காணாமல்போனோர் முறைப்பாடு தொடர்பான விசாரணைகள்-
காணாமற் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வாய்மூல விசாரணை அமர்வுகள் அடுத்தவாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகளின் பிரகாரம் இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார். குறிப்பாக முறைபாடுகளை முன்வைக்குமாறு கடந்த வருடத்தில் 3 தடவைகள் மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். டிசம்பர் 31ஆம் திகதிவரை ஆணைக்குழுவிற்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. இந்த முறைபாடுகள் தொடர்பான வாய்மூல விசாரணைகளை முதலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 18 ஆம், 19 ஆம், 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் கட்டம் கட்டமாக இந்த விசாரணை அமர்வுகள் இடம்பெறவுள்ளன என ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச குறிப்பிட்டுள்ளார்.
மூளாயில் 3வது பஜனைப் பாடசாலை ஆரம்பித்து வைப்பு-
யாழ். வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் 100 பஜனை பாடசாலைத் திட்டத்தின்கீழ் நேற்றையதினம் 3ஆவது பஜனைப் பாடசாலை மூளாய் டச்சு வீதியில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயத்தில் மாலை 5மணியளவில் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சர்வதேச இந்து குருமார் ஒன்றியத் தலைவர் சபா. வாசுதேவக்குருக்கள் வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி .நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோரும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையர்களான தாய், இரு குழந்தைகள் லண்டனில் சடலங்களாக மீட்பு-
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயாரின் உடல்கள் லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. ஏழு மாத ஆண் குழந்தை, நதீபன் மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் அனோபன் உள்ளிட்ட இரண்டு குழந்தைகளின் சடலங்களையும் அவர்களின் தாயாரான ஜெயவாணி வாகேஸ்வரனின் சடலத்தையும் பிரித்தானிய பொலிசார் மீட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு ஜெயவாணியின் கணவர் சக்திவேல் வாகேஸ்வரன் வீட்டுக்கு வந்தபோது மூவருடைய சடலங்களையும் கண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வடமேற்கு லண்டன் வூட்கிறாஞ் குளோஸ் பகுதிக்கு சென்ற பொலிசார் சடலங்களை மீட்டுள்ளனர். 33வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்த பின் தானும் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாமென தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம் தற்கொலையினால் சம்பவித்ததா? என்ற சந்தேகம் தொடர்வதாகவும் தெரிவித்த பிரித்தானிய பொலிசார், இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அமெரிக்க தூதுவர்மீது கண்டனம்-
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜெ செசோனை ஏற்றுக் கொள்ள முடியாத மனிதர் என அறிவிக்குமாறு தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் வசந்த பண்டார ஊடகச் செவ்வியில் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுத்தக் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீவன் ஜே ரெப்புடன் இணைந்து, இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையால் இவ்வாறு அறிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டீவன் ஜே ரெப், புதுமாத்தளன் பகுதிக்கு விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட 3 புகைப்படங்கள், அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு புகைப்படத்தில் 2009ம் ஆண்டு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கருத்திடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டீவன் ஜே ரெப் எல்லைகளை கடந்து செயற்பட்டிருப்பதாகவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக அமெரிக்காவின் தூதுவரை ஏற்றுக் கொள்ளப்படாத ராஜதந்திரி என்று அறிவிக்குமாறும் வசந்தபண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
பாட்டாளிபுரம் பகுதியில் யானை தாக்கி பெண் பலி-
திருகோணமலை, மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. வயோதிப பெண் தோப்பூருக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த வழியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்து வந்த 70வயதான பெண் ஒருவரே யானை தாக்கி உயிரிழந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிணற்றில் விழுந்து சிறுவன் பலி-
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு கிராமத்தில் 8வயதுடைய சிறுவன் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கட்டுகள் உடைந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்று நீரை அள்ளுவதற்கு முயன்றபோது சிறுவன் அதனுள் விழுந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், நீரை அள்ளுவதற்கு முற்பட்டபோதே கிணற்றினுள் விழுந்துள்ளதுடன், அந்த சந்தர்ப்பத்தில் அண்மையில் பெய்த மழையினால் கிணற்றில் நீர் நிரம்பியிருந்துள்ளது. அயலவர்கள் மற்றும் படையினர் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிறுவன் உயிரிழந்திருந்ததாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
லயன் எயார் வானூர்தி எச்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டன-
புலிகளால் வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் லயன்எயார் வானூர்தியில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் இன்று யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1998 செப்டம்பர் 29ம் திகதி பலாலி வானூர்தி தளத்திலிருந்து புறப்பட்ட 10 நிமிடத்தில், மன்னார் – இரணைதீவு வான்பரப்பில் வைத்து இந்த வானூர்திக்கு மேற்படி அனர்த்தம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின்படி, இரணைத்தீவு பகுதியில் கடந்த 2013ம் ஆண்டுமுதல் தேடுதல் பணிகள் இடம்பெற்றன. அங்கிருந்து மீட்கப்பட்ட 72 பொருட்கள் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்-தயான் ஜயதிலக்க-
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் அபாயகரமான பிரதி விளைவுகளை ஏற்படுத்தும் என முன்னாள் இராஜதந்திர அதிகாரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால், இலங்கை மீதான அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் ஜயதிலக்க கூறியுள்ளார். இறுதி போரின்போது நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்த டுவிட்டர் குறுஞ்செய்தி, ‘நடுநிலையற்றது’ என்றும், விசாரணை எதுவும் இல்லாத முன்கூட்டிய அனுமானம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சாதாரண இராஜதந்திர முறைப்படியான வழக்கங்களைவிட வேறுபட்ட விதத்தில் தான் அமெரிக்கா அதிகாரபூர்வமாக நடந்து கொண்டிருக்கிறது என்று கூறிய தயான் ஜயதிலக்க, நட்பு நாடொன்றிடமிருந்து இவ்வாறான வழக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா தீர்மானத்திற்கு சர்வதேசத்திடம் ஆதரவு கோருவோம்-கூட்டமைப்பு-
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்ற யாழில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நாற்பதாவது நினைவு தினத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தமிழராட்சி மாநாட்டின் சம்பவங்கள் இன்றும் எம் கண்முண்னே இருக்கின்றது. இதேபோன்று இதற்குப் பின்னரான தற்போதைய நிலையிலும் எத்தனையோ பல துன்ப, துயரங்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. யுத்தம் முடிவடைந்து, ஒரே நாடு ஒரே மக்கள் என அரசாங்கம் கூறி வருகின்ற நிலையில், தமிழினத்தின் அடையாளங்களை அழித்து இருப்பை கேள்விக்குறியாக்குகின்ற நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையை நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும். 1974, 1981, 1984 ஆண்டுகளில் நடைபெற்ற கலவரத்திற்குப் பின்னர் மிகப்பெரிய பேரழிவினால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடு மனித உரிமை ஆர்வலர்கள் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இலங்கைமீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக எமது மக்கள் பல வழிகளிலும் நடத்திய போராட்டங்கள் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காகவும் தமிழின விடுதலைக்காகவும் பல இலட்சக்கணக்கானோரை நாம் இழந்திருக்கின்றோம். இந்நாட்டின் ஆட்சியிலிருக்கின்ற அரசாங்கங்கள் இவ்வாறு படுகொலை செய்தும் பல ஆயிரக் கணக்கானோரை கடத்தியும் இருக்கின்றது என இன்று அரசிற்கு எதிராக போர்க்குற்றம் சுமத்தப்பட்டு அதனை விசாரிக்க வேண்டுமென சர்வதேசம் வலுவானதொரு கோரிக்கை விடுத்திருக்கின்றது. இந்நிலையில் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையில் எடுக்கவுள்ள தீர்மானங்களில் இந்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இம்முறை நடைபெறவுள்ள மனித உரிமை கூட்டத் தொடரிலும் இங்கு இடம்பெற்ற போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணையை கோருகின்றோம். குறிப்பாக நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று nஐனிவாவில் இம்முறையும் கொண்டு வரப்படவுள்ள அந்தப் பிரேரணை வெற்றி பெறுவதற்கு ஆதரவு வழங்க வேண்டுமென சர்வதேச நாடுகளைக் கோரி வருகின்றோம். ஏனெனில் இங்கு கடந்த 1974ஆம் ஆண்டு மட்டுமல்ல தொடர்ந்து காலங்காலமாக இவ்வாறான சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு நீதி கிடைக்கவில்லை. இங்கு எந்தக்காலத்திலும் நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை இல்லை. இந்நிலையில் தற்போதும் எமது இனத்தினைப் பூண்டோடு அழிக்கின்ற நடவடிக்கைகளையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதற்கு தீர்க்கமான விசாரணைகள் நடத்துமொன்றோ அல்லது இனத்தின் விடுதலைக்கான தீர்வையோ இந்த அரசாங்கம் கொடுக்குமென்ற நம்பிக்கையும் இல்லை. சர்வதேச ரீதியாக நாடொன்றில் இழைக்கப்படுகின்ற போர்க்குற்றங்களுக்கு எதிராக தீர்மானம் எடுப்பதற்கு நீண்ட காலங்கள் எடுக்கிறது. ஆனால் இங்கு அவ்வாறில்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஏனெனில் எமது இனத்தை அழிக்கின்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே எமது இனத்தின் அடையாளங்களை அழிக்கின்ற அரசின் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சர்வதேசம் குறிப்பாக ஐ.நா.உதவ வேண்டும என வேண்டுகோள் விடுக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.