அரசுக்கு ஏற்றமாதிரியே குடிசன மதிப்பீடு-சுரேஷ் எம்.பி-

sureshஉண்மைகளை மூடிமறைத்து அரசாங்கத்திற்கு தேவையான விதத்திலேயே தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களத்தினால் குடிசன மதிப்பீடு வடக்கில் மேற்கொள்ளப்பட்டது. எனவே இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் சர்வதேச நிறுவனங்களை வெளியேற்றி சாட்சியமில்லாத யுத்தத்தை அரசாங்கமே நடத்தியது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். உண்மையில் யுத்தம் முடிந்தவுடன் மக்களை மீள்குடியேற்றி அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து அதன் பின்னர் தொகை மதிப்பு புள்ளி விபரத்தினை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் 4 வருடங்களுக்கு பின்னர் அவசர அவசரமாக கிராம அறிவுத்து அரசுக்கு தேவையான விதத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களில் உண்மை இல்லை. ஜெனிவாவை இலக்கு வைத்தும் சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கத்திலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. யுத்தம் நடந்த காலத்தில் படையினரால் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் காணாமல் போயுள்ளனர். தமது பிள்ளைகளை பெற்றோர் இழந்துள்ளனர். வெளிநாடுகளில் வாழும் பொதுமக்களின் உறவினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இம்மதிப்பீடு தொடர்பாக விபரங்களை பெறுவதற்காக வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவங்களில் அவ் விபரங்களை எழுதுவதற்கான இடங்கள் இல்லை. ஏன்? எதற்காக? இவ் விபரங்களை பெற்றுக் கொள்வது தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கமே உண்மைகளை மறைப்பதற்கு முயற்சிக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.