தமிழ் சீ.என்.என் தடைசெய்யப்பட்டமைக்கு புளொட் கண்டனம்-

Sithar-ploteதமிழ் சீ.என்.என் இணையத்தளம் இலங்கை மக்கள் பார்வையிடாத வகையில் தடைசெய்யப்பட்டமையை புளொட் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. 

இது தொடர்பில் புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,

தமிழ் சீ.என்.என் இணையத்தளம் இலங்கை மக்கள் பார்வையிடாத வகையில் தடைசெய்யப்பட்டமையானது ஊடக சுதந்திரத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்

மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்களை எல்லாம் தமிழ் சீ.என்.என் உடனுக்குடன் வெளிக்கொணர்ந்து வருவதுடன், செய்திகளாலும், கட்டுரைகள் மற்றும் ஆக்கங்களாலும் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றது.

தமிழ் மக்களின் உணர்வுகளையும், அவலங்களையும் பல நெருக்கடிமிக்க காலகட்டங்களில்கூட அஞ்சாது செய்திகளாகவும், கட்டுரைகள் மற்றும் ஆக்கங்களாகவும் திறம்பட வெளிப்படுத்தியதில் தமிழ் சீ.என்.என் இணையமும் பாரிய பங்கினை ஆற்றியுள்ளது.

இவ்வாறு பக்கச் சார்பில்லாமல் செயற்பட்டுவரும் தமிழ் சீ.என்.என் இணையத்தளத்தை இலங்கையில் பார்க்க முடியாதவாறு தடை செய்துள்ளமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.