அமெரிக்க விசேட தூதுவர் ரெப் மீது குற்றச்சாட்டு-

-யுத்த குற்றங்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் விசேட தூதுவர் ஸ்டிபன் ஜே ரெப், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து இலங்கை தொடர்பில் சர்வதேசத்திற்கு இரட்டை வேடம் போடுவதாக இலங்கை சட்டத்தரணிகள் அமைப்பின் ஒன்றியம் குற்றஞ்சாடடியுள்ளது. இந்நிலையில் நாட்டின் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து இவ்வாறான காட்டிச் கொடுப்புக்கு எதிராக செயற்பட வேண்டும் என ஒன்றியத்தின் இணைப்பாளர் ரவீந்து மனோஜ் தெரிவித்துள்ளார். ஸ்டிபன் ஜே ரெப் போன்றோர் இங்கு வந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து, அன்று புலிகளால் குண்டுகளால் பெற்றுக்கொள்ள முடியாததை இன்று பேனையினால் பெற்றுக்கொள்ள முனைகின்றனர். இதற்கு ஒருபோதும் இடம்கொடுக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மும்மொழிகளில் தேசிய அடையாள அட்டை-

அடுத்த மாதம் முதல் மும்மொழிகளையும் உள்ளடக்கியதாக தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அச்சிடப்பட்டு வெளியிடப்படும் தேசிய அடையாள அட்டை மும்மொழிகளை உள்ளடக்கியதாக விநியோகிக்கப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ் சரத்குமார தெரிவித்துள்ளார். கணினிமயப்படுத்தப்பட்ட புதிய முறைக்கமைய, இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 2016ஆம் ஆண்டளவில் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அடையாள அட்டையை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், இதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.எம்.எஸ் சரத்குமார மேலும் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சர் காலமானார்-

கலாசார மற்றும் சமய விவகார முன்னாள் பிரதியமைச்சரும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பேராசிரியர் ஏ.வி.சுரவீர தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார். ஊடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண ஆட்டோ சாரதிகளுக்கு புதிய வீதி ஒழுங்கு முறை-

northern-வடமாகாணத்தில் ஆட்டோ சாரதிகளுக்கான புதிய வீதி ஒழுங்கு முறைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலுள்ள மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்து அவர்களுக்கு நேர்மையான சேவையினை வழங்கும் பொருட்டே இந்த புதிய திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண உறுப்பினரின் ஒளிநாடா பொலிஸாரால் அபகரிப்பு-

LK policeதனது வீடியோ கமராவின் ஒளிநாடாவை முள்ளியவளையில் வைத்து பொலிஸாரால் கடந்த 12ஆம் திகதி அபகரித்துச் சென்றுவிட்டதாக வடமாகாணசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளியவளை கணுக்கேணி கிழக்கில் இலவச கண்ணாடி வழங்குவதற்கான பரிசோதனைகளை வவுனியாவிலுள்ள வைத்தியசாலை மற்றும் கொழும்பிலுள்ள விஷன் கெயாருடன் இணைந்து கடந்த ஞாயிறன்று மேற்கொண்டிருந்தோம். அதில் 150பேர் பங்குபற்றியதுடன் 93பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தோம். இதேவேளை, அழிந்துபோகின்ற எமது கலைகளை கட்டிக்காக்கும் நோக்கில் முள்ளியவளை முதலாம் வட்டாரத்தில் கலைநிகழ்ச்சியொன்றையும் அதே தினத்தில் நடத்தினோம். இந்த கலை நிகழ்வில் புனர்வாழ்வு பெற்றவர்களும் சிறுவர்களும் பங்குபற்றினர். இந்நிலையில், அங்கு வந்த பொலிஸார் நிகழ்ச்சியை நிறுத்துமாறு கோரினர். அதற்கு நான் இணங்காது நிகழ்ச்சியை தொடந்து நடத்தினேன். எனினும் அங்குவந்த இராணுவத்தினர் நிகழ்ச்சியை நடத்தவிடாது குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருந்தனர். இறுதியில் எனது வீடியோ கமராவின் ஒளிநாடாவை பொலிஸாரால் பறித்தெடுத்து சென்றுவிட்டனர். அது இன்னும் என்னிடம் கையளிக்கப்படவில்லை என்றார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் ஆவணப்படம் தயாரிக்க முயன்றதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்தன அதனையடுத்தே நாம் அந்த வீடியோ கமராவின் ஒளிநாடாவை கைப்பற்றினோம் என்று தெரிவித்துள்ளார்.