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிரஸ நேற்றுமாலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களின் விடுதலை பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் இருநாட்டு மீனவர்கள் குழுக்களின் பேச்சுவார்த்தை எதிர்வரும் 20ம்திகதி இந்தியாவில் நடைபெற உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இருநாடுகளின் சிறையில் பிடிப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் எதிர்வரும் பொங்கலுக்குள் விடுவிக்கக் கோரி குர்ஷித் இலங்கை அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும், வெளியுறவுத்துறை இணைச் செயலர் சஞ்சய் சுதீர் தெரிவித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.